வாகரையில் பலியாகும் ஏழைகள்

வாகரையில் பலியாகும் ஏழைகள்

கே. சக்திவேல்- கொழும்பு


08.11.06ல் வாகரையிலுள்ள கதிரவெளிக்கிராமத்தில், இலங்கைப்படையினரின் தாக்குதலால் இறந்த 45க்கும் மேலான அப்பாவித் தமிழ்ப் பொது மக்களின் இறப்புக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் காயமடைந்ததற்கும் காரணம் புலிகளாலும் அரச தரப்பினராலும் வௌ;வேறு விதமாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் என்ன சொன்னாலும் இருபகுதியினரும் பொது மக்களைத் தங்களின் கேடயமாகப்பவிக்கிறார்கள் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. ஆறுமாதக்குழந்தைகள் உட்படப் பல மக்கள் இறந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் காயப்பட்டுமுள்ளார்கள். இந்த மக்கள் அகதிகளாக அந்த இடத்திற்கு வந்தவர்கள். பாதுகாப்புக்காக ஒவ்வொரு இடமாக அலைபவர்கள்

இவர்கள் தங்கியிருந்த இடங்களுக்கருகில் புலிகள் தங்கள் படைத்தளங்களை நிறுவி அரசாங்கத்திற்கு எதிராக எறிகணைகளை வீசியதாகவும் அந்தத் தாக்குதலுக்கு எதிராகத்தாங்கள் செயல்பட்டதாகவும் கொழும்பிலுள்ள அரசுதரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த காலங்களில் தமிழ்ப்பகுதிகளில் பொதுமக்களுக்கு நடந்த பல அழிவுகளையும் நோக்கும்போது வேண்டுமென்றே புலிகள் இப்படியான நிகழ்ச்சிகளைச்செய்கிறார்கள் என்பதைப்பொதுமக்களின் வாயிலாகக் கேட்க முடிகிறது. தமிழ்ப்பொது மக்களைப்பாவித்துத் தங்கள் இருப்பைத் தக்க வைக்கப்புலிகள் செய்யும் கொடுமைகளைக் கண்டிக்க முடியாமற் பொதுமக்கள் குமுறுகிறார்கள்.

வாகரையில்வாழும் பொதுமக்கள் வேறு இடம் ஓட முடியாத அன்றாடும் காய்ச்சி ஏழைகள். அவர்களின் உயிரை மதிக்காமல், அவர்கள் வாழும் இடங்களின் அருகில் புலிகள் தங்கள் பாசறைகள் அமைப்பதை எதிர்க்கமுடியாத ஏழைகளைப்பலி கொடுத்து அதன்மூலம் உலக மனித உரிமைச் சங்கங்கள் அரசைக்கண்டிப்பதை வைத்துக்கோண்டு புலிகள் இன்னும் அதிக பணம் சேர்க்கிறார்கள். அண்மிக்கொண்டிருக்கும் மாவீரர் தினத்தின்முன் எப்படியும் அரசை ஒரு இக்கட்டுக்குள் மாட்டவேண்டும், அதைச்சாட்டிக்கொண்டு பணம் சேகரிக்க வேண்டும் என்ற புலிகளின் திட்டத்தின் ஒரு பிரதிபலிப்புத்தான் வாகரைப்படுகொலைகள் என்று கொழுப்பிலுள்ள அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.

தற்போது அரசியல் நிலையில் மிகவும் வலிமையற்ற நிலையில் புலிகள் திண்டாடுகிறார்கள். ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் காலூண்ட முடியாமற் திண்டாடுகிறார்கள்.இந்தியாவிலும் ஒரு சரியான ஆதரவைப்பெற முடியாத புலிகள் இப்படிப் புலிகள் மூலம் தென்னிந்தியத் தமிழர்களின் உணர்ச்சியைத்தூண்டி அனுதாபம் தேடப்பார்க்கிறார்கள். இந்த அனுதாபத்தைப் பணச்சேர்ப்பில் முதலீடுசெய்வார்கள். இந்தக்கொலைகள வைத்துக்கண்ணீர் வடித்துப் புலம் பெயர்ந்த நாடுகளில் பணம் பறிக்கும் இந்தக் கொடுமைகளை மனித உரிமைகளில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பதில்லை.அரசபடையைத் தூண்டிவிட்டு மக்களைப்பலி கொடுக்கும் புலிகளைக் கண்டிக்காமல் அவர்களுக்குத் தொடர்ந்தும் பண உதவி செய்யும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு, இலங்கையில் உள்ள ஏழைத்தமிழர்களில் உண்மையான அனுதாபம் இருக்கிறா என்பது கேள்விக்குரியது.

புலம் பெயர்ந்திருக்கும் தமிழர்கள் புலிகளுக்காகப்பணம் கொடுப்பதை நிறுத்தினால் எத்தனையோ மாற்றங்கள் தமிழ்ப்பகுதிகள் நடக்கும். தமிழ் மக்களின் வாழ்க்கையில் புதிய வழிகள் திறக்கும். பொதுமக்களை பலி கொடுத்துவாழும் புலிகளின் கேவலமான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழ் மக்கள்தான் இந்த மாற்றங்களைச்செய்ய முடியும். உலகில் எத்தனையோ பெரியமாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இலங்கையில் தொடரும் பிரச்சினையில் புலிகளின் நடத்தைகளைப் பலர் புரிந்துகொண்டுவிட்டார்கள். கடந்த மாவீரர் தினத்திலிருந்து இதுவரை 3000 மேலான தமிழர்கள் இறந்துவிட்டார்கள். தொடரும் போரால் தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது. புலிகளுக்கு இதுபற்றி எந்த அக்கறையும் கிடையாது.

இன்று நடக்கும் இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச சமூகத்தின் பொறுமை எல்லை கடக்கிறது. நோர்வே எரிக் சொல்ஹேய்ம் பேசும்போது இலங்கையில் நடக்கும் கொலைகளால் மிகவும் குழம்பிப் போயிருப்பதாகக்கூறுகிறார். புலிகளின் சுற்றுமாற்று இப்போதுதான் அவருக்குப்புரிகிறது போலும். தன் இனத்தைதானே அழிக்கும் புலிகளைத் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற நினைவுதான் இவர்களை இப்படிச்செய்யத்தூண்டுகிறது. பாசிசத்தின் கொலைவெறியில் ஆறுமாதக்குழந்தைகளையும் பலி கொடுக்கும் புலிகளின் அட்டகாசம் விரைவில் அடங்கும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு