தலைவர் கருணாஅம்மானின் நேரடி செவ்வி….

கிழக்கிலுள்ள தமிழ்மக்கள் என்று மட்டும் வரையறை வைத்துக் கொண்டு நாம் போராடவில்லை. வடக்கிலுள்ள தமிழ்மக்களும், பிரபாகரனின் அடக்கு முறையினால் பெரும் இன்னல்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர். இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவின மக்களினதும் நிம்மதியான வாழ்வதற்கும், சகோதரத்துவ உறவி;ற்கும் இன்று பெரும் தடையாக இருப்பது பிரபாகரனின் பயங்கரவாதமும், வன்முறையும் தான். எனவே எமது போராட்டம் அனைத்து மக்களுக்காகவும் தான். இதில் நாம் பிரதேச, இன, மொழி ரீதியாக வேறுபாடுகளை எக்காலத்திலும் ஏற்படுத்தப் போவதில்லை. ரிஎம்விபித் தலைவர் கருணாஅம்மானின் நேரடி செவ்வி….


--

பிரபாகரனின் அடக்குமுறையிலிருந்தும், கொலைக் கலாச்சாரத்திலிருந்தும் எம் மக்களை விடுவிக்கவே நாம் ஆயுத ரீதியாகப் போராடுகின்றோம். எமது இவ்விலக்கு எய்தப்படும் வரை எமது போராட்டத்தில் எம்மாற்றமுமில்லை. – கருணாஅம்மான்
( அதிரடி நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் ரிஎம்விபியின் தலைவர் கருணாஅம்மான் அவர்களைச் செவ்வி காணும் நோக்கில் (தயக்கத்துடன்) ரிஎம்விபியின் மட்டுநகர் அரசியல் செயலகத்தில் ரிஎம்விபியின் ஊடகத் தொடர்பாளர் அசாத் மௌலானா மற்றும் ரிஎம்விபியின் தமிழ்அலை பத்திரிகை ஆசிரியர் குழுவில் ஒருவரான கோபி ஆகியோரை நேற்றுமாலை சந்தித்தேன். அவர்கள் தமது ரிஎம்விபியின் முதன்நிலைப் பொறுப்பாளர் பிள்ளையானுடன் தொடர்பு கொண்டு எனது விபரத்தை தெரிவித்ததும் நான் ரிஎம்விபியின் மட்டுநகர் அரசியல் செயலகத்தில் பல மணிநேரம் தங்க வைக்கப்பட்டேன். பின் தமது வழமையான சோதனைக்குப் பின்னர் நள்ளிரவில் வாகனமொன்றில் என்னை ஏற்றிக் கொண்டு பயணித்தனர். வாகனம் குறிப்பிட்ட இடத்தை அடைய முன்பாக குறைந்தது ஐந்து தடவையாவது குறிப்பிட்ட இடங்களில் தரித்து நின்று வாகனத்திற்கு வெளியே நின்ற சில இளைஞர்களுடன் உரையாடி விட்டே பயணித்தனர். (அவ்விளைஞர்கள் ஆயுதங்களுடன் நின்ற தோரனையும், அவர்களின் தமிழ் உரையாடலும் அவர்கள் ரிஎம்விபியின் போராளிகள் என்பதைத் தெளிவாகக் காட்டியது.) நான் குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைந்ததும் அங்கு நிலைமைகளைப் பார்த்தவுடன் ‘ஈ, காக்கைகள்” கூட இலகுவில் நெருங்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததை தெளிவாக உணர்ந்து கொண்டேன்… )



(நான் பேட்டியை ஆரம்பிக்க முதலே ரிஎம்விபியின் தலைவர் கருணாஅம்மான் அவர்கள் ‘அதிரடி இணையம்” எம்மைப் பெரிய சிக்கலில் மாட்டி விட்டதெனச் சிரித்துக் கொண்டே கூறினார். ‘யாது காரணமென?” நான் வினவிய போது.. ‘நீண்டகாலமாக நான் எவரையும் நேரில் சந்திப்பதோ அன்றில் தொலைபேசியில் உரையாடுவதோ இல்லையெனத் தீர்மானித்து செயல்படுகிறோம். எனது கருத்துக்ககை; கூட மின்னஞ்சல் மூலம் தான் தெரிவித்து வந்தேன். முக்கியமாகத் தேவைப்பட்டால் மட்டுமே தொலைபேசியில் உரையாடினேன். ஏனெனில் எமது மக்களுக்காக நாம் குறைந்த பட்சம் எதையாவது சாதித்து விட்டே எல்லோருடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதென இருந்தேன். ஆயினும் அதிரடி இணையம் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை எமக்காகவும் எமது அமைப்புக்காகவும் எமது தரப்புச் செய்திகளை உடனுக்குடன் அதிரடியாக வெளிக்கொண்டு வரும் நடுநிலைமையான செயற்பாடு, மற்றும் மாற்று தமிழ்அமைப்பொன்றின் சர்வதேச முக்கியஸ்தராக இருந்த போதிலும் அதிரடி இணையத்தினருக்காக எல்லா அமைப்புக்களுடனும் தொடர்புகளைக் கொண்டிருப்பது போல் எம்முடனும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள அச்சகோதரரின் புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையான செயல்பாடுகளுக்காகவே அவரது வேண்டுகோளுக்கிணங்க உங்களைச் சந்திக்க சம்மதித்தேன். ஆனால் இதனை அதிரடி இணையம் பகிரங்கப்படுத்தியவுடன் சிங்கள ஆங்கில தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் என்னை நேரில் சந்தித்து உரையாட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்கள். விரைவில் பத்திரிகையாளர்களை மட்டுமல்ல எனக்கும் எமது அமைப்புக்கும் ஆரம்பகாலம் முதலே உதவுபவர்களுடன் கூட உரையாடுவேன் என்பதையும் அதுவரை அனைவரும் பொறுத்திருக்குமாறும் அதிரடி இணையம் ஊடாகக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.)

********
கேள்வி:- உங்கள் அமைப்பின் குறிப்பாக இராணுவப்பிரிவின் பிரதான நோக்கமென்ன?
கருணாஅம்மான்:- இப்போதும் அரச படையினருக்கும், பிரபா குழுவினருக்கும் இடையே மோதல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசபடையினருக்கும், பிரபா குழுவினருக்குமிடையே பாரிய யுத்தம் ஏற்பட்டாலும், இல்லாவிட்டாலும் எமது இராணுவப் பிரிவின் இலக்கு தெளிவானதும், உறுதியானதுமாகும். இதில் எவ்வித மாற்றமுமில்லை. பிரபாகரனின் அடக்குமுறையிலிருந்தும், கொலைக் கலாச்சாரத்திலிருந்தும் எம் மக்களை விடுவிக்கவே நாம் ஆயுத ரீதியாகப் போராடுகின்றோம். எமது இவ்விலக்கு எய்தப்படும் வரை எமது போராட்டத்தில் எம்மாற்றமுமில்லை. எவ்வித புறக்காரணிகளையும் இதில் தாக்கம் செலுத்த அனுமதிக்கப் போவதில்லை. எமது இராணுவப்பிரிவு தனித்துவமாகவும், சுயாதீனமாகவும் செயற்படுகின்றது. இவை பற்றி நான் பல தடவைகள் தெளிவாக்கியுள்ளேன்.

கேள்வி:- உங்கள் அமைப்பின் செயலகங்களின் செயற்பாடுகள் குறித்து??

கருணாஅம்மான்:- எமது அரசியல் செயலகங்கள் இப்போது விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் எமக்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் உள்ளது. முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் 20அரசியல் செயலகங்ளை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. பொத்துவில் தொடக்கம் திருமலை வரை எமது இவ்வரசியல் செயலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. எமது அரசியல் தலைமைச் செயலகம் கொழும்பிலுள்ள அதே நேரம் கிழக்கு மாகாண அரசியல் தலைமை செயலகமான மீனகம் மட்டக்களப்பில் உள்ளது.

கேள்வி:- உங்களின் அரசியல் கெயலகங்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டும் தான் ஏற்படுத்தப்படுமா??..

கருணாஅம்மான்:- எமது அரசியல் செயலகங்களையோ, செயற்பாடுகளையோ நாம் குறுகியதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. அனைத்து தமிழ் மக்களுக்குமாகவே எமது அரசியல் பணி விஸ்தரிக்கப்படுகின்றன. இதில் எமக்கு எப்பிரதேச பாகுபாடும் இல்லை. விரைவில் எமது அரசியல் செயலகம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கப்படும். நாம் வடக்கு கிழக்கு மக்களுக்காக மட்டுமல்ல கொழும்பு முதல் மலையகம் வரை அனைத்துத் தமிழ் மக்களுக்காகவும் செயல்படுவோம். அதுமட்டுமல்ல தமிழ்மக்களுடன் சிங்கள முஸ்லிம் தொழிலாள வர்க்க மக்களுக்காகவும் குரல் கொடுக்கவோ அவர்களுக்காகப் போராடவோ தயங்க மாட்டோம்.

கேள்வி:- நீங்கள் பிரதேசவாதியா? கிழக்கு மாகாணம் மட்டும் தான் உங்கள் நோக்கமா??

கருணாஅம்மான்:- நாம் இது தொடர்பில் எமது நிலைப்பாட்டை பல தடவைகள் தெரிவித்துள்ளோம். கிழக்கிலுள்ள தமிழ்மக்கள் என்று மட்டும் வரையறை வைத்துக் கொண்டு நாம் போராடவில்லை. வடக்கிலுள்ள தமிழ்மக்களும், பிரபாகரனின் அடக்குமுறையினால் பெரும் இன்னல்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர். இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவின மக்களினதும் நிம்மதியான வாழ்வதற்கும், சகோதரத்துவ உறவி;ற்கும் இன்று பெரும் தடையாக இருப்பது பிரபாகரனின் பயங்கரவாதமும், வன்முறையும் தான். எனவே எமது போராட்டம் அனைத்து மக்களுக்காகவும் தான். இதில் நாம் பிரதேச, இன, மொழி ரீதியாக வேறுபாடுகளை எக்காலத்திலும் ஏற்படுத்தப் போவதில்லை.

கேள்வி:- அப்படியாயின் வடகிழக்கு இணைப்புக் குறித்த உங்கள் கருத்தென்ன??

கருணாஅம்மான்:- வடக்கு-கிழக்கு மாகாணமானது 1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலமே இணைக்கப்பட்டது. இவ்வொப்பந்தத்தில் கூட ஒரு வருட காலத்திற்கே இணைக்கப் படுவதாகவும் தொடர்ந்து இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டுமென்றால் அம்மக்களிடம் சர்வதேச வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அது தொடர்பான சர்வதேச வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் உயர் நீதிமன்ற தீர்ப்புக் குறித்து விமர்சனம் செய்வது ஆரோக்கியமானதல்ல. எம்மைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கானது தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பூமி. வடகிழக்கு தமிழர்களின்; தாயகம் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. வடக்கு-கிழக்கு இணைந்திருக்க வேண்டுமா? பிரிந்திருக்க வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அப்பகுதி மக்கள் தான் அம்மக்களின் விருப்புக்கு தலைசாய்க்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும். மக்கள் தீர்ப்பே மகேசன்(ஆண்டவன்) தீர்ப்பாகும். மக்கள் தீhப்புக்கு நிகரான தீர்ப்பு எதுவுமில்லை.

கேள்வி:- நோர்வே எரிக் சொல்ஹைமினால் பிரபாகரனுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட. தொலைக்காட்சிப் பெட்டி குறித்து அண்மையில் பரபரப்பான செய்தி வெளியாகியது. இது குறித்து உண்மைத் தகவலென்ன? அதன் விபரமென்ன??

கருணாஅம்மான்:- இத்தொலைக்காட்சிப் பெட்டியானது தாய்லாந்தின் பாங்கொக்கில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது எரிக் சொல்ஹைமினால் பிரபாகரனுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. பிரபாகரனுக்கு சினிமாப் படங்களில் பெரும் மோகம் இருக்கின்றது. அதில் அவர் பார்த்து ரசிக்கும் ஹாலிவூட் படங்களில் காண்பிக்கப்படும் யுக்தியை தனது எதிரியை கொல்வதற்கும் அவர் பயன்படுத்துகின்ற சந்தர்ப்பங்களும் அதிகம்.
எரிக் சொல்ஹைமினால் வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியானது கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினரால் கொண்டு வரப்பட்டது. அக்காலப்பகுதிக்கான விமான நிலையப் பதிவேடுகளை சோதனை செய்தால் அத்தொலைக்காட்சிப் பெட்டி கொண்டு வரப்பட்டதற்கான பதிவுகள் நிச்சயம் இருக்கும். கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர்; இலங்கை விமானப்படையின் உலங்கு வானூர்தியிலேயே கிளிநொச்சிக்கு சென்றனர்.
ஆனால் இடவசதியைக் கருத்திற் கொண்டு பேச்சுவார்த்தைக் குழுவினருடன் தொலைக்காட்சிப் பெட்டியையும் கொண்டு செல்ல விமானப் படையினர் மறுத்து விட அதற்காக இலங்கைக்கான நோர்வேத் தூதரகத்தின் உதவி கோரப்பட்டு நோர்வேத் தூதரக அதிகாரிகளினால் தரை வழியாக அத்தொலைக்காட்சிப் பெட்டி கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
நான் இவ்விடத்தில் ஒன்றைத் தெளிவாகக் கூற வேண்டும். நோர்வே நாட்டு அரசாங்கத்தையோ, அந்நாட்டு மக்களையோ நான் என்றும் குற்றம் சொல்லவில்;லை. அதேபோல் மேற்படித் தொலைக்காட்சி விடயம் கூட சாதாரண விடயம் ஆனால் நடுநிலைமைவாதியாகக் குறிப்பிடும் எரிக் சொல்ஹைம் எனும் தனிநபர் இலங்கை விவகாரத்தில் புலிகளின் சார்பாளராக நடந்து கொள்கிறார். இதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இதனைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் விடயத்தை அம்பலத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.

கேள்வி:- பிரபாகரனின் இவ்வருட மாவீரர்தின உரை குறித்த உங்கள் கருத்தென்ன?

கருணாஅம்மான்:- பிரபாகரனின் இவ்வருட மாவீரர்தின உரையிலும் கூட வாய்ச்சவாடல்கள் மட்டுமே உள்ளது. அதிலும் இம்முறை தடுமாற்றமும், பீதியும் அதிகமாகக் காணப்பட்டது. என்றுமே சாத்தியப்படாது என்று நன்குணரப்பட்ட தனிநாட்டு கோரிக்கைகள் இப்போது மீண்டும் தூசு தட்டியிருப்பது தனது கஜானா காலியாகியிருப்பதால் தான். சர்வதேச சமூகங்களின் புலிகள் மீதான பயங்கரவாதத் தடையும், ஏ9 பாதை மூடப்பட்டதும் புலிகளுக்கு பொருளாதார ரீதியில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன் கஜானாவை நிரப்புவதற்காக புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் மடிப்பிச்சை கேட்பதே பிரபாகரனின் உரையின் பிரதான நோக்கம்.

கேள்வி:- தமிழீழக் கோரிக்கை குறித்த உங்கள் முடிவு? அது சாத்தியமா? இல்லையா??

கருணாஅம்மான்:- தனிநாட்டு கோரிக்கையோ பிரிவினையோ எப்போதுமே சாத்தியமாகாது என்று சாதாரண மக்கள் முதல் புத்திஜீவிகள் வரை அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம். சர்வதேச சமூகம் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அடையக் கூடிய இலட்சியங்களை உடைய தமிழ்மக்களின் நியாயமான விடுதலைப் ரோட்டத்தை அடைய முடியாத இலட்சியங்களுடன் கூடிய பயங்கரவாதப் போராட்டமாக மாற்றியதே பிரபாகரன் தான். பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை தமிழக மண்ணில் வைத்து படுகொலை செய்ததன் மூலம் தமது பயங்கரவாதத்தை எல்லை தாண்டிய பயங்கரவாதமாக மாற்றியதுடன் வடக்கில் இருந்த முஸ்லிம் மக்களை வெளியேற்றி கிழக்கிலே சகோதர இன மக்களுக்கெதிரான படுகொலைகள் மூலம் ஈழப் போராட்டம் என்பது சகோதர மக்களுக்கெதிரான எல்லை கடந்த பயங்கரவாதப் போராட்டம் எனும் நிலைக்கு கொண்டு வந்தது பிரபாகரன் தான். இப்போது மீண்டும் தனிநாட்டு கோரிக்கையை அவர் எடுத்திருப்பது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் புலிகள் இயக்கத்தையும், தன்னையும் காப்பாற்றலாம் என்ற இறுதி முயற்சியாக இருக்கலாம்.

கேள்வி:- ஏ9 பாதையூடாக உணவுப்பொருட்கள் அனுப்ப அரசு முடிவெடுத்தது குறித்தும்.. அதற்கு விடுதலைப்புலிகள் தடை விதித்தது குறித்தும்… இதற்கான தீர்வு குறித்தும்?

கருணாஅம்மான்:- யாழ் குடாநாட்டு மக்கள் பிரபாகரனின் சுரண்டல்களுக்கு மாத்திரம் தானே தவிர அம்மக்களின் நலனிலோ அவருக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதை இந்நிகழ்வு மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது. அம்மக்கள்; தம் மக்கள் என்ற உணர்வு பிரபாகரனுக்கு இருந்திருக்குமானால் எவ்வழியிலேனும் அம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதற்கு தங்களினால் ஆன அனைத்தையும் செய்திருக்க வேண்டும். ஆனால் அதனை விடுத்து கடல் வழியாக உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லையென்றார்கள் இப்போது தரைவழியாக கொண்டு செல்லவும் அனுமதி மறுக்கின்றனர். இப்போது இவர்களின் ஒரே நோக்கம் ஏ9 பாதையில் வரி, கப்பம் அறவிட வேண்டும் என்பதே தவிர வேறோன்றுமில்லை. அதேநேரம் நான் இவ்விடத்தில் அரசாங்கத்திற்கு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். யாழ்ப்பாண மக்களும் இந்நாட்டின் பிரஜைகள் தான். அம்;மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், உணவுப் பொருட்களையும் வழங்க வேண்டியது அரசின் கடமை. எவ்வழியிலேனும் இவை வழங்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.


கேள்வி:- வாகரை மக்களின் நிலைமை குறித்து?

கருணாஅம்மான்:- வாகரையிலுள்ள சுமார் 30.000 மக்கள் இன்று பிரபா குழுவினால் மனித கேடயங்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர். கிழக்கில் மிகப் பலவீனமாக இருக்கும் பிரபா குழுவினர் இறுதி முயற்சியாகத் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இம்மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். இம்மக்களை பாதுகாப்பாக பிரபா குழுவினரிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும். அத்துடன் மக்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவை தொடர்பாக இலங்கை அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

கேள்வி:- ஈபிடிபி அமைப்புக் குறித்து உங்கள் கருத்து ? அவர்களுடனான உறவு?…

கருணாஅம்மான்:- எமது பிரிவின் ஆரம்ப காலத்தில் நாம் ஜனநாயக வழிக்குத் திரும்புவதற்கு எமது அறிக்கைகள் செயற்பாடுகளை ஆதரித்து ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் தார்மீக உதவிகள் செய்தார். நாம் அதனை எப்போதும் நன்றியுடன் நினைவு கூருவோம். பிரபாகரனின் அடக்குமுறையிலும், கொலைக் கலாச்சாரத்திலும் பாதிக்கப்பட்ட மாற்றுக் கருத்துடைய கட்சி என்ற வகையில் அவர்களுடனான எம் உறவு குறித்து உரிய தருணம் வரும்போது எமது அரசியல் செயற்குழு நல்லதொரு முடிவை எடுக்கும்.

கேள்வி:- உங்களுடன் இணைந்திருந்த ஈஎன்டிஎல்எப் அமைப்பினர் குறித்த உங்கள் கருத்து?

கருணாஅம்மான்:- இவர்கள் எமது அதிதீவிர களச் செயற்பாடுகளுக்கு ஈடுகொடுத்து செயற்பட முடியாத நிலையிலேயே இவர்களில் பலர் எம்மிடமிருந்து விலகி இந்தியாவுக்கே சென்று விட்டார்கள். அதிதீவிரமாகச் செயற்படக் கூடிய சிலர் எமது அமைப்புடன் இணைந்து செயல்படுகிறார்கள். அதேவேளை இதனை முக்கியப்படுத்திச் சொல்வதற்கோ இவர்களைக் கவனத்தில் கொள்வதற்கோ இது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று நினைக்கிறேன்…

கேள்வி:- தமிழர்விடுதலைக்கூட்டணி புளொட் ஈபிஆர்எல்எப்(நாபாஅணி) ஆகிய மூன்று அமைப்புக்களும் கூட்டாக இணைந்து செயல்படுவது குறித்து உங்கள் கருத்து? அக்கூட்டில் உங்கள் ரிஎம்விபி அமைப்பும் இணைந்து கொள்ளுமா??

கருணாஅம்மான்:- இக்கூட்டணியை நான் வரவேற்கிறேன். தமிழ் மக்களைப் பொறுத்தவரை இதுவோர் முன்னேற்றகரமான நல்லதோர் முடிவு. தமிழ் மாற்றுக் கட்சியில் நாங்கள் வேறுபட்ட அமைப்பாக இயங்கி வருகின்றோம். அதாவது நாம் இராணுவ மற்றும் அரசியல் செயற்பாடுகளை இணைத்தே செயல்படுகிறோம். ஏனையோர் முற்றுமுழுதாக அரசியல் செயற்பாட்டில் முழுமையாக தீவிரமாக ஈடுபடுகிறார்கள். அதேநேரம் நாம் தொடர்ந்தும் ஆயுதங்களில் மோகம் கொண்டு ஆயுதத்தைத் தூக்கித் திரிய விரும்பவில்லை. எமது தற்பாதுகாப்புக்காக எம்மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை தூக்கியெறியும் காலம் விரைவில் வருமென நம்புகிறோம். காலப்போக்கில் ஏனைய அமைப்புகளுடனான உறவுகள் குறித்தும் கள நிலைமைக்கு ஏற்ப எவ்வாறு செயற்படுவதென்பது குறித்தும் எமது அரசியல் செயற்குழு முடிவெடுக்கும்.

கேள்வி:- கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் கொலைகள், ஆட்கடத்தல்…குறித்து??

கருணாஅம்மான்:- கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் கொலைகள், ஆட்கடத்தல் எமக்கு பெரும் கவலையையும், வேதனையையும் அளிக்கின்றது. கிழக்கு மாகாணம் என்று மட்டுமல்ல வட மாகாணத்தில் இடம் பெறுவதையும் தான். இவையனைத்திற்கும் காரணம் பிரபாகரனும், பொட்டனும் தான். கிழக்கில் நாம் மிகப் பலம் பெற்றுள்ளதாலும் மக்களிடம் எமக்கு பெரும் ஆதரவு இருப்பதாலும்; திட்டமிட்டு படுகொலைகள் மேற்கொண்டு இனவன்முறைகளைத் தோற்றுவிப்பதே அவர்களின் நோக்கம். ஆனால் இதற்கு நாமும் எம் மக்களும் இடம் கொடுக்கப் போவதில்லை.

கேள்வி:- காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலை உங்களின் தலைமையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறதே இது உண்மையா? இது குறித்து??

கருணாஅம்மான்:- இது அபத்தமான குற்றச்சாட்டு சகோதர இனமக்களுக்கெதிரான எத்தாக்குதலும் நாம் என்றுமே மேற்கொண்டதில்லை. இதனை என்னால் உறுதியாகக் கூற முடியும். 1990 ஆம் ஆண்டு பிரேமதாச அரசுடனான தேனிலவுக் காலம் முடிவுக்கு வந்த பின் மோதல்கள் ஆரம்பமான சமயம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்காக பாரிய இராணுவ நடவடிக்கையொன்றிற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இதனால் அரசாங்கத்தின் கவனத்தை திசைதிருப்ப கிழக்கில் பாரிய சகோதரப் படுகொலைக்கு பிரபாகரன் உத்தரவிட பொட்டனின் நேரடிக் கண்காணிப்பிலேயே காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலையும், ஏறாவூர் படுகொலையும் எல்லைப்புற சிங்கள மக்கள் மீதான படுகொலைகளும் இடம் பெற்றன. படுகொலைகள் இடம்பெற்ற பின் பொட்டன் இதனை நேரடியாகவே என்னிடம் கூறினார். ஆனால் அக்கொடூரங்கள் இடம்பெற்ற சமயம் நானும் அவ்வியக்கத்தில் இருந்தேன் என்பதற்காக வேதனையடைகிறேன்.

கேள்வி:- வடகிழக்கு முஸ்லிம் மக்கள் குறித்து உங்கள் கருத்து??

கருணாஅம்மான்:- முஸ்லிம் சகோதரர்கள் தொடர்பான எமது நிலைப்பாடு தெளிவானதும், உறுதியானதும் ஆகும். முஸ்லிம் மக்கள் எம் சகோதர மக்கள் அவர்கள் தமது தாயக பூமியில் அச்சமற்ற, நிம்மதியான அனைத்து அடிப்படை உரிமைகளுடன் வாழ வேண்டும். ஒரு இனத்தின் தனித்துவங்களும், அரசியல் அபிலாசைகளிலும் இன்னொரு இனம் குறுக்கீடு செய்யக் கூடாது. முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமைகளையும், அரசியல் அபிலாசைகளையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். முஸ்லிம்கள் மட்டுமன்றி கிழக்கில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கான அரசியல் அபிலாசைகளையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். கிழக்கில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களாகிய மூவின மக்களும் வாழ்கின்றனர். இம்மக்கள் புரிந்துணர்வுடனும், நிம்மதியாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போது அது அனைத்தின மக்களினதும் அரசியல் அபிலாசைகளைப் உறுதி செய்யக் கூடியதாகவும் அனைவரையும் திருப்திப்படுத்துவதாயும் இருக்க வேண்டும். பேச்சுவார்த்தை மேசையில் முஸ்லிம்களின் தனித்தரப்பு பிரசன்னத்திற்கு நாம் ஆதரவு தெரிவிக்கிறோம். எம்மக்களுக்குண்டான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு.

கேள்வி:- அதிரடி இணயத்தளம் குறித்த உங்கள் கருத்தென்ன??

கருணாஅம்மான்:- அதிரடி இணயத்தளத்தின் சேவை மிகப் பராட்டுக்குரியது. உண்மைகளை உடனுக்குடன் அதிரடியாகத் தருவதில் அதிரடிக்கு நிகர் அதிரடிதான். பல அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் மத்தியில் தமிழ்மக்கள் உரிமைக்காக அதிரடி இணையத்தளம் மேற்கொண்டு வரும் இவ்வரிய பணி என்றும் தொடர வேண்டும். அத்தோடு மாற்று தமிழ் அமைப்பொன்றின் சர்வதேச முக்கியஸ்தராக இருந்த போதிலும் அதிரடி இணையத்தினருக்காக எல்லா அமைப்புக்களுடனும் தொடர்புகளைக் கொண்டிருப்பது போல் என்னுடன் மட்டுமல்லாமல் எமது அமைப்பினைச் சேர்ந்த பலருடனும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள அச்சகோதரரின் புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையான செயல்பாடுகளுக்கு அவருக்கும் அதேபோல் பல பிரச்சினைகள,; நெருக்கடிகளுக்கு மத்தியிலும் துணிவுடன் எம்மைப் பேட்டி காண வந்த உங்களுக்கும் அத்துடன் புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் எம் மக்களின் பிரச்சினைகளை உண்மைத் தன்மையுடன் பக்கச்சார்பின்றி கொண்டு செல்லும் அதிரடி ஆசிரியர் குழாமிற்கும் என் பாராட்டுக்களும் நன்றியும்…

கேள்வி:- புலம் பெயர்ந்து வாழும் எம் உறவுகளுக்கு அதிரடி இணையம் ஊடாக ஏதாவது தெரிவிக்க விரும்புகிறீர்களா??

கருணாஅம்மான்:- புலம் பெயர்ந்து வாழும் எம் சகோதரங்கள் தாயக மண்ணிலுள்ள மக்களின் நலனில் கொண்டுள்ள அக்கறையும், அர்ப்பணிப்பும் அளப்பெரியது. ஆனால் புலம் பெயர்ந்தவர்கள் தாயக மண்ணிலுள்ள தம் சகோதரர்களுக்கு வழங்கும் உதவிகள் உண்மையிலேயே அவர்களைத்தான் சென்றடைகின்றதா? என்பதை உறுதிப்படுத்தி;க் கொள்ள வேண்டும். எம்மக்களை நெருக்கடிக்குள் ஆளாக்கி, அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் பிரபா குழுவினருக்கு புலம்பெயர் வாழ் மக்களின் உதவிகள் சென்றடைந்தால் எம்மக்களின் இன்னல்களும், அவலங்களும் இன்னும் அதிகமாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். யாழ்ப்பாணம், வாகரை போன்ற பகுதிகளில் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் மக்களுக்கு தாராளமாக உதவுங்கள். ஆனால் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ய வேண்டாம் என தயவாக வேண்டுகின்றேன். நீங்கள் ஒன்றை சிந்தித்துப் பாருங்கள். ஏழைப் பெற்றோர்களின் சிறுவர்களையும் இளைஞர்களையும் கடத்திக் கொண்டு வந்து கட்டாய ஆயுதப் பயிற்சியளித்து கொலைக்களம் அனுப்புகின்றார் பிரபாகரன். தன் பருவ வயதையடைந்த பிள்ளைகள் பிரபாகரனுக்கும் அவரின் ஏனைய முக்கியஸ்தர்களுக்கும் இருக்கின்றனர். அப்பிள்ளைகள் இன்று எங்கே? யுத்த களத்தில் நின்று போரிடுகின்றார்களா? இல்லையே, ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பாக கல்வி பயில ஏழைச் சிறுவர்களும் அப்பாவி இளைஞர்களும் கொல்லப்படுகின்றனர். இதுதான் பிரபாகரனின் இன உணர்வு. எனவே இவ்வாறான பயங்கரவாதிகளுக்கு உங்கள் உதவிகள் சென்றடையக் கூடாது என்பதே என் வேண்டுகோள். சுpந்தித்து செயல்படுவோம். நன்றி…

**
நான் அங்கு சென்ற சமயம் கருணாஅம்மான் தலைமையிலான ரிஎம்விபியின் முக்கிய தளபதிகளுக்கும் பொறுப்பாளர்களுக்குமான கூட்டமொன்றுக்கு ஏற்பாடாகி இருந்தது. அச்சமயத்தில் நான் அனைவரையும் கருணாஅம்மானுடன் சேர்த்து ஒன்றாகப் புகைப்படம் எடுக்க விரும்பி எனது விருப்பத்தை தெரிவித்த போது சிலர் விரும்பாததும், சிலர் சந்தேகக்கண் கொண்டு என்னைப் பார்த்த போதிலும் கருணாஅம்மான் அவர்கள் ‘நாம் மக்களுக்காக வாழ்பவர்கள் அதனால் எம்மைக் குறித்து மக்கள் தெரிந்து கொள்வதில் தவறில்லையென”க் கூறியதுடன் புகைப்படத்திற்கும் ஒத்துழைத்தார்.


புகைப்படத்தில்……. ரிஎம்விபியின் தலைவர் கருணாஅம்மான் அவர்களுக்கு வலதுபுறத்தில் அமர்ந்திருப்பவர்கள் ரிஎம்விபியின் தளபதிகள் பிள்ளையான், பிரதீப்மாஸ்டர், பகீரதன், பிஎல்ஓ மாமா எனும் மகேந்திரன்

இடதுபுறத்தில் அமர்ந்திருப்பவர்கள் ரிஎம்விபியின் தளபதிகள் nஐயம், மார்க்கன், சின்னத்தம்பி, பாரதி எனும் இனியபாரதி

ரிஎம்விபியின் தலைவர் கருணாஅம்மான் அவர்களுக்கு பின்னால் நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக) ரிஎம்விபியின் தளபதிகள் முரளி, சுதன், மகிழன், மங்களன்மாஸ்டா், சிந்துஐன், சூட்டி, தூயவன் எனும் உருத்திரா, விஐpதரன், ரீஐசீலன், சீலன் ஆகியோர்.
(மேற்படி புகைப்படம் எடுத்த மறுதினமே (09.12.06) ரிஎம்விபியின் தளபதி இனியபாரதி உட்பட மூவர் மீது புலிகள் தாக்குதல் நடாத்தியதில் அவர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.)

******
மேற்படி பேட்டியைக் காண்பதற்காக ரிஎம்விபியின் தலைவர் கருணாஅம்மான் அவர்களுடன் (சுமார் ஒருவருடத்திற்கு பின்பாக) தொலைபேசி மூலம் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக உரையாடி ஏற்பாடு செய்து தந்தவரும், அதிரடி இணையத்தளத்திற்கு பல வழிகளிலும் உதவிபுரிபவர்களில் ஒருவருமான (ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும்) தமிழ் அமைப்பொன்றின் சர்வதேச முக்கியஸ்தரான அண்ணருக்கும்…. பல பிரச்சினைகள,; நெருக்கடிகளுக்கு மத்தியிலும் துணிவுடன் சென்று ரிஎம்விபியின் தலைவர் கருணாஅம்மான் அவர்களைப் பேட்டி கண்ட அதிரடியின் மட்டுநகர் விசேட செய்தியாளருக்கும் (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.) அதிரடி இணையத்தின் ஆசிரியர்குழு, நிர்வாகம் மற்றும் அதிரடி வாசகர்கள் சார்பாகவும் எமது நன்றி!!

அதேவேளை மேற்படி பேட்டி குறித்து உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எமக்கு எழுதி அனுப்புவதுடன் தொடர்ந்தும் கருணாஅம்மான் அவர்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளையும் எழுதியனுப்பவும். முடிந்தால் மீண்டுமொரு முறை நேரடியாகப் பேட்டி கண்டு பிரசுரிப்போம் அல்லாவிடில் தொலைபேசி மூலமாவது பேட்டி கண்டு நிச்சயமாகப் பிரசுரிப்போம்.


athirady.com

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு