பொதுப்புத்தி

சிங்கள படைகளுடன் தொடர்பு உள்ளதாக புலித்தலைமையால் குற்றம் சாட்டப்பட்டு, Xக்கு தீர்பளிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிரான நிலைபாடுகளுக்கு, வழக்கம் போல பொதுப்புத்தி சார்ந்த எதிர்வினைகள், வலைப்பதிவுகள் உட்பட்ட எல்லா உடகங்களிலும் வந்துள்ளன. 'நமது விடுதலைப்போருக்கு துரோகியாக செயல்பட்டவன்; அதை பிரபாகரன் உறுதி செய்தாகி விட்டது; அவன் சாவதுதான் எல்லாவிதத்திலும் நியாயமானது' என்பதற்கு மேல் வேறு எதையுமே யோசிக்கத் தெரியாத, யோசிக்க விரும்பாத பொதுபுத்தியுடன் எதையும் உரையாட முடியாது. இந்த விஷயத்தில் விநோதம் என்னவென்றால், Xன் மரண தண்டனைக்கு எதிராக வலைப்பதிவுகளில் கருத்து சொல்ல வந்த சில ஈழத்தவர்கள் கூட, இந்த பொது புத்தியிலிருந்து விலகி எதையும் சொல்லமுடியவில்லை என்பதுதான். பிரபாகரனும் ஒரு காலத்தில் சிங்கள படைகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர்தேனே, சிங்களத்தின் அடியாளாக இந்திய படைகளை தாக்கியவர்தானே என்பதற்கு மேல் அவர்களிடமும் வேறு வாதங்கள் இல்லை. வேறு யாரிடமிருந்தும் எந்த வகை குரலும் ஒலித்ததாக எனக்கு கேட்கவில்லை.

வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. Xன் மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் ஈழ தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், சிங்கள படைகளுடன் தொடர்பு உடையவராக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும், பொட்டு அம்மானின் உளவுத்துறையின் கண்காணிப்பும், கண்டனமும் வந்து குவியுமா, விளம்பரமும் ஆதாயமும் வந்து குவியுமா என்பது மேலோட்டமான சிந்தனை கொண்ட அவர்களுக்கே மிக நன்றாக தெரியும். எதிராளியின் நேர்மையை அங்கீகரிக்கும் உன்னத மனநிலையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், குறைந்த பட்சம் பொருந்த புளுகும் தன்மைகூட இவர்களிடம் கிடையாது என்பதற்கான உதாரணம் இது

இந்த விஷயத்தில் தெளிவான நிலைபாடு எடுக்கும் அளவிற்கு, செய்திகளையும், ஆதாரங்கள் குறித்த கட்டுரைகளையும் நான் இன்னும் படிக்கவில்லை. பத்திரிகைச் செய்திகளின் மூலம் தெரிந்த அளவில் Xக்கு சிங்கள படைகளுடன் தொடர்பு இருப்பதாக நம்பவே காரணங்கள் அதிகமாக இருக்கிறது. அவரே அதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. எனது தெளிவின்மை, Xக்கு தாக்குதலில் எந்தவிதமான பங்கு, அதற்கான ஆதாரம் என்பதை பற்றி மட்டுமே இருக்கிறது. நிச்சயமாக மாஸ்டர் மைண்டாக தாக்குதலை திட்டமிட்டு, அதில் நேரடியாய் பங்கு பெற்ற காரியத்தை X செய்ததாக தெரியவில்லை. நேரடியாய் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரும் உயிருடன் இல்லை. திட்டமிடலின் பிராதான மூளையாக, இயக்கமாக இருந்து தாக்குதலை செயல்படுத்தியவர்களை புலிகள் நெருங்கப் போவதில்லை. அப்படியில்லாமல் ஏதோ வகையில் தொடர்பு கொண்டதான பங்கிற்கு, இந்த மரண தண்டனை நியாயமானதுதானா என்கிற விதத்தில்தான் எனக்கு கேள்வி இருக்கும்.

பத்மநாபா, சிரிசபாரத்னம் ஆகியோரின் ஆயிரக்கணக்கான இயக்கத் தோழர்களை ஒட்டுமொத்தமாக மரண தண்டனை ஆணையிட்ட தீர்ப்பும் எப்படி பரவலான, பொதுப்புத்தி சார்ந்த வரவேற்பை பெற்றது என்பதை பார்க்க வேண்டும். புலி ஊடகங்கள் சரித்திர புகழ்வாய்ந்த தீர்ப்பாக அதை கொண்டாடியது. பிரிந்து கிடந்த இயக்கங்களுக்கான பொறுப்பில் அந்த ஆயிரக்கணக்கான் பேரும் நேரடியாய் பங்கு கொண்டு அதில் ஈடுபட்டதாகவும், அனைவரையும் கொல்வது மிகவும் நியாயமானதாகவுமே புலி உருவாக்கிய பொதுபுத்தி கருதியது. ஆனால் இது குறித்து ஓரளவு தீவிரமாய் உள்ளே போய் ஆராய்பவருக்கு கூட, அந்த் இயக்கங்களில் இருந்த பெரும்பாலோனோர் புலிகளுக்கு நேரிடையாக எதிர்ப்பில்லாதவர்கள் என்பதும் ஏதோ ஒரு வகையில் ஈழ விடுதலைக்காக போராடியவர்கள் என்பதையும் அறியலாம். அவர்களுக்கு, அரசியல் நிலைபாடு சார்ந்து தமிழ் தேசியவாதிகள், தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் என்று பலரின் கரிசனம் அப்போது காணப்படவில்லை. இந்தியா போன்ற நாடாக இருந்திருந்தால், பின்னர் மேல் முறையிடப்பட்டு, செலவு செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வாதாடப்பட்டு விடுதலையாகும் அதிர்ஷ்டம் இருந்திருக்கலாம். (ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேல் முறையிட்டு விடுதலை ஆனவர்களை, தண்டனை குறைக்கப்பட்டவர்களை இங்கே நினைவு படுத்திக்கொள்ளலாம்) மீண்டும் நான் இங்கே குறிப்பிட விரும்பவது, புலி உருவாக்கும் பொதுபுத்தியின் பட்டறிவில் வெளிபடும், புலி தவிர்த்த அனைவருமே குற்றவாளிகளாகவும், அவர்களை கொல்வது மிகவும் நியாயமானதுதான் என்ற விமர்சனமற்ற ஆழ்ந்த நம்பிக்கை பற்றி மட்டுமே.

எனது கருத்தை சொல்லியாக வேண்டுமென்பதால் - இந்த எல்லாவற்றிலும் எனது நிலைபாடு தூக்குதண்டனை என்பதற்கே எதிரானது. அது ஆட்டோ சங்கருக்கும், வீரப்பனுக்கும், சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டவனுக்கும், 24பேரை ஒரே சமயத்தில் கொன்றவனுக்கும் சேர்த்து அது பொதுவானது; 'ஒரு நிரபராதி கொல்லப்பட்டு விடக்கூடாது' என்ற வாதத்தின் அடிப்படையில் வரும் தூக்குதண்டனை எதிர்ப்பு வாதம் அல்ல; எந்த வகை குற்றம் நிறுவப்படுதலுக்கும், ஒரு உயிரை அரசாங்கம் என்ற நிறுவனமோ, அரசாங்கமாக விரும்பும் நிறுவனமோ, மிகுந்த இயந்திரத்தனமான திட்டமிடுதலுடன் மிக நிதானமாக செய்யப்படும் அங்கீகரிக்கப் பட்ட கொலையை செய்வது, ஒரு நாகரீக சமுதாயத்தில் நடக்க முடியாது என்ற கருத்தின் அடிப்படையில் மரண தண்டனையை எதிர்க்கிறேன். (ஈழத்தமிழ் சமுதாயம் அநாகரிகமான சமுதாயம் என்று தங்களையே சொல்லிக்கொள்பவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை) அந்த பார்வையில் கமலின் 'விருமாண்டியை', அவர் பிரசாரித்தது போல், தூக்குதண்டனைக்கு எதிரான ஒரு படமாக என்னால் பார்க்க முடியவில்லை. குற்றம் செய்யாமல் மாட்டிகொண்ட கமலின் நிரபராதி பாத்திரம, தூக்கிலிடப்படுவதை பிரச்சனையாக பார்ப்பது அல்ல, தூக்குதண்டனைக்கு எதிரான பிரச்சாரம்; கமல் தூக்கு தண்டனையை எதிர்த்து படமெடுக்க நினைத்தால், அவர் பசுபதியின் பாத்திரம் தூக்கிலிடப்படுவாதாகவும், அதற்கு எதிராகவும் என்பது மாதிரி கதை நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் பசுபதி கொல்லப்படுவதுதான் சரி என்கிற நியாயத்துடன் அமைந்த திரைக்கதையை, தூக்கு தண்டனைக்கு எதிரானதாக என்னால் பார்க்க முடியவில்லை. (படத்தில் வேறு பல பிரச்சனைகள் உண்டு எனினும் இது முதன்மையானது.)

இந்தப் பார்வையில் எனது நிலைபாடு, எல்லாவகை தூக்கு தண்டனையையும் எதிர்ப்பதுபோல், Xக்கான மரண தண்டனையையும் எதிர்க்கிறது. இவ்வாறான, எல்லாவகை குற்றம் நிறுவப்பட்டவர்களுக்குமான மரணதண்டனை எதிர்ப்பை பற்றி பேசுவது இந்த பதிவின் நோக்கமில்லை. விரிவாக பேச இயலாதது மட்டுமின்றி, அவ்வாறு பேசுவது இந்த குறிப்பிட்ட பிரச்சனையை திசை திருப்பவும் செய்யும். ஏனெனில் X மீதான மரண தண்டனைக்கு எதிரான விவாதம், என்னை மாதிரி நட்டு கழண்ட சில கேஸ்களின் ஒட்டுமொத்த தூக்கு தண்டனைக்கான எதிர்ப்புடன் மட்டும் தொடர்புடையது அல்ல. ஐரோப்பிய கூட்டமைப்பு போன்ற, மனித நாகரீகத்தின் முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்துவிட்ட ஒரு குமுகாயமாக நாம் இல்லாத யதார்த்தத்தை ஒப்புகொண்டே, நாம் இந்த விஷயத்தை அணுக வேண்டியிருக்கிறது.

அவ்வாறாக மரணதண்டனையின் இருப்பை அங்கீகரித்துக் கொண்டே, நாம் இந்த விஷயத்தை அணுகும் போதே, Xக்கு இந்த தாக்குதலில் எந்த வகையில் பங்கு, அதன் ஈடுபாடு மற்றும் தீவிரம் என்ன என்பதை பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. முதன்மை குற்றவாளிகளை பிடிக்க இயலாத கையாலாகத்தனத்தை இவரை கொல்வதன் மூலம், நாம் தணித்து மனச்சமாதானம் அடைய விரும்புகிறோமா என்றும் கேட்டுக்கொள்ளலாம். அந்த வகையில் Xஐ கொல்வதன் நியாயம் குறித்து எனக்கு தெளிவான கருத்து எதுவும் இல்லை. ஆனால் எந்த வித விவாதத்திற்கும் தயாராக இல்லாத மனங்கள், கொல்வது மட்டுமே தர்மம் என்றும், அதில் இருந்து விலகி சிந்திப்பவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்று நினைக்கும் ஒரு சூழலில், இந்த தெளிவின்மையை முன்வைப்பதும் எனக்கான அரசியலாக இருக்கிறது.

இவர்கள் வெளிப்படுத்தும் கூட்டு ஹிஸ்டீரியாவின் கொடூரத்தை அறிய, நாம் இதே போல குற்றம் சாட்டப்பட்டு, பங்கர்களில் உடல்ரீதியில் கொடுமையாய் சித்ரவதை செய்யப்பட்டு, பின்பு மிக ஒட்டையான ஆதாரங்கள் மற்றும் பொய்யாக தயாரிக்கப் பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அது நன்றாக தெரிந்தும் மரண தண்டனை அளிக்கப் பட்டு, சாவு தலைக்கு மேல் தொங்கும் பயங்கரத்துடன் மீண்டும் பங்கர் ஜெயில் வாழ்க்கை வாழ்ந்து, இறுதியில் அதிர்ஷ்டவசமாக தப்பிய X1ன் கதையை மிக விரிவாக அறிய வேண்டும். X1 என்ற பலரது அன்பிற்குரிய பேராசிரியரின் மீதான ஆதாரம் ஒன்றே ஒன்றுதான்; இந்த 'ஆதாரங்களின்' அடிப்படையில் X1 கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, குடும்ப அமைதி எல்லாவற்றையும் இழந்து, மரணதண்டனை பயமுறுத்த சில ஆண்டுகள் வாழ நேர்ந்து, இறுதி கட்டத்தில் உயிர் தப்ப நேர்ந்தது. இதை இந்த சந்தர்ப்பத்தில் சொல்ல ஒரே ஒரு காரணம்தான் உண்டு. மேலே பேசியுள்ள பொதுப்புத்தி எல்லாவகை புலி ஊடகங்களிலும் X1 பற்றியும், அவருக்கான தண்டனை பற்றியும் எப்படி வெளிப்பட்டது என்பதுதான். இப்போது X பற்றி வெளிபடும் அதே குரல்கள்தான் X1 பற்றியும் வெளிபட்டது; 'ஒரு கல்லூரி பேராசிரியரே இலங்கை அரசுக்கு துணை போவது' பற்றியும் கவலை கொண்டது; X1யும் கொல்வது சரி என்ற தன் கருத்தில் எந்த பரிசீலனைக்கும் அது இடம் அளிக்கவில்லை. X1ன் உதாரணம், சமூகத்தில் மதிப்பு பெற்ற ஒருவரின் கதி பற்றியது. அவ்வாறு இல்லாமல் இலங்கை முழுவதிலும் அநியாயமாய் சிறையில் வாடும் அப்பாவிகளை (சிங்களர் தமிழர்கள் உட்பட) பற்றி பேசுவது எனது சக்தியை, இந்த வலைப்பதிவின் சாத்தியதை தாண்டியது

இந்த பொதுபுத்தியை மீறி சிந்திக்கவும், பரிசீலிக்கவும், அதை வெளிப்படையாய் பேசவும் மிகுந்த மனத்துணிவு வேண்டும்; பாயக்கூடிய வசைகள், தேசத்துரோக பட்டங்கள், அதிகாரத்தின் மிரட்டல் இதை மீறி செயல்படவும் வேண்டும்; இந்த நேர்மையால் பத்து பைசா பயன் இருக்காது; மாறாக விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்குமானதாக திரிக்கப்படும் அவதூறு பற்றிய கவலையும் இருக்க கூடாது; அந்த வகையில் செயல்படும் சிறுபான்மை அறிவுஜீவிகளை நான் மிகவும் மதிக்கிறேன்.

ஆனால் இவ்வாறான நிலைபாடுகளையும் ஒற்றை பரிமாணத்தில் சுயவிமர்சனமின்றி எடுப்பதும் ஆபத்தானதாகவே எனக்கு தெரிகிறது. பொதுபுத்தி நமக்கு எதிராளியாகும் கட்டாயத்தில், சுயவிமர்சனமற்ற ஒரு சுழலில் மாட்டிக்கொள்ளும் அபாயமும் இருப்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியுள்ளது. அத்தகைய விமர்சனத்தை Xல் விவகாரத்தில் நான் காண நேராததால் இதையும் சொல்ல வேண்டியிருக்கிறது; எனது கருத்தும் - X1 பற்றிய பிரச்சனையில் இருப்பது போல் - இந்த பிரச்சனையில் தெளிவில்லாமல் இருப்பதாகவும் முன்வைக்க வேண்டியுள்ளது.

- நன்றி ரோசாவசந்த்

எல்லா Xகளுக்கும்

7 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

பலருடைய ஹிப்போக்ரஸி முகங்கள் கிழிந்து தொங்குகின்றன

வெல்டன்

9:45 PM  
Blogger மு. மயூரன் மொழிந்தது...

தமிழ் தேசியம் இக்கட்டான சூழலை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு ஆரோக்கியமான பதிவு.

விடுதலைப்புலிகளால் விதிக்கப்பட்ட, கூட்டு, தனிநபர் மரண தண்டனைகளால் தமிழ் தேசியம் பெற்றுக்கொண்டதை விட இழந்ததுதான் அதிகம்.

விடுதலைப்புலிகள் மட்டுமல்ல, மிதவாத கட்சிகள் தொடக்கம் இடதுசாரி கருத்துப்போக்குக்கொண்டிருந்ததாக கருதப்படும் ஈ பீ ஆர் எல் எஃப், புளொட் உட்பட எல்லோரும் இப்படியான "சந்தேக", "மரணதண்டனை" அரசியலையே தமது போராட்ட வழிநெடுகிலும் நடத்திவந்திருக்கிறார்கள்.

பிரபாகரனையும் புலிகளையும் மட்டுமே குற்றஞ்சாட்ட முடியாது. எல்லா இயக்கங்களும் குற்றஞ்சாட்டப்படவேண்டியவை. அதற்காக பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் குற்றஞ்சாட்டாமல் மவுனமாக இருக்கவும் தேவையில்லை.

ராணுவப்பலம் எப்படி இருக்கிறதஓ என்னவோ, தமிழ் தேசிய போரட்டம் மிகவும் பலவீனப்பட்டுப்போயிருப்பதை அச்சம் சூழ உணரத்தொடங்குகிறேன்.

போராட்டத்தின் வேறு வழிமுறைகள், சாத்தியங்கள் பற்றி சிந்திக்கத்தலைப்படவேண்டியவனாகிறேன்.

அடுத்துவரும் காலங்களில் எல்லா ஈழத்தமிழர்களதும் மனநிலை இவ்வாறுதான் மாறப்போகிறதோ என்று பயப்படுகிறேன்.

தீவிர விமர்சனங்கள், நெறிப்படுத்தல்கள் எல்லாப்பக்கங்களிலிருந்தும் வரவேண்டியிருக்கிறது.

3:44 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

தொடரும் மரண தண்டனைகள்
எந்த வித விசாரணையோ நீதிமன்றமோ இல்லாத கட்டைப்பஞ்சாயத்து மரண தண்டனை
இவர்கள்தான் ஈழத்தை ஆளப்போகிறார்களா?


மகாஜனக்கல்லூரியின் முன்னாள் அதிபர் புலிகளால் படுகொலை. லண்டனில் அக்கல்லூரி பழையமாணவர்களின் கலாச்சார விழா

-தரன்

புலிகளின் கொலைக்கலாச்சாரம் பாடசாலை முன்னாள் இந்நாள் அதிபர்களை விட்டு வைத்ததில்லை. கல்விமான்களை அழித்தொழித்து தமிழ்சமூகத்தின் ஆணிவேரான கல்வியினை குழிதோண்டிப்புதைப்பதில் புலிகள் ஒருபோதும் பின்னிற்பபதில்லை. ஏ9 பாதையை திறக்க வைப்பதற்காக குடாநாட்டு மாணவர்களை பாடசாலை செல்லவிடாமல் பகிஷ்கரிப்பு செய்த புலிகள் கல்விமான்கள், பாதிரியார்கள், பொதுமக்கள் ஆகியோரின் எதிர்ப்பினால் போராட்டத்தை கைவிட்டது மட்டுமல்லாமல் முன்னாள் அதிபரை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

யாழ் தௌ;ளிப்பளை மகாஜனாக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், சமூக சேவைகள் அமைச்சின் யாழ் மாவட்ட இணைப்பாளருமான கதிர்காமத்தம்பி நாகராசா (வயது 68), இன்று காலை 7.30 மணியளவில், அவரது மல்லாகம் இல்லத்திற்கு முன்பாக வைத்து புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி உள்ளார்.

கடந்த 1985ம் ஆண்டு தொடக்கம் 1998ம் ஆண்டு வரையும் தௌ;ளிப்பளை மகாஜனாக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய இவர், பின்னர் கடந்த 2000ம் ஆண்டு இந்து காலச்சார அலுவல்கள் அமைச்சின் இணைப்பாளராகவும், தற்பொழுது சமூக சேவைகள் அமைச்சின் இணைப்பாளராகவும் கடமையாற்றி வந்தார்.

இன்று காலை இவர் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட அதேவேளை லண்டனில் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர்களினால் நடாத்தப்படும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. முன்னாள் அதிபரின் படுகொலையைக் கண்டித்து எதுவித கண்டனமும் வருத்தமும் வெளிவராமல் இருப்பது இந்நிகழ்ச்சியை நடாத்துபவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்தி நிற்கின்றனர்.

90களில் நெருக்கடியான காலகட்டங்களில் கூட மகாஜனக்கல்லூரியை தற்காலிகமாக பண்டத்தரிப்பு கேர்ள்ஸ் கல்லூரியிலும், கோண்டாவில் நிரு ரிய+ட்டரியிலும், மருதனாமடம் ஆகிய இடங்களில் தற்காலிமாக நடைபெற்று வந்த போது நாகராஜா அவர்கள் அதிபராக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகள் என்கிற போர்வையில் தமிழர்களைக் கொல்வதை நிறுத்தப்படவேண்டும், கடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சத்தியாக்கிரகம் செய்கின்றனர். ஆனால் புலிகள் தமிழர்களைக் கொல்வதைப் பற்றி எப்போதேயாயினும் வாய் திறந்திருக்கிறார்களா?. இராணுவம் அத்துமீறி செயற்படுகிறது மட்டும் தமிழ்மக்களுக்கு எதிரானது என்றால் கல்விமான்களை புலிகள் தேடித்தேடி வேட்டையாடுவதை எப்படி நியாயப்படுத்தப் போகின்றனர். தமிழ்ச்சமூகம் குடாநாட்டில் நெருக்கடி நிலமைகளுக்குள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கையில் புலிகள் தமது கொலைக்கலாச்சாரத்தை மட்டும் நிறுத்தப்போவதில்லை என்பதை உணர்த்தி நிற்கும் முன்னாள் மகாஜனா அதிபர் மீதான படுகொலைக்கு லண்டனில் கலாச்சார விழா நடாத்தியிருக்கும் மகாஜனா கல்லூரியின் பழைய மாணவர்கள் என்ன சொல்லப்போகின்றனர்?.

thenee.com

11:34 AM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

ஒருவேளை எனது மற்ற பதிவுகளை நீங்கள் படிக்க நேர்ந்திருந்தால் நான் புலிகளை தீவிரமாக எதிர்ப்பவன், குறிப்பாக அவர்களின் படுகொலைகளை நியாயப்படுத்தும் தர்க்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளது உங்களுக்கு ஒருவேளை தெரியவரலாம். நீங்கள் விஷயமறிந்துதான் எழுத வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தவில்லை. ஒரு தகவலுக்காக!

உங்கள் விளம்பரத்திற்கு நன்றி.

12:52 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

மரணதண்டனையை எதிர்த்து ஜால்ரா அடித்த கூட்டம் எங்கே?

7:04 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

//ROSAVASANTH said...

ஒருவேளை எனது மற்ற பதிவுகளை நீங்கள் படிக்க நேர்ந்திருந்தால் நான் புலிகளை தீவிரமாக எதிர்ப்பவன், குறிப்பாக அவர்களின் படுகொலைகளை நியாயப்படுத்தும் தர்க்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளது உங்களுக்கு ஒருவேளை தெரியவரலாம். நீங்கள் விஷயமறிந்துதான் எழுத வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தவில்லை. ஒரு தகவலுக்காக!

உங்கள் விளம்பரத்திற்கு நன்றி. //

Can you please display the links here?
Thanks

5:02 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

ரோசா அவர்கள் லிங்க் அனுப்பியும் நீங்கள் வெளியிடாமல் இருக்கிறீர்களா?

9:09 AM  

Post a Comment

<< முகப்பு