துரத்தும் இறந்தகாலமும் அச்சுறுத்தும் நிகழ்காலமும்

வாஸந்தி (தீராநதி)

இறந்த காலமும் நிகழ்காலமும் வரலாற்றுப் புத்தகத்தின் பின்னிப்பிணைந்த சுழல் பக்கங்கள். நாம் வசிக்கும் புவி கர்ம பூமி என்பதால், வரலாற்றில் ஏற்படும் சுழற்சி தனி நபரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளி உலகத்து அரசியல், நமது அடுக்களைக்குள் நுழைந்துவிட்ட காலகட்டத்தில், தனி மனிதனின் வாழ்வு, அரசியல் நிகழ்வுகளால் சலனப்படாமல் எப்படி இருக்க முடியும்? கடந்த காலத்து நெஞ்சில் பதிந்துபோன நினைவுகளை நான் அசைபோடும் தருணத்தில், இன்று கிடைக்கும் சில சேதிகள் அந்த நினைவுகளோடு சம்பந்தப்படுகையில், பக்கங்கள் வெகு வேகமாகச் சுழன்று இடையில் நழுவிய காலம் பனியாய்க் கரைந்து, இன்றுடன் சங்கமித்துப் போகிறது. மற்ற நினைவுகள் ஒதுங்கி நிற்க இன்று கிடைத்த சேதியும் அது சம்பந்தப்பட்ட நினைவுகளுமே மனத்தை ஆட்கொள்ளுகின்றன.

நார்வே நாட்டில் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் நான் தங்கிப் படித்த நாட்கள் இன்று மீண்டும் மிகத் தாபத்துடன் நினைவுக்கு வருகின்றன. கண்களில் நீரை வரவழைக்கும் நினைவுகள் அவை. அமைதி வகுப்பு ஆரம்பித்த அன்று ஆசிரியர் கேட்ட கேள்விக்கு என் சக மாணவரும் அருமை நண்பருமான இலங்கைத் தமிழர் கேதீஷ் லோகநாதன் சொன்ன விடை, பளிச்சென்று செவியில் ஒலிக்கின்றன. அவரது ஒல்லியான நெருங்கலான உருவம் எதிரில் நிற்கிறது. "இன்று காலை எழுந்ததும் உங்களைச் சந்தோஷப்படுத்திய விஷயம் என்ன?" என்று ஆசிரியர் கேட்டார். சாமான்ய சராசரி வாழ்வு வாழ்ந்த என்னைப் போன்றோர், ஆள் ஆளுக்கு மிக சாமான்ய பதில்களைச் சொன்னோம். கே;தீஷ் சொன்னார்: நான் இன்னமும் ஜீவித்திருக்கிறேன் என்பது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவரது நாவிலிருந்து வந்த அந்த எளிய வார்த்தைகள் விசேஷ அர்த்தம் பொதிந்தவை என்று உணர்ந்த வகுப்பில், திடீரென்று மூச்சுக் காற்று கனத்துப் போயிற்று.

சென்ற மாதம் கொழும்பில் இலங்கை இனப்பிரச்சினைக்கு சாமாதான வழிமுறைகளைத் தேடும் பணியில் மிகத் தீவிரமாக இருந்த கேதீஷ், தமிழீழ விடுதலைப்புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். சேதி அறிந்து நான் எத்தனைப் பதறிப்போனேன் என்று சொல்ல வார்த்தைகள் இல்லை. கூடப் பிறந்த சகோதரனை இழந்ததுபோல, எனக்குத் துக்கம் ஏற்படுகிறது. நடந்துபோன அக்கிரமத்துக்கு யாராவது பதில் சொல்வார்களா என்று தவிக்கிறேன்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக எனக்குக் கேதீஷ் பழக்கம். முதல் முதலில் இலங்கைத் தமிழர் இனப்பிரச்னையை எனக்கு மிகத் துல்லியமாக, அறிவார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் விளங்க வைத்தவர் அவர். ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பைச் சேர்ந்தவராக அப்போது அவர் இருந்தாலும், தமிழர் உரிமைக்கான போராட்டத்தில் பயங்கரவாதம் தலையெடுத்ததும், இனமே இனத்தை அழிக்கும் போக்கை அதிர்ச்சி தரும் விதத்தில் புலிகள் அமைப்பு கடைப்பிடிக்க ஆரம்பித்ததும், ஒரு புதிய பாசிஸத்தை தமிழ் மக்கள் தனது இனத்தவரிடமே எதிர்கொள்ளவேண்டிய திசைதிருப்பலில் அவர் நிலைகுலைந்து போயிருந்தார். பல்வேறு தரப்பிலிருந்து எனக்குக் கிடைத்த, நான் எனது நாவலுக்காகச் சேகரித்த தகவல்கள் அவரது கவலைக்கான காரணங்களை உறுதிப்படுத்தின.

இடதுசாரி கொள்கை கொண்ட கேதீஸிற்க்கும் எனக்கும் கருத்தொற்றுமை மிக இயல்பாக நிகழ்ந்தது. அவரது கவலைகள் என்னையும் தொற்றிக்கொண்டன. ஆஸ்லோவில் அவரைச் சந்திப்பேன் என்று நான் நினைத்திருக்கவில்லை. அங்கு சென்றபிறகுதான் சுமார் 9000 இலங்கைத் தமிழ் வாலிபர்களும் யுவதிகளும் நார்வேயில் அடைக்கலம் தேடி வந்து வாழ்வது தெரிந்தது. அவர்கள் அகதிகள் அந்தஸ்த்தில் வாழ்ந்தாலும், அநேகமாக எல்லோரும் அவர்களுக்கு வெளிநாடு செல்ல டிக்கெட் எடுத்து அனுப்பக்கூடிய வசதி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். இனப்பிரச்னை இலங்கையில் தீவிரமானதும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எங்காவது உயிருக்கு அபாயம் இல்லாமல் பிழைத்துக் கொள்ளட்டும் என்று அனுப்பத் தலைப்பட்டார்கள். அநேகம் பேர் புலிகள் பிடியிலிருந்து தப்பவைக்கவே, புலிகள் படையில் கட்டாயமாகச் சேர்க்கப்படுவதிலிருந்து விடுவிக்கவே இந்த முயற்சி எடுத்தார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

அப்படி வெளியில் வந்துவிட்டவர்களும் புலிகளுக்குப் பயந்து வாழ்ந்தார்கள். போராட்டக் களத்திலிருந்து விலகிச் சென்ற காரணத்துக்காகப் புலிகளுக்கு 'அபராதத் தொகையைக் கட்டாயமாகச் செலுத்தவேண்டியிருந்தது. அதனை செலுத்தத் தவறினால் அவர்களது பெற்றோர்களுக்கு ஆபத்தாகலாம் என்கிற அச்சம் இருந்தது. எல்லோருக்கும் நார்வே அரசு ஓரளவுக்கு உதவித் தொகை அளித்தாலும் வேலை கிடைக்கவில்லை என்றால், அதில் சமாளிப்பது கஷ்டம். அதனால் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பத்து பதினைந்து இளைஞர்கள் யுவதிகள் சேர்ந்து வாழ்ந்தார்கள். பலர் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் மாணவர்களாகச் சேர்ந்திருந்தார்கள். நான் சேர்ந்த கோடைப்பள்ளியில் (1988) எனது வகுப்பில் கேதீஸ_ம் அவரது மனைவி பவானியும் கவிஞர் ஜெயபாலனும் இருந்தார்கள். என்னைப் போல மாணவர் விடுதியில் தங்கியிருந்தார்கள். அவர்களை அங்கு சந்தித்ததும் மிக நெருங்கிய உறவினர்களைச் சந்தித்ததுபோல எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. போராளி அமைப்பிலிருந்து விலகிவிட்டதாகக் கேதீஸ்; சொன்னார்.

தனது போராட்டத்தை வேறு தளத்திலிருந்து செயல்படுத்தவேண்டும் என்று முடிவெடுத்திருந்தார். நல்ல படிப்பும், ஆங்கிலத்தில் அறிவார்த்த தர்க்கபூர்வமான வாதத்திறனும் கொண்டவர். ஜனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர். அவர் எடுத்த முடிவு மிகச் சரியானது என்று நான் நினைத்தேன். கேதீஸ்_ம் மிக மென்மையான சுபாவம் கொண்ட பவானியும் நார்வேயில் எனது நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். நார்வேயிலிருந்து இலங்கை திரும்பியதும் இனப்பிரச்னைகள், அவை உருவாகும் காரணிகள், அவற்றை எதிர்கொள்ளவேண்டிய வியூகங்கள் ஆகியவைப் பற்றின ஆய்வில் (புலிகளால் கொல்லப்பட்ட) நீலன் திருச்செல்வனின் ஆய்வு மையத்தில் கேதீஸ்; பணியாற்றி வந்தார். இனப்பிரச்னை தீர்வுக்கான அனைத்து கட்சிப் பிரதிநித்துவ குழுவிற்கு சமீப காலமாகப் பொதுச் செயலராக இருந்தார். புலிகளுக்கு அவரைத் தமிழினத் துரோகி என்று முத்திரைக் குத்த இவை போதுமானவை. ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றார்கள்.

இருபத்தைந்து ஆண்டுகளாகப் புலிகளால் தனக்கு ஆபத்து என்று கேதீஸ்; உணர்ந்திருந்தார். எனவே தமிழர் பிரச்னை தீராத நிலையில், குழந்தைகள் பெறுவது பொறுப்பற்றது என்று தம்பதிகள் முடிவு செய்திருந்தார்கள். குழந்தைகள் இருந்திருந்தால் குண்டுபட்டு கேதீஸ்; இறந்த தருணத்தின் தாக்கம் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். பல ஜென்மங்களுக்கு அசுவத்தாமனின் கோபவெறியுடன் புவியில் அலையவைத்திருக்கும்... நமக்குத்தான் எல்லாம் மறந்துவிட்டது. கவலைப்படவேண்டிய விஷயம் எது என்பதுகூட புரியாமல் போய்விட்டது.

இலங்கை இனப் பிரச்னையைக் கூர்ந்து அக்கறையுடன் கவனித்து வரும் எல்லா பத்திரிகைக்காரர்களுக்கும் கேதீஷைத் தெரியாமல் இருக்கமுடியாது. இலங்கைத் தமிழர்களுக்காகக் 'கண்ணீர்' வடிக்கும் நமது தமிழகத்து அரசியல்வாதிகளும், புலிகளைப் பற்றின செய்திகளை மாய்ந்து மாய்ந்து எழுதும் நமது செய்தி ஊடகங்களும் அந்த அக்கிரமக் கொலையைப் பற்றி வாயே திறக்கவில்லை; பலவருடங்களாக புலிகள் செய்துவரும் குற்றங்களைப் பற்றி வாயே திறக்காதது போல...அடைக்கலம் தந்த மண்ணுக்குத் துரோகம் இழைக்கிறோம் என்கிற கூச்சம் இல்லாமல், பாரத மண்ணில், தமிழ் மண்ணில் முன்னாள் இந்தியப் பிரதமரைக் கொன்று, நமது சட்டத்தை சந்திக்கத் துணிச்சல் இல்லாமல் வீர சாகசப் போர்வைக்குள் மறைத்துக் கொண்டவர்கள் அவர்கள் என்பதுகூட, இப்போது தமிழர்களுக்கு நினைவில்லாமல் போய்விட்டது.

இலங்கை வாழ் தமிழர்கள், புலிகளின் எந்தச் செயலையும் விமர்சிக்கும் உரிமை இழந்து வாய் திறக்காமல் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. வாய் திறந்தால் ஆபத்து என்பதைப் புலிகள் மிகத் தெளிவாகக் காட்டிவந்திருக்கிறார்கள். ஆனால், கடல் தாண்டி தமிழ் நாட்டில் இருக்கும் நாம் ஏன் உண்மை பேசத் தயங்குகிறோம் என்பது எனக்கு விளங்காத ஒரு மர்மம். அரசியல் வாதிகள் ஆரம்பகாலம் தொட்டு இலங்கைப் பிரச்சினையை அரசியலாக்கி அதில் லாபம் தேடுகிறார்கள். இது எனக்கு வியப்பை அளிக்கவில்லை. ஆனால், பத்திரிகை தர்மம் என்பது இருப்பதை மறந்தோ அல்லது புலிகள் மிக நேர்த்தியாகச் செய்யும் பிரச்சாரத்திலோ மூளைச்சலவை ஆனதுபோல, தமிழ் பத்திரிகைகள் புலிகள் தலைவர் பிரபாகரனை கதாநாயகப் புருஷனாக வர்ணிப்பதும், பிரமிப்பதும் பூஜிப்பதும் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. புலிகள் விரிக்கும் வலையின் சக்தியோ அது என்று அச்சமேற்படுகிறது.

வால்டர் லிப்மன் என்ற பிரபல அமெரிக்கப் பத்திரிகையாளர், செய்தி என்பது முழுமையாக சார்பற்றதாக இருக்கமுடியாது என்று சொல்வார். என்பார். அதாவது நாம் என்ன பார்க்க நினைக்கிறோமோ அதைத்தான் பார்க்கிறோம். எதைக் கேட்க நினைக்கிறோமோ அதைத்தான் கேட்கிறோம். அது அரசியலோ அல்லது ஒரு நபரைப் பற்றின அபிப்பிராயமோ அடிமனத்து கலாச்சார வெளிப்பாடாகவே அதைக் கொள்ளவேண்டும்.

சமீப காலமாகத் தமிழ் மீடியாக்களில் இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பற்றியும் விடுதலைப்புலிகள், அவர்களது தலைவர் பிரபாகரன் பற்றியும் வரும் செய்திகளும் தகவல்களும், பிரசுரிக்கப்படும் பிரபலஸ்தர்களின் எண்ணங்களும் அத்தகைய வெளிப்பாடாகவே தோன்றுகிறது. சில அரசியல்வாதிகளின் பேச்சு எதிர்பார்த்ததுபோலவே உணர்ச்சிவசப்பட்டு, பல சமயங்களில் அதீத எல்லையைத் தொடுகிறது. மொழி என்கிற பிணைப்பு எப்பவுமே உணர்ச்சியைத் தூண்டும் சக்தி கொண்டது. கண்ணையும் மறைக்கவல்லது. இலங்கை இனப் பிரச்சினையைப் பல ஆண்டுகளாகத் தீவிரமாகக் கவனித்து, பல போராளிக் கும்பல்களுடன் நேரிடையாகத் தொடர்பு கொண்டு, களப்பணிமூலம் பல உள் விவரங்களை அறிந்து இப்போதுள்ள அரசியல் நிலையைக் கண்டு வருந்தும், பதைக்கும், பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாட்டுப் பத்திரிகைகளின் தான்தோன்றித்தனமான, பொறுப்பற்ற பேச்சும் எழுத்தும் அச்சத்தைத் தருகிறது. .

ஒரு சில காலம் போர் நிறுத்தம் என்பது நடந்ததே செயற்கையானது என்பது போல மீண்டும் போர் மேகங்கள் இலங்கையில் சூழ்ந்திருக்கின்றன. சில கசப்பான யதார்த்தங்களை நாம் மனதில் கொள்ளவேண்டும். இனப்பிரச்னை துவங்கிய காலத்தையும், தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், போராட்டத்தின் நியாயமான காரணங்களையும் இப்போது ஆராய்வது வீண். ஆயுதப் போராட்டமாக அது மாறியதுமே அதன் சுழி மாறிவிட்டது. இன்று இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தம் அது. 'போர் நிறுத்த' காலத்தில் புலிகள் வன்முறைச் செயல்களில் ஈடுபட ஆரம்பிக்க... இலங்கை அரசு ஆவேசமாக ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டது. மக்களும் நாங்களும் வேறு அல்ல என்று புலிகள் சொன்னாலும், அதில் அப்பாவித் தமிழ் மக்கள்தான் பலியாகிறார்கள். செஞ்சோலை நிகழ்வு அதைத்தான் சொல்கிறது. இலங்கை ராணுவம் வீசிய குண்டில் முல்லைத்தீவு செஞ்சோலை அநாதை இல்லத்து அறுபத்தொரு குழந்தைகள் மாண்டார்கள் என்பதைக்கேட்டு நாம் எல்லோரும் பதைத்தோம். வன்மையாகக் கண்டித்தோம். இலங்கை அரசு அதற்கு எந்த விளக்கம் அளித்தாலும் அது அத்துமீறல், அராஜகம் என்பதில் இரு வேறு கருத்து இருக்கமுடியாது.

அந்தக் குழந்தைகளின் சாவுக்காக, புலிகள் தலைவர் கண்ணீர் விட்டார் என்கிற செய்தி, மிக நெகிழ்ச்சியுடன் தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டது. அவரது மென்மையான இதயத்தின் அடையாளமாக. அதே தலைவரின் ஆணையால் பச்சிளம் தமிழ்ச் சிறுவர்கள் சிறுமிகள் இன்றும் கட்டாயமாக புலிகள் படையில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதும், அவர்களை அனுப்பப் பெற்றோர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதும், அதற்கு பயந்துகொண்டே அகதிகளின் வருகை அதிகரிப்பதும், யார் இதயத்தையும் இங்கு ஏன் தொடவில்லை? இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் இலங்கை சென்றிருந்தபோது (போர் நிறுத்த காலம்), மட்டக்களப்பில் ஒரு முஸ்லிம் பெரியவர் ஒரு 'முஸ்லிம் பொடியனை'ப் புலிகள் கடத்திக் கொண்டு போய்விட்டதாகச் சொன்னார். நிறைய பொடியன்கள் காணாமல் போவதாகச் சொன்னார். நாங்கள் எத்தனை நாள் சும்மா இருப்போம்? நாங்களும் துவக்கை எடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. வெளியில் எங்களுக்கு உதவ ஆள் இருக்கிறார்கள் என்றார். உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுவதாகத் தோன்றினாலும் அங்கு பயங்கரவாத இயக்கங்கள் செயல்படத் தயாராக இருக்கும் நிலையில் இது ஆபத்தான சமிக்ஞையாக எனக்குத் தோன்றிற்று. அல்காயிதாவுக்கு எதிரி அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் என்றோ, காஷ்மீர் பிரச்னையால் லஷ்கர் _இ_ தொய்பாவுக்கு இந்தியா என்றோ, புலிகள் மெத்தனமாக இருக்கமுடியாது. பாகிஸ்தான், இலங்கை அரசுக்கு ராணுவ ஆயுத உதவி அளிக்கத் துவங்கிவிட்டது. புலிகளுக்கு அது தெரியும். பாகிஸ்தான் தூதரைக் கொல்ல கொழும்பில் குறி வைத்த அதன் முயற்சி தவறிவிட்டது மயிரிழையில்.

செஞ்சோலை சம்பவம் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன் கேதீஸ்; கொழும்பில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். புலிகளின் வன்முறைப் போக்கை எதிர்த்ததாலேயே அவர் 'விரோதி' என்று அகற்றப்பட்டார். பல சிங்களத் தலைவர்கள் ராணுவ அதிகாரிகள் இந்த 'தர்ம யுத்தத்தில்' பலியானது போக, தமிழர்கள் கண்ணியமாக, சுதந்திரமாக, ஜனநாயக அமைப்பில் இலங்கை அரசுடன் சமாதானமாக வாழப் போராடிவந்த நீலன் திருச்செல்வம் போன்ற பல தமிழர்கள், போராளிகள், புலிகளை விமர்சித்த பத்திரிகையாளர்கள், அறிவாளிகள் புலிகளால் 'அகற்றப்பட்டிருக்கிறார்கள். அதைத் தவிர நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள், வடகிழக்கில் பல தலைமுறைகளாகத் தாமும் தமிழர் என்று நம்பி வாழ்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; அல்லது அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் ஏன் யாரும் பேசுவதில்லை? ஈழத் தமிழர் பிரச்னை பற்றின உண்மையான கவலை இருப்பவர்கள் ஒட்டு மொத்த சித்திரத்தையும் பார்க்கவேண்டாமா? இவர்கள் பேசுவது ஈழத்தமிழர் மீது கொண்ட கரிசனத்தாலா அல்லது புலிகள் மீதுள்ள கரிசனத்தாலா? பயங்கரவாதக் குழு என்று இந்தியாவும் மற்ற உலக நாடுகளும் எல்.டி.டி.இ. யைத் தடை செய்திருக்கும் நிலையில், புலிகளை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றால், பயங்கரவாதத்தை ஆதரிக்கிறீர்கள் என்று அர்த்தம். மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி என்பது போல அப்பாவி இலங்கைத் தமிழர்கள் இலங்கை அரசின் அராஜகத்தாலும் புலிகளின் ஃபாசிஸ அடாவடித்தனத்தாலும், அவதிப்பட்டுக் கொண்டிருப்பது பொதுநலன் நோக்கோடு பட்சமில்லாமல் பிரச்னையை அணுகுபவர்கள் அறிந்த உண்மை.

ஆனால், ஒரு யதார்த்தத்தை மறுக்க முடியாது. தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கவும், தமிழர்களைத் தொக்காக இலங்கை அரசு நினைத்து ஒதுக்கிவிடமுடியாத அடையாளமாகவும் புலிகள் அமைப்பு மட்டுமே இன்று கோலோச்சி வருகிறது. அந்த அமைப்பின் சக்தி அச்சுறுத்துவது மட்டுமல்ல, நன்மை விளைவிக்கக்கூடிய அசாதாரண சாத்தியங்களைக் கொண்டது. உண்மையில் புலிகள் மனசு வைத்தால், ஜனநாயக நீரோட்டத்தை ஏற்க சம்மதித்து உலகத்து சமாதானக்குழுக்கள் ஏற்பாடு செய்ய முயற்சிக்கும் பேச்சு வார்த்தைகளுக்கு வந்து ஒத்துழைத்தால் தமிழர் விடிவுக்கான வழி பிறக்கும்.. அதுதான் அவர்கள் மீது உறுதிப்பட்டுவிட்ட பிம்பத்தை மாற்றும். உலக வல்லரசுகள் இப்போது பயங்கரவாதத்தை எதிர்க்கும் போரில் தீவிரமாக இருக்கும் நிலையில் புலிகள் பயங்கரவாதத்தை விட்டொழித்தே ஆகவேண்டும். தற்கொலைப் படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்தால் இலங்கை அரசு பதிலுக்கு ராணுவ நடவடிக்கை எடுக்கும். அதற்கு தார்மீக ஆதரவை அமெரிக்க கொடுத்தால் வியப்பதற்கில்லை. பிறகு அதோகதிதான். அப்பாவித் தமிழ் மக்களின் துயரத்திற்கு முடிவே இல்லாது போகும். புலிகளிடம் செல்வாக்கு உள்ள நமது அரசியல் தலைவர்கள், அவர்கள் தங்கள் ரத்தத்தின் ரத்தம் என்று சொந்தம் கொண்டாடுபவர்கள், உணர்ச்சிப் பெறுக்கில் ஆகாயவெளியில் வாள்போரில் ஈடுபடுவதற்கு பதில், அவர்களிடம் இதையெல்லாம் ஏன் சுட்டிக்காட்டக்கூடாது? புலிகளின் பலத்தின் ஜனநாயக சாத்தியக்கூறுகளை ஏன் விளக்கக்கூடாது? இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தாங்கள் ஆற்றக்கூடிய மகத்தான சேவையாக இதை ஏன் நினைக்கக்கூடாது?

ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின், அந்தக் கொலையின் முதல் குற்றவாளியாகப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயர் நீதிமன்றத்தில் இருக்கையில், இந்திய அரசு இந்தப் பிரச்னையில் ஓரளவுக்குதான் தலையிடும். ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி சமாதானத்திற்கான நிரந்தர வழிகளைத் தேடும்படி இலங்கை அரசை நிர்ப்பந்திக்க முடியும். இங்கு வரும் அகதிகளுக்கு அடைக்கலம் தந்து பிரச்னைக்கு தார்மீக ஆதரவு கொடுக்கமுடியும். அதற்கு மேல் அது தலையிடும் என்று தோன்றவில்லை. எனது கருத்தை ஏற்காதவர்கள், தமிழீழப் பிரச்னையை வைத்து அரசியல் பண்ணுபவர்கள், என்னைத் தமிழினத் துரோகி என்று முத்திரைக் குத்துவார்கள் என்று எனக்குத் தெரியும். புலிகளை ஆதரிக்காதவர்கள் தமிழினத் துரோகிகள் என்று சொல்வது அவர்களுக்கும் சௌகரியமாகிவிட்டது. புலிகளின் குற்றங்களைத் தைரியமாகச் சுட்டிக்காட்ட அவர்களுக்குத் தயக்கம் இருக்கும்வரை, சமாதான வழிமுறைக்கு புலிகளை நிர்ப்பந்திக்கும் துணிச்சல் ஏற்படாத வரை, தமிழினத்துக்கு துரோகம் இழைப்பவர் யார் என்கிற கேள்வியைப் புலிகளால் மேலுலகத்திற்கு அனுப்பப்பட்ட கணக்கற்ற தமிழரின் ஆவிகள் கேட்டுக்கொண்டே இருக்கும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு