தேவதாசன் விமலா(56)புலிகளால் சுட்டுக்கொலை

ஒட்டுமடத்தில் புலிகளால் பெண்ணொருவர் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம் ஒட்டுமடத்தில் தேவதாசன் விமலா(56) என்ற பெண் இன்று காலை (01-12-2006) 11.00 மணியளவில் புலிகளின் பிஸ்டல் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

புலிகளின் பெண்கள் தொடர்பான குரூரமும் வக்கிரமுமான வசவுகளும் படுகொலைகளும்.

இந்த படுகொலை பற்றி இந்த பெண்ணை அவதூறு செய்யும் விதத்தில் எல்லாளன் படை என்ற புலிகளின் பிரிவினர் விடுத்த பிரசுரத்தை புலிகளின் இணையத்தளமான புதினம் டொட்கொம் வெளியிட்டுள்ளது.

'சிறீலங்கா படையினருடன் பாலியல் தொடர்புகளை வைத்திருந்த அதேவேளை தமிழ் தேசியத்துக்கு எதிரான காட்டிக்கொடுப்புக்கள் பல்வேறு தேசவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட காரணத்தில் இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக எல்லாளன் படை தெரிவித்துள்ளது".


இதே போன்று ஏறத்தாழ ஒருவருடத்திற்கு முன்னர் பொம்மைவெளியில் படுகொலை செய்யப்பட்ட தாய் ஒருவர் மீதும் இவ்வாறு நாமகரணம் சூட்டியது பலருக்கு ஞாபகம் இருக்கும்

இதேபோன்று புலிகளின் முக்கிய பொங்குதமிழ் பேச்சாளராக இருந்த விரிவுரையாளர் ஒருவர் தமது வீட்டில் வேலைக்கு வைத்திருந்த சிறுமிமீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்தபோது அந்தச் சிறுமி நடத்தைக் கெட்டவள், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தவள் என நிதர்சனம் டொட்கொம் வக்கிரமாக எழுதியது.
அந்த விரிவுரையாளருக்கு ஆதரவாக வாதாடப் புறப்பட்ட ஒழுக்க சீலர்களான சட்டதரணிகளையும் நாமறிவோம். பெண்களமைப்புக்களின் எதிர்ப்புக்களினால் அவர்கள் ஒழுக்கத்தை காக்கும் திருப்பணியிலிருந்து பின்வாங்கினார்கள்.

வறுமையின் கோரப்பிடியிலும், சமூக ஒடுக்குமுறையிலும் உழலும் பெண்களை புலிகள் படுகொலை செய்யும் போது அவர்களை நடத்தை கெட்டவர்கள் என சித்தரிப்பது வழக்கம். 1986 இல் ஈ.பி.ஆர்.எல்.எப் பிலும் ஏனைய பல இயக்கங்களிலும், மனித உரிமை அமைப்புக்களிலும் செயற்பட்ட பல பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் அவர்கள் புலிகளால் சித்திரவதைகளை அனுபவித்து ஆணாதிக்க சிந்தனை சமூகத்தாலும் தனிமைப்படுத்தப்பட்டு ஆன்ம உடல் ரீதியாக சிதைக்கபட்ட வரலாறு சரியாக பதிவு செய்யப்படவில்லை . பாதுகாப்பு காரணங்களால் யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட யாழ் , திருமலை மட்டக்களப்பு பெண்போராட்டகாரர்களுக்கும் வன்னியில் செயற்பட்டவர்களுக்கும் (மலையகத்தில் இருந்து வன்னிக்கு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் இருந்து வந்த பெண்களும் இதில் அடக்கம்) என்ன நடந்தது என்பது பதிவு செய்யப்படவேண்டும். சமூகத்தில் எழிலார்ந்த கனவுகளுடன் வந்த அவர்கள் வஞ்சிக்கபட்டார்கள். ஒரு துயரகாவியம் ஒன்றும் எமது பிரதேசங்களின் காற்றில் கரைந்துள்ளது. எமது இதேபோல் புலிகள் இயக்கத்தில் 2004 மார்ச்சில் ஏற்பட்ட பிளவுகளையடுத்து பிரிந்து சென்ற பெண்களும்,சிறுமிகளும் புலிகளால் அவதூறு செய்யப்பட்டார்கள் . யுத்தத்தில் அல்லது சுனாமி அனர்த்தத்தில் தமது கணவரை இழந்த பெண்களின் துன்பதுயரங்கள் ஓரளவேனும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

பெண்கள் என்னும்போது அவர்கள் பொதுவாகவே வன்முறைகளுக்கு எதிரானவர்கள் . அனேகமான வன்முறைகளுக்கெதிரான யுத்தத்திற்கெதிரான இயக்கங்கள் பெண்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

சமூகத்தில் பிரபலமான ஆண்களை கொலை செய்யும் போது புலிகள் அவர்களை துரோகிகள் என்பார்கள். சமூகத்தில் அந்தஸ்து பெற்ற பெண்களாக இருந்தால் அவர்களையும் துரோகிகள் என்பார்கள்.

சமூகத்தின் அடிமட்டத்தில் உழலுபவர்கள் ஆண்களாக இருந்தால் அவர்கள் துரோகிகள், சமூகவிரோதிகள் என சித்தரிக்கப்படுவார்கள். மாற்று இயக்கங்களின் சாதாரண ஊழியர்களும் அவ்வாறே. சாமான்ய பெண்களாக இருந்தால் அவர்கள் துரோகிகள், நடத்தை கெட்டவர்கள் என சித்தரிக்கப்படுவார்கள்.

இதேபோல் ஒருவருடத்திற்கு முன்னர் பெண் ஊடகவியலாளர் ஒருவர் அவரது கணவருடன் படுகொலை செய்யப்பட்டது தெரிந்ததே. அவரை படுகொலை செய்வதற்கு முன் நிதர்சனம் டொட் கொம் அவரை அவதூறு செய்தது. சாதாரண பெண்களை குறிவைக்கும் போது புலிகள் அவர்களை நடத்தை கெட்டவர்கள் என்றே ஆரம்பிப்பார்கள்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அல்லது முகமழிக்கப்பட்ட பெண்களை நாம் மனித நாகரிகத்திற்கான போராட்டத்தின் வரலாற்றின் தோள்களில் சுமந்து வரவேண்டும் இவற்றை அன்றாட சம்பவங்கள் என்று நாம் மறந்து விடமுடியாது.

பத்திரிகை என்பது ஒரு கட்டிடத்தின் சாரம் போன்றது. புலிகள் பெண்கள் உரிமைகள் தொடர்பாக எத்தகைய வக்கிரமான குரூரமான எண்ணங்களை கொண்டவர்கள் என்பதற்கு அவர்களின் ஊடகங்கள் சாட்சி.

மனுசி

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு