பிள்ளை பிடிக்கும் தமிழரின் போராட்டம்

ஆயுத மோதல்களில் அகப்பட்டுள்ள சிறார்களின் ((Children in armed cnflicts) நலன்கள் தொடர்பான ஐ.நா.வுக்குhன விசேட ஆலொசகர் அலன் ரொக் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் இலங்கையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். அதற்கு காரணம் கிழக்கு மாகாணத்தில் கருணா அணியினர் பலாத்காரமாக சிறார்களைப் படையில் சேர்ப்பதற்கு இலங்கை அரச படையினர் நேரடியாகவே உதவி செய்கிறார்கள் என அவர் வெளியிட்ட அறிக்கையாகும். இலங்கையில் சிறார்களை ஆயிரக்கணக்கில் தமது ஆயுதப்படையில் சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பே இதுவரை குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால் அலன் ரொக்கின் அறிக்கையானது கருணா அணியினர் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகிய இரு தரப்பினரையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கிறது.

அலன் ரொக் இலங்கையில் நிகழும் ஆயுத மோதல் நிலைமைகள் தொடர்பாக தகவல் அறியும் 10 நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக மோதல்கள் கடுமையாக நிகழும் பகுதிகளில் சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தகவல் அறிவதே அவரது பயணத்தின் நோக்கமாக இருந்தது. இலங்கைக்குள் தனது பயணத்திற்கான சகல ஏற்பாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி மேற்கொள்ளுவதற்கு அரசாங்கம் வசதிகளை செய்து கொடுத்திருந்ததாக அலன் ரொக் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அவர் கிழக்கு மாகாணத்திற்குச் சென்றபோது அங்கு பொதுமக்களைச் சந்திப்பதற்கு சில தனி நபர்களும் சில சிவில் அமைப்புக்களும் அவருக்கு ஏற்பாடுகளைச் செய்த கொடுத்ததாகத் தெரியவருகின்றது. இதே நபர்களும் அமைப்புக்களும் தான் 2 வருடங்களுக்கு முன்னர் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஜோ பேக்கர் அவர்களுக்கும் தகவல்களைத் திரட்ட உதவி செய்தவர்கள் என்பதே முக்கியமான விடயமாகும். அலன் ரொக்கின் பயணமோ அல்லது அவர் கிழக்கு மாகாணத்திற்கு சென்று அங்கு கருணா அணியினர் மற்றும் அவர்களுக்கு ஒத்தாசை வழங்கும் அரசாங்கப் படையினரின் நடவடிக்கைகள் பற்றி தகவல்கள் சேகரித்தமையோ ஒரு தற்செயல் நிகழ்வாகக் கொள்ளமுடியாது. இவ்வருட ஆரம்பம் முதலே இலங்கையில் ஆள்கடத்தல் படுகொலைகள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் என்பன ஆயுதமேந்திய சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வருவது சர்வதேச ரீதியாக பரவலாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

ஆனால் அதில் ஒரு தரப்பினரை மாத்திரம் குறிப்பிட்டு கண்டிக்க முடியாத அளவிற்கு சகல தரப்பினரும் அதனை மேற்கொண்டதும் அவதானிக்கப்பட்டது. குறிப்பாக புலிகள் இயக்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு வழிகளில் கண்டன அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால் அரசாங்கமும் அதன் ஆதரவுடன் தமது செய்றபாடுகளை மேற்கொள்ளும் அமைப்புக்களினதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கடுமையான அறிக்கைகள் வெளிவராமல் இருந்தன. இந்த அடிப்படையிலேயே மிகவும் காத்திரமான ஒரு விடயமான சிறார்களைப் படையில் சேர்க்கும் விடயம் தொடர்பாக அரசாங்கத்தினதும் மற்றும் கருணா அணியினரின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினதும் தொடர்பு பற்றிய அறிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையானது ஜ.நா. பாதகாப்புச் சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உடனடியாக கருணா அணியினரும் ஜ.நா. சபையின் கண்டனத்திற்குரிய அமைப்புக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சிறார்களை படையில் சேர்க்கும் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக கடந்த வருடகாலமாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் கண்டனங்கள் அம்பலப்படுத்தல்கள் போல் கடுமையானதாக அலன் ரொக்கின் அறிக்கை இருக்கவில்லை. ஆனால் இலங்கை அரசாங்கப் படைகள் இந்த நடவடிக்கை;கு துணை போகின்றன என்பதே அவ்வறிக்கையில் முக்கியமாக அழுத்தப்பட்ட விடயமாகும். அந்த அறிக்கை மூலம் சர்வதேசச் சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பியிருக்கிறது.

ஒரு நாட்டின் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் பாதுகாப்பு படையினரை தாம் விரும்பியபடி படுகொலைகளை செய்வதையும் அவற்றை மூடி மறைப்பதற்கும் அனுமதி வழங்குவதையும் உலக நாடுகளும் சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களும் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்க வேண்டும்; என்று எதிர்பார்ப்பது மிகவும் கோமாளித்தனமானது. குறிப்பாக நீண்டகால சிவில் யுத்தம் நடக்கின்ற நாட்டில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலீசாரின் நடவடிக்கைகள் அத்து மீறிச் செல்வது தவிர்க்க முடியாதது. ஆனால் அதனை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் தவறுகள் நடக்கும் இடத்தில் உடனடியாக அரசாங்கம் தலையிட்டு அவற்றைத் தடுத்து நிறுத்த முயற்சிப்பதும் நடக்காவிட்டால் நிலைமை மிக மோசமடையும் என்பதை புரிந்து கொள்ளுவதே அவசியமானது.

கிழக்கின் அரசியலுக்கு பிள்ளைகள் பலிக்கடாக்களா?

கிழக்கு மாகாணத்தை பிரபாகரனின் புலிகள் இயக்கத்திடம் இருந்த முற்று முழுதாக விடுவிப்பது என்பது தற்போதைய அரசாங்கத்தின் பிரதான இராணுவ அரசியல் தந்திரோபாயமாக இருக்கிறது. அதன் அடிப்படையில் புலிகளுக்கெதிராக கிழக்கில் தனது நடவடிக்கைகளுக்கு கருணாவின் புலிகள் இயக்கத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது. கருணா குழுவினரை துரோகிகள் எனக்கூறி அவர்களை அழிப்பதற்கு பிரபாகரனின் புலிகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும்வரையில் அரசாங்கம் அந்த வாய்ப்பான நிலைமைய பயன்படுத்தும். அதையாரும் தடுக்க முடியாது.

ஜே.வீ.பீ.யும் ஹெல உருமயவும் கருணா அணியினரை போற்றிப் புகழுவதோடு நிற்காமல் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களிலும் மற்றும் தென்னிலங்கையில் வேறுபல இடங்களிலும் அவர்களுக்கு பல ஒத்துழைப்புக்களை வழங்குகின்றனர். ஜே.வீ.பி. அப்படிசச் செய்வது தவறு என்றும் வாதிடுவதில் பயனேதுமில்லை. அதேபோல், வடக்குப் புலிகளை அழிபப்தற்கு கிழக்குப் புலிகள்தான் சரி. ஆகவே நாம் கருணாவை ஆதரிக்க வேண்டும், பலப்படுத்த வேண்டும் என ஏனைய தமிழ் அரசியல் சக்திகள் தமது அரசியல் நிலைப்பாடுகளை எடுத்து செயற்பட்டால் அதை தவறென்றும் எவரும் வாதிட முடியாது. அதேபோல் வடக்குப் புலிகளை அழிப்பதற்கு அரசாங்கத்திற்கு நாம் உதவிசெய்ய வேண்டும் என்று யாராவது முடிவெடுத்தால் அதற்கெதிராகவும் வாதிடுவதில் பயனேதுமில்லை. காரணம் இந்த அனைத்து நிலைமைகளுக்குமான உரமான அத்திவாரத்தை பிரபாகரனும் அவரது அமைப்பும் மிகக் கனமாக இட்டுவைத்திருக்கின்றனர்.

ஆனால்......

மேற்சொன்ன எந்தக் காரணங்களுக்காவும் எந்தவொரு கட்டத்திலும் யாராவது ஒரு தரப்பினர் வடக்குப் புலிகளை அழிப்பதற்காக நாங்கள் கிழக்கில் சிறு பிள்ளைகளைப் பிடித்து ஆயுதபாணியாக்கப் போகிறோம். அல்லது வயது வந்த பொதுமக்களை பலாத்காரமாகப் பிடித்து ஆயுதப் பயிற்சி கொடுக்கப் போகிறோம் என்று கூறிச் செயற்பட்டால், அது கடுமையாக எதிர்க்கப்பட வெண்டும். வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். அத்தகைய சக்திகளின் நடவடிக்கைகள் உடனடியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையிலேயே அலன் ரொக்கின் அறிக்கையானது இங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. கிழக்கு மகாணத்தில் கருணா அணியினர் அரசாங்கப் படையினரின் ஒத்தாசையுடனோ ஒத்தாசையின்றியோ சிறார்களை பலாத்காரமாக பிடிக்கின்றார்களேயானால் அது கண்டிக்கப்பட வேண்டிய குற்றச் செயலாகும்.

ஒரு காலத்தில் கண்மூடித்தனமாக புலிகள் இயக்கத்தின் படுகொலை அரசியலை ஆதரித்து கிழக்கின் சிறார்களை அந்த அரசியலுக்கு பலியாக்கினார்கள். இப்போது வடக்குப் புலிகளை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு அந்த அரசியலுக்காக சிறார்களை பலவந்தமாக பலிக்கடாக்கள் ஆக்குகிறார்கள். கிழக்கில் அரசியல் ஆதிக்கத்தை வைத்திருக்கும் இந்த சக்திகளின் எந்த முடிவிற்கும் அங்குள்ள அப்பாவிச் சிறார்கள் பொறுப்பாகிவிட முடியாது. கிழக்கு மக்கள் தாம் வடக்குப் புலிகளுடன் மோதுவதற்கான அரசியல் முடிவை எடுத்தால் அதற்காக கருணாவையோ அல்லது அரசாங்கத்தையோ ஆதரித்தால் தாம் அப் போராட்டத்தில் இணைவதே சிறந்தது. அதற்கான அரசியல் பணிகளை கிழக்கில் மேற்கொண்டு வயது வந்த பொது மக்களை அணிதிரட்டுவதே கருணா அணியினர் செய்யக்கூடிய சிறந்த வழிமுறையாகும். அதை விடுத்து சிறார்களை பலிக்கடாக்களாக முன் தள்ளும் கடைகெட்ட அரசியலை தேர்ந்தெடுப்பது மிகமிகக் கேவலமானதாகும்.

இதைத்தான் வடக்கில் யாழ்ப்பாணத்தவர்களும் செய்தனர். புலிகள் ஏனைய இயக்கங்களை அழிக்கும் போது வெளிமாவட்டப் இளைஞர்களை சாக அனுமதித்தார்கள். வசதி படைத்தவர்கள் புலிகளுக்கு இலட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்துவிட்டு தமது பிள்ளைகளோடு வெளிநாடு ஓடிவர வேறுவழியற்று சிக்கிப்போன குடும்பங்களின் குழந்தைகளும் போதாதற்கு ஏனைய மாவட்ட சிறார்களும் பலியானார்கள். அதே தவறை கிழக்கு மாகாண மக்கள் மீண்டும் செய்வது மிகமிகத் தவறானது. அந்த விதமான அரசியலை செய்வதற்கு கருணா அணியினரை ஊக்குவிப்பதும் மோசமானதாகும். கருணா அணியினர் சிறார்களை பலவந்தமாக பிடிக்கும் நடவடிக்கையை நிறுத்தும்வரை அவாகளது அந்த நடவடிக்கையானது கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டு அம்பலப்படுத்தப்படுதல் அவசியமாகும்.

அரசும் புலிகளும் ஜே.வீ.பி.யும்

புலிகள் இயக்கத்தைப்போன்று மனித உயிர்களுக்கு எந்த விதமான மதிப்பும் அளிக்காத ஒரு அமைப்பிடமிருந்து மக்கள் எவ்விதமான பொறுப்புணர்வையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தமிழ் மக்கள் அதை எதிர்பார்ப்பதும் கிடையாது. அதனால்தான் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ஓடி வருகின்றார்கள். ஆனால் அரசாங்கத்திடம் இருந்து பொறுப்பான செயற்பாட்டை மக்கள் நிட்சயமாக எதிர்பார்பார்கள். அதனை நிறைவேற்றுவதும் அதற்கு தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ளுவதாக நிருபிப்பதும் அவ்வரசாங்கத்தின கடமையாகும். ஆனால் இன்று இலங்கையில் மக்கள் அரசாங்கம் உட்பட எந்த ஒரு அரசியல் சக்தி மீதும் நம்பிக்கை வைக்கத் தயாராக இல்லாத நிலைமையே காணப்படுகிறது. இதனால்தான் மக்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் தமது உயிரைப் பணயம் வைத்து உண்மை நிலைமைகளை வெளியிடுகின்றனர்.

இலங்கையில் தற்போது அரச படையினரால் மேற்கொள்ளப்படும் மோசமான நடவடிக்கைளுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது அரசாங்கத்துக்குள் இருக்கும் சிங்களத் தீவிரவாத கருத்துக் கொண்டவர்களும், ஜே.வீ.பி.யும். ஜாதிக ஹெல உருமயவும் என்பது வெளிப்படையானதாகும். இன்று யார் அரசாங்கப் பாதுகாப்பு படையினருக்கு வக்காலாத்து வாங்குவது என்பதில் ஜே.வீ.பி. ஹெல உருமய ஆகிய இரண்டுக்கும் கடும் போட்டி நிலவுகின்றது. அதில் ஜே.வீ.பி.யின் கை மிகவும் ஓங்கியிருப்பதும் தெரிகிறது.

முன்னைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் அதை சரியாகச் சொல்லியிருந்தார். ‘நான் பதவியில் இருக்கும்போது இந்த இனவாதத் தீவிரவாத சக்திகளை பூட்டி வைத்திருந்தேன். ஆனால் இந்த ஜனாதிபதியோ அவற்றை திறந்து வெளியே விட்டுள்ளார்.’ என்றார். இது மிகச் சரியானது. அது மட்டுமன்றி மகிந்த ராஜபக்ஷ, தான் ஜனாதிபதியாவதற்கு அந்த சக்திகள் தனக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றிக் கடனாக அச்சக்திகள் விரும்பியதைச் செய்யவும் அனுமதித்திருக்கிறார் என்றே கூறலாம்.

அலன் ரொக் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக ஜே.வீ.பி. கொழும்பில் உள்ள ஐ.நா காரியாலத்தின் முன்னால் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ‘நாட்டின் இறைமை மீது கை வைக்காதே’ என்ற கோஷத்தையே பிரதானமாக கொண்டிருந்தனர். நாட்டின் இறைமை மீறப்படுவதாக அவர்கள் கூறுவது எது? கருணா அணியினர் இராணுவத்தினரின் உதவியுடன் சிறார்களைப் பிடிப்பதைப்பற்றி பேசுவது இறைமையை மீறுவதா? இதுபோன்ற நகைப்புக்கிடமான கருத்துக்களை வெளியிட ஜே.வீ.பி. போன்ற அமைபினரால் மட்டும்தான் முடியும். ஜே.வீ.பீயின் கடந்த கால அரசியலை எடுத்துப் பார்த்தால் எப்பொதுழுதுமே சிங்கள மக்களிடையே பீதியைக் கிழப்பிவிட்டு, அதிலிருந்து தாங்கள் அரசியல் செய்வதுதான் வழமை. அதையேதான் தற்போதும் அவர்கள் செய்கின்றனர்.

அரசாங்கத்தினதும், ஜே.வீ.பியினதும். கருணா அணியினரதும் அரசியல் இராணுவ வேலைத்திட்டம் ஒன்றென்றால், கருணா அணியின் இராணுவப் பிரிவினர் இலங்கை அரசபடைகளின் அங்கமாக இணைந்து வடக்கு புலிகளை கிழக்கில் இருந்த விரட்டும் இராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களை அவ்வாறு அரச இராணுவத்தில் இணைப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்று ஜே.வீ.பி. அழுத்தமிட வேண்டும்.

கிழக்கு வாழ் மக்களுக்கு எதிர்காலத்தில் மாகாண சபையின் கீழ் அதிகாரங்கள் பகிரப்பட்டு நிர்வாகம் வழங்கப்படுவதை ஜே.வீ.பி.யும் அரசாங்கமும் நேர்மையாக ஆதரிப்பதாக இருந்தால் அதற்கான ஆரம்ப நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும். கிழக்கில் மாகாணசபை நிர்வாகத்தை ஏற்படுத்தி அதனை முழுமையாக இயங்கச் செய்வதற்கு அரசாங்கம் தனது பாதுகாப்பை வழங்க வேண்டும்.

அதைவிடுத்து கருணா அணியினரை ஒரு ஆயுதக் கும்பலாக வைத்துக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் சகலவிதமான மனித உரிமை மீறல்களை செய்வதற்கு மாத்திரம் பயன்படுத்துவது அரசாங்கத்தினதும் ஜே.வீ.பீ.யினதும் கீழ்த்தரமான கபட எண்ணங்களை வெளிக்காட்டுவதாகவே இருக்கிறது.



எஸ். மனோரஞ்சன் நன்றி: உதயம்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு