கேரளாவும் தமிழ்நாடும் - எது ஆதர்ஸம்?

கேரளாவும் தமிழ்நாடும் - எது ஆதர்ஸம்?

- செங்குட்டுவன்


கேரள மாநிலம் இந்தியாவின் தென்கோடியிலுள்ள ஒரு சிறிய மாநிலம். தமிழ் நாட்டைவிட மிகவும் சிறியதும் சனத்தொகை மிகக் குறைவானதுமான மாநிலமாகும். ஆனால் இந்திய தேசிய அரசியலில் தமிழ் நாட்டைவிட கேரளாவின் பங்களிப்பு எப்பொழுதும் மிக உயர்வாகவே இருந்துவருகிறது.

தற்பொழுது இந்தியாவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பொறுப்பான அமைச்சராக முன்னாள் கேரள முதலமைச்சர் ஏ.கே. அந்தோணி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் கேரளாவைச் சேர்ந்த இ. அகமது வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும், வயலார் ரவி வெளிநாடுவாழ் இந்தியர் அமைச்சராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி அண்மையில் இந்தியாவின் புதிய வெளியுறவு செயலராக நியமனம் பெற்றிருக்கும் சிவசங்கர் மேனனும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் எம். கே. நாராயணன், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி. கே. நாயர் ஆகியோரும் கேரளத்தவர்களே.

இதுதவிர தொழில்துறைச் செயலர் கோபாலகிருஷ்ணபிள்ளை, றோ (சுயற) இயக்குனர் ஹோர்மிஸ்தரகன், இஸ்ரோ தலைவர் ஜி. மாதவன் நாயர் மக்களவை செயலர் தங்கப்பன் ஆஜாரி ஆகியோரும் கேரளத்தைச் சேர்ந்தவர்களே.

இன்றைய இந்திய அரசிலும் அரசியலிலும் பெரும் செல்வாக்குச் செலுத்திவரும் இடதுசாரிக் கட்சிகளில் பெரிய கட்சியான மார்க்ஸிஸ்ட் கம்ய+னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தும் கேரளத்தவர்களே. அக்கட்சியின் தலைமையிலான அரசே இன்று கேரளாவில் ஆட்சி அதிகாரத்திலும் இருக்கின்றது.

ஜவகர்லால் நேரு இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக புகழுடன் இருந்த கிருஷ்ணமேனன்கூட கேரளமாநிலத்தைச் சேர்ந்தவரே. ஒரு காலத்தில் இந்தியாவின் ஐ.ஏ.எஸ் பதவிகளை மேனன் சேர்வீஸ் என்று அழைப்பதுண்டு. அவ்வளவு தூரம் இந்நிய நிர்வாக சேவையில் கேரளத்தவர்களின் ஆதிக்கம் நிறைந்து இருந்ததுண்டு.

90 வீதத்துக்குமேல் படிப்பறிவு உள்ளவர்கள் நிறைந்த இந்தியாவின் முன்னணி மாநிலமாக கேரளா திகழ்கின்றது. கேரளாவின் கலைகளும், இலக்கியமும், சினிமாவும் உலகின் முன்னணி வரிசையில்வைத்து போற்றப்படுகின்றன.

இந்திய மாநிலங்களின் முதலாவது கம்ய+னிஸ்ட் அரசாங்கம் 1957ல் இ. எம். எஸ். நம்ப+திரி பாத் தலைமையில் கேரளாவில் அமைந்தது. அதிலிருந்து கேரளாவின் அந்தஸ்து இந்திய தேசிய அரங்கில் வளர்ச்சியை நோக்கி ஏறத்தொடங்கியது.

அதேவேளை கேரளாவைவிட பெரிய மாநிலமான தமிழ் நாட்டில் 1967ல் சி. என். அண்ணாதுரை தலைமையில் முதலாவது திராவிட அரசாங்கம் அமைந்தது. அதுமுதல் தமிழ் நாடு எல்லாத் துறைகளிலும் வீழ்ச்சியை நோக்கி செல்வதுடன் தேசிய அரசியலில் செல்வாக்கையும் இழந்துவருகின்றது. தமிழ்நாட்டு அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றாலும் அப்பதவிகள் அதிகாரமற்றவையாகவும் பணம் தேடுவதற்கான ஏணிப்படிகளாகவுமே இருந்துவருகின்றன.

மலினமான சினிமா கலாசாரமும் திராவிட மாயையில் அமைந்த வெற்றுக்கோஷங்களும் தமிழ் நாட்டை பாதாளத்தில் தள்ளிவருகின்றன.

தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் பின்பற்றும் குறுகிய தமிழ் தேசிய வாதமே தமிழக மக்களின் வளர்ச்சிக்கு தடைக்கற்களாக இருந்துவருகின்றன. அதேவேளை கேரள மக்கள் மலையாள தேசிய உணர்வில் ஊறித்திழைத்தாலும் குறுகிய பிராந்திய வாதத்தை நிராகரித்து தேசிய ரீதியான கட்சிகளான காங்கிரஸ் கட்சியையும் இடதுசாரிக் கட்சிகளையும் ஆதரித்து நிற்பதால் அவர்களது வளர்ச்சி தங்குதடையின்றி முன்னேறிச் செல்கின்றது.

இலங்கைத் தமிழ் மக்கள் கேரளாவுடன் நிறைய ஒத்த தன்மையுடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களது நடை உடை, பழவழக்கங்கள், உணவு முறை எல்லாமே தமிழ் நாட்டைவிட கூடுதலாக கேரளத்தை ஒத்த தன்மைவாய்ந்தன. இலங்கைத் தமிழர்கள் பேசும் தமிழைக்கேட்டு தமிழ்நாட்டவர்கள் நீங்கள் கேரளத்தவரா? என வினவுவதுண்டு. தமிழ் நாட்டில் இட்லியும் தோசையும் பிரதான உணவாக இருக்கையில் இலங்கையின் வடக்கு கிழக்கைப்போன்று கேரளாவிலும் இடியப்பமும் பிட்டுமே மக்கள் கூடுதலாக விரும்பிச் சாப்பிடுவதுண்டு.

இலங்கைத் தமிழ் மக்களினதும் கேரளத்தவர்களினதும் ஒத்த தன்மைகள் குறித்து இலங்கையின் சுவடிகள் திணைக்களத்தில் நீண்டகாலம் பணியாற்றிய எம்.டி.ராகவன் என்ற கேரளத்தவர் ஒரு அருமையான ஆய்வு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

பொதுவாக இலங்கைப் தமிழ் மக்கள் கேரளாவுக்கு அருகில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வந்து குடியேறியதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. (வல்வெட்டித்துறை போன்ற சில இடங்களில் மட்டும் பிற்காலத்தில் அதாவது 1000ம் ஆண்டுகளுக்கு உட்பட்ட ஒரு காலத்தில் - சோழப் பேரரசு வீழ்ச்சியடைந்து அதன் படைகள் சிதறிப்போன சூழ்நிலையில் அப்படையில் இருந்தவர்கள் பிழைப்புத் தேடி இலங்கையின் சில கரையோரங்களில் குடியேறியதாக வரலாறு கூறுகின்றது)

இந்நிலையில் புலிகள் இலங்கைத் தமிழ் மக்களை நோக்கி தமிழ் நாட்டின் பிழைப்புவாத அரசியல் வாதிகளான வையாபுரி கோபாலசாமி, பழ. நெடுமாறன், எஸ். ராமதாஸ், தொல். திருமாவளவன், கொளத்தூர் மணி போன்றவர்களை பின்பற்றும்படி கூறுவது அம்மக்களை விமோசனப் பாதையில் இட்டுச்செல்லுமா? என்பது ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய விடயமாகும். அதேநேரத்தில் குறுகிய தேசியவாத பிராந்தியவாத நிலைப்பாடுகளை விடுத்து கேரள மக்கள்போன்று இலங்கைத் தமிழ் மக்கள் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் ஐக்கியப்பட்டு தமது உரிமைகளுக்காக பாடுபடுவது பயனள்ளது என்ற விசயத்தையும் கவனத்தில் எடுப்பது பயனுள்ளதாக அமையும்.

1 மறுமொழிகள்:

Blogger ஜோ/Joe மொழிந்தது...

ஐயா,
தாங்கள் ஈழத்தவர் என்று தெரிகிறது .மொழி நடை ,உணவு போன்றவை குறித்து நீங்கள் சொன்னது உண்மையே (நாகர் கோவில் காரன் என்ற முறையில் நேரடி அனுபவம்).ஆனால் தமிழகத்தை விட கேரளா முன்னேறியதாகவும் ,வேகமாக முன்னேறி வருவதாகவும் நீங்கள் நிறுவ முனைவது உங்கள் அறியாமையே .கல்வி(இது கூட எழுத்தறிவு மட்டுமே,ஒட்டு மொத்த உயர்கல்வி அல்ல) மற்றும் சுகாதாரத்தில் கேரளா தமிழகத்தை விட சற்று முன்னணியில் இருந்தாலும் ,மற்ற அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னால் நிற்கிறது .

சும்மா எதையாவது குறை சொல்ல வேண்டுமென்று எழுத வேண்டாம் .தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலங்களில் ஒன்று தான்.

5:47 PM  

Post a Comment

<< முகப்பு