இலங்கை ஜனாதிபதி தினத்தந்தி பேட்டி

இலங்கையைப் பிரிக்காமல் இன்னும் நிறைய அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க தயாராக இருக்கின்றோம்.- ஜனாதிபதி


(தினத்தந்தி நாளிதழுக்கு வழங்கிய பேட்டி)


இந்தியாவில் இருப்பதுபோல் தனித்தனி மாநிலங்களை இலங்கையில் அமைத்தால் தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்குமே? இதற்கு உங்கள் பதில் என்ன?


இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைக்கு கணிசமான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் பிரிக்காமல் இன்னும் நிறைய அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க தயாராக இருக்கின்றோம். அதிகாரப் பகிர்வு பற்றி ஆராய இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக்குழுவை நான் அமைத்துள்ளேன். இக்குழு 3மாதங்களில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். இக்குழுவினர் இந்தியாவுக்குச் சென்று அங்கு மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை ஆய்வு செய்தனர். அவர்களிடம் இலங்கைக்கு ஏற்ற தீர்வை அளிக்குமாறு கூறியுள்ளேன். அரசியல் நிர்வாக அதிகாரங்களை மட்டுமன்றி நிதி அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்க தயாராக இருக்கின்றேன். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் உறுதியாக இருக்கிறோம். மேலும், இந்தியப் பாணி உள்ளிட்ட பல்வேறுபாணி அதிகாரப் பகிர்வுத் திட்டங்களை ஆய்வு செய்து வருகின்றோம். பஞ்சாயத்து ராஜ் திட்டத்தில், கிராமங்கள்வரை அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறோம். மற்றொரு உண்மையையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 60சதவீதத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அதாவது கொழும்பில் வசிக்கிறார்கள். அதுபோல் பெரும்பாலானோர் மலையகத் தோட்டங்களில் வசிக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பதவி வகித்துள்ளனர். மேலும், இலங்கையின் சில பெரும் பணக்காரர்கள் தமிழர்கள் ஆவர். சில பெரிய நிறுவனங்கள் தமிழர்களால் நடத்தப்படுகின்றன. முன்னணி டாக்டர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள்,பொறியியலாளர்களாக தமிழர்கள் உள்ளனர். அவர்களின் சாதனைகளை நினைத்து எங்கள் நாடு பெருமைப்படுகிறது.

இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா உதவ முடியும் என்று எப்படிக் கருதுகிறீர்கள்?


இப்பிரச்சினையில் இந்தியாவின் நிலை எனக்குப் புரிகிறது. இந்தியாவில் ஏராளமான தமிழர்கள் வசிப்பதால் இந்தியாவுக்கு சில நிர்ப்பந்தங்கள் உள்ளன. ஆயினும், சமாதானப் பணியில் மட்டுமன்றி, பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதிலும் இந்தியா தீவிர பங்காற்ற வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். இரு நாடுகளிடையே நீண்டகாலமாக கலாசார உறவு உள்ளது. இலங்கை மக்கள் இந்தியாமீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளனர். இலங்கையில் அமைதியும் வளமையும் நிலவுவது, இந்தியாவுக்கு நல்லது. எனவே, பொருளாதார முன்னேற்றப் பாதையில் இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும். பிரச்சினையைத் தீர்க்க இந்தியா நேரடியாக ஈடுபட வேண்டுமென்பதில்லை. விடுதலைப்புலிகளுக்கு கிடைத்து வரும் ஆயுதங்களையும் நிதியையும் தடுக்கும்வகையில் அவர்களுக்கு எதிராக உலகளாவிய கருத்தை உருவாக்கினாலே போதும். தீவிரவாத விஷயத்தில் அனுதாபம் இருக்கக்கூடாது.

இந்தியாவிடம் ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா?


உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியா முதல்கட்டமாக 10 கோடி அமெரிக்க டொலர் கடன் வழங்கியது. இரண்டாவது கட்ட கடன் இன்னும் வந்து சேரவில்லை.

கச்சதீவை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது கச்சதீவை ஒப்படைப்பீர்களா?


அதற்கான அவசியம் என்ன வந்தது? இரு நாடுகளும் சேர்ந்து தான் கச்சதீவை பகிர்ந்துகொண்டு வருகின்றன. இருநாட்டு மக்களும் கச்சதீவில் நடைபெறும் விழாக்களில் எவ்வித இடையூறும் இன்றி பங்கேற்று வருகிறார்கள்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்கிறது. இதற்கு என்ன தீர்வு?


கடல் எல்லைகளைப்பற்றி மீனவர்கள் அவ்வளவாக கவலைப்படுவது இல்லை. ஆனால், நாம் கடல் எல்லைகளை வகுத்து வைத்துள்ளோம். எனவே, ஒரு நாட்டின் மீனவர்கள் அடுத்த நாட்டு கடலுக்குள் நுழையும்போது அந்த நாட்டு கடற்படை பிடித்துக்கொள்கிறது. இப்படித்தான் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது. இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்கிறது. இது இரு தரப்பிலும் அடிக்கடி நிகழ்கிற சம்பவம். இருப்பினும், உண்மையான மீனவர்கள் விடயத்தில் சர்வதேச சட்டப்படி மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுமாறு இலங்கை கடற்படைக்கு நான் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளேன். ஆனால், இலங்கையின் வடபகுதியில் கடற்புலிகள், மீனவர்கள் போல நடித்து ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கடத்துகிறார்கள். எனவே, நாங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. சிலநேரங்களில் விடுதலைப் புலிகள் இந்தியக் கொடியைப் பறக்கவிட்டுச் செல்கிறார்கள். இது நிலைமையை சிக்கல் ஆக்கிவிடுகிறது. உண்மையான மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்துவது இல்லை. ஆனால், மீனவர்கள் போர்வையில் கடற்புலிகள் நடமாடுவதால் பாதுகாப்புக் காரணத்துக்காக கடுமையாக நடந்துகொள்ள வேண்டியுள்ளது.
சண்டைக்கு நடுவில் மாட்டிக்கொள்ள விரும்பாமல், ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் செல்கிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தி, இலங்கையிலேயே அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தால், அது உங்களுக்கு சாதகமாக இருக்குமே?


இலங்கையிலேயே அகதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது, எனது முன்னுரிமை பணிகளில் ஒன்று. அதற்காக திறந்தவெளி நிவாரண மையங்கள் என்ற பெயரில் தற்காலிக அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த முகாம்களையும் விடுதலைப் புலிகள் தாக்குகிறார்கள். இதனால் அங்குள்ள அகதிகள் பலியாகிறார்கள். இலங்கை மக்களை இந்தியாவுக்கு அகதிகளாக அனுப்புவதற்காக விடுதலைப் புலிகள் இப்படியெல்லாம் செய்கிறார்கள். கடந்த அக்டோபர் 24 ஆம் திகதி நிலைவரப்படி, இந்த ஆண்டு 15ஆயிரம் அகதிகள் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் 27சதவீதம் பேர் 16வயதுக்குட்பட்ட சிறுவர்கள். இது உணர்த்தும் உண்மை என்ன? விடுதலைப் புலிகள் தங்கள் படையில் போரிட சிறுவர்களை வலுக்கட்டாயமாக கடத்திச் செல்கிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்குத்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் அகதிகளாகச் செல்கிறார்கள். ஆனால், நாங்கள் அகதிகள் நலனுக்காக தமிழக அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம். குழந்தை அகதிகள் விடயத்தில்தான் பெரிதும் கவலைப்படுகிறோம். தமிழகத்துக்குச் சென்றுள்ளவர்களில் 150 குழந்தைகள், டிசம்பர் மாதம் தேர்வு எழுத இருப்பவர்கள். அவர்களுக்கு பாடம் கற்பிக்கஈ இலங்கையில் இருந்து 6 ஆசிரியர்களை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளோம். 40 தொகுதிப் பாடப் புத்தகங்களை அனுப்பியுள்ளோம். அவர்களுக்காக சென்னையிலேயே தேர்வு நடத்த கொழும்பு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக அகதிகளுடன் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது.

தினத்தந்தி. 14.11.06

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு