திரு. வீ. ஆனந்தசங்கரி யுனஸ்கோ விருது ஏற்புரை

இலங்கையில் பிறக்கப்போகும் ஒவ்வொரு குழந்தையும் யுத்தத்தையும், பயங்கரவாதத்தையும், வெறுப்பையும் தவிர வேறொன்றையும் அறிந்திருக்க மாட்டார்கள்.

சகிப்புத்தன்மையும் அகிம்சையும் மேம்படுத்துவதற்கான

யுனெஸ்கோ ஃ மதன்ஜித் சிங் விருது


16.11.06 அன்று பாரிஸ் நகரில் உள்ள யுனஸ்கோ மண்டபத்தில் வழங்கப்பட்ட விருதின் போது திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் வழங்கிய ஏற்புரை

சர்வதேச ஜூரர் சபையின் தலைவர் திரு அன்ரஸ் பாஸ்ரானா அறங்கோ அவர்களே, கௌரவ ஸ்ரீ மதன்ஜித் சிங் ஜீ அவர்களே, மேதகு பிரமுகர்களே, சீமாட்டிகளே, கனவான்களே!

ஆயுபோவன், உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். இன்று இந்த நிகழ்ச்சியில் சமூகமளிக்க இயலாது போன யுனெஸ்கோ பணிப்பாளர் நாயம் திரு. கொய்சிரோ மட்சூரா அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

சகிப்புத்தன்மைக்கும் அகிம்சைக்கும் எனக்களிக்கப்பட்ட இந்த யுனெஸ்கோ மதன்ஜித் சிங் விருதானது தனிமனித சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு நான் மேற்கொள்ளும் போராட்டத்திற்கும் அகிம்சையை பேணுவதற்கு எனக்குள்ள ஆர்வத்திற்கும் கிடைத்த ஒரு கௌரவமாக கருகின்றேன்.

மகாத்மா காந்தியிலிருந்து மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா வரை தமது இதயங்களில் அமைதியை நோக்காக கொண்டே தமது மக்களின் உரிமைகளுக்காக போராடினாhர்கள். அவர்கள் அடைந்த வெற்றியானது ஜனநாயக ரீதியாகவும், சாத்வீக வழிகளிலும் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் எனது சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் பெரும் ஊக்குவிப்பாக இருந்தது என்று கூறலாம்.

சகிப்புத்தன்மையின்மையும், பிரிவினைவாதமுமே ஒருவரிலிருந்து இன்னொருவரைப் பிரித்து இனவாதக் கோட்பாடுகளுக்கு வழிவகுத்தன என்பதை நான் இங்கு முதற்கண் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஒருவர் வேற்று மொழியை பேசுபவராகவும், வேற்று மதத்தை பின்பற்றுபவராகவும், வேறொரு நிறம் கொண்டவராகவும் இருக்கலாம். எனினும் அத்தகையதோர் பற்றிய புரிந்துணர்வு இன்மையே உலகளாவிய ரீதியில் முரண்பாட்டுக்கான மூல காரணம் என இங்கு குறிப்பிடலாம்.

மனிதர்களுக்கிடையேயோ, சகோதரர்களுக்கிடையேயோ தோன்றும் பிரச்சினைகள் வன்முறைகளுக்கு இட்டுச் செல்லப்படுவதை நான் கண்டுள்ளேன். ஒரு குழந்தையை போட்டி மனப்பான்மையுடனேயே வளர்க்கின்றோம். வாழ்க்கை எத்தகைய அழகியதொன்றெனக் காட்டுவதை விடுத்து பொருளும், செல்வமும், அதிகாரமும் முக்கியமானதென நாம் அவர்களுக்குப் புகட்டுகின்றோம். வாழ்க்கை என்பது சகல பொருட்களையும் கொண்ட ஒரு பெரும் சந்தையைப் போன்றது. அவை யாவற்றையும் பணமிருந்தால் எம்மால் வாங்கிக்கொள்ள முடியும். எனவே அதிக மகிழ்வினை பெறுவதற்காக முடிந்தளவு பொருட்களை வாங்குவதற்கு தேவையான பணத்தை அடைவதே வாழ்வின் நோக்கமாக இருக்கிறது. அந்த முறையில் சில விதிகளை மீற நேரிட்டாலோ, சில நண்பர்களை புண்படுத்தினாலோ அது பெரிதாக கருதப்படுவதில்லை. அவை எம்மிலோ நாம் அவற்றிலோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டா. எனவே “ அனைவரின் தேவைக்கும் உலகில் இடமுண்டு. ஆனால் அனைவரின் பேராசைக்கும் உலகில் இடமில்லை” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிகாரப் போட்டியிலும் இதே உதாரணம் பொருந்தும். வாழ்க்கை என்பது பகிர்ந்து கொள்ளப்படுவதேயன்றி மேலதிகமாக எடுத்துக் கொள்வதற்கல்ல. ஆளுவதை விடுத்து சேவை புரிவதற்கும், வெறுப்பை விடுத்து அன்பு செலுத்துவதற்கும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் நண்பர்களாக. ஒரு குடும்பத்தவர்களாக, ஒரு நாட்டின் பிரஜைகளாக, இந்த பூமித்தாய் பெற்ற புதல்வர்களாக ஒருமித்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

சுயநலமிக்க செயற்பாடுகளும் ஆட்சி புரிவோரின் குறுகிய தன்னிச்சையான கொள்கைகளும் சமாதானத்தையும், சகிப்புத்தன்மையையும், அகிம்சையையும் மேம்படுத்துவதற்கு தடையாக உள்ளன. எனினும் கல்வியானது சமாதானம் மற்றும் சுதந்திரத்தை கட்டியெழுப்புவதற்கான அத்திவாரங்களான மனித உரிமையையும் மாண்புகளையும் மதிப்பதற்குமான ஒரு பாரிய சந்தர்ப்பத்தை எமக்கு தருகிறது.

ஒரு முன்னாள் ஆசிரியன் என்ற வகையில் சமாதானத்திற்கான கல்வி என்பது வாழ்வுக்கான கல்வி என நான் நம்புகின்றேன். எனவே கல்விக்கான ஒரு முதன்மை நிறுவனம் என்ற வகையில் ஜனநாயகம், நல்லாட்சி, சகிப்புத்தன்மை, மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் நீதி ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்று எமது சந்ததியினர் இந்த அதியுயர் கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு நான் யுனெஸ்கோ நிறுவனத்தை வேண்டிக்கொள்கின்றேன்.

ஜூரர் சபையின் மாண்புமிகு தலைவர் அவர்களே, மாண்புமிகு பிரதி பணிப்பாளர் நாயகம் அவர்களே, மாண்புமிகு ஸ்ரீ மதன்ஜித் சிங் அவர்களே, மேதகு பிரமுகர்களே!

இன்று உலகெங்கணும் நிகழும் வன்முறைகள் பற்றியும் குறிப்பாக எனது சொந்த நாடான இலங்கையில் நிகழும் வன்முறைகள் பற்றியும் சில வார்த்தைகள் கூற விரும்புகின்றேன்.

பொதுவாக எல்லா வன்முறைகளும் “மனித உரிமைகள் மீறல், அநீதி, சகிப்புத்தன்மை அற்ற நிலை, பாரபட்சம் காட்டப்படுதல்” ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒருவரின் உரிமைக்காக போராடுவதில் எவ்வளவு தான் நியாயங்கள் இருப்பினும் வன்முறையென்பது மேலும் வன்முறைக்கே வித்திடும் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஓர் உண்மையாகும். ஒரு முறை வன்முறை ஆரம்பிக்கப்பட்டால் அது “வெறுப்பு”, “அவநம்பிக்கை” என்பனவற்றை உருவாக்கி அது நீண்டதோர் போராட்டமாக மாறக்கூடியது. அதுமட்டுமன்றி வன்முறையாளர்கள் மிகவும் பலம் பெற்றவர்களாகவும் மாற்றி விடுவதோடு அவர்களை வழமைக்கு திரும்புவதென்பது இயலாததொன்றாகிவிடும். அவர்கள் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக ஆயுதக்கடத்தல், போதைப் பொருட்கள் நிதி சேகரிப்பு ஆகிய முயற்சிகளில் ஈடுபடுவர். இது ஒரு பெரும் தொழிலாகி இதனை நிறுத்துவதென்பது இயலாத ஒன்றாகிவிடும். இதுவே இன்று இலங்கையில் நடக்கிறது. ஒருபுறம் எம்போன்ற சில நடுநிலையாளர்கள் பொது மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராடிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் இலங்கையிலுள்ள தமிழ் சமுதாயத்தின் பெரும்;பாலாரின் கருத்தைப் பிரதிபலிக்காத தமிழீழ விடுதலைப் புலிகள் என்று தம்மை கூறிக்கொள்ளும் ஆயுதக் குழுவொன்று தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தமிழ் மக்களை பிணைக் கைதிகளாக வைத்திருப்பதோடு மட்டுமன்றி தமது பயங்கரவாதத்தால் முழு நாட்டையுமே திகிலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இவர்கள் தமிழ் மக்களை விடுவிப்பதாக கூறிக்கொண்டு பெற்றோர்கள் ஏதும் செய்ய இயலாது இருக்கும் நிலையில் அவர் தம் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்துகின்றனர். இந்த அப்பாவிச் சிறுவர்கள் தீவிரவாதக் கோட்பாட்டாளர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு தற்கொலை குண்டுதாரிகளாகவும், பீரங்கிக்கு இரையாகவும் மாறுகின்றனர். அதேநேரத்தில் அவர்களின் குழந்தைகள் இவ்வாறு வலுக்கட்டாயமாக தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படாமல் வெளிநாடுகளில் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன், இந்தியா ஆகிய நாடுகளில் பயங்கரவாத இயக்கம் என தடைசெய்யப்பட்ட இந்த ஆயுதக் குழுவானது பிராந்திய தேசிய மட்டங்களில் ஜனநாயக ரீதயில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல தலைவர்களை குறிப்பாக முன்னாள் இந்தியப் பிரதமர், முன்னாள் இலங்கை ஜனாதிபதி, தமிழரான முன்னாள் இலங்கை வெளியுறவு அமைச்சர், பல நடுநிலையான சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள் என்போரை கொலை செய்துள்ளது. இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.

இது தவிர எழுபதாயிரத்துக்கும் அதிகமான போராளிகளும், அப்பாவி பொது மக்களும் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு இரையாகி உள்ளனர். விடுதலைப் புலிகளின் இன சுத்திகரிப்பின் காரணமாக முஸ்லீம் மக்கள் வடக்கிலிருந்து அநீதியான முறையில் விரட்டியடிக்கப்பட்டனர். சுனாமியின் பின்னரும் தமிழ் மக்களை விடுவிப்பதாகக் கூறிக்கொள்ளும் இவர்கள் சுனாமி நிவாரணத்தை பகிர்ந்தளிப்பதற்காக ஒரு இணைந்த அமைப்பு வேண்டுமென கூறி அதன் நிமித்தம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை தாமே அபகரித்து தமது கட்டுப்பாட்டில் வாழும் மக்களுக்கு உரிய முறையில் நிவாரணம் சென்றடையாமலும் செய்தனர்.

ஏ-9 என அழைக்கப்படும் வட பகுதியை இணைக்கும் வீதியின் ஒரு பகுதியாலேயே யாழ் குடாநாட்டுக்கு பொருட்கள் எடுத்துச் செல்லப்படும். அத்தனைப் பொருட்களுக்கும் கடுமையான வரி விதிக்கப்பட்டு வந்தமையால் உணவுப்பொருள், விவசாய சாதனங்கள் உட்பட சகல பொருட்களும் கூடுதலான விலைக்கே விற்கப்பட்டு வந்தன. இவ்வாறு சேர்க்கப்படும் பணம் புலிகள் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள வேண்டிய ஆயுதங்களை பெறவே உபயோகிக்கப்பட்டது.

2001ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மிக அதிக விருப்புரிமை வாக்குகள் பெற்று மாவட்டத்தின் முதல் பிரதிநிதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை எனது சொந்த தேர்தல் தொகுதிக்கும் செல்ல முடியாது தடுத்து எனது உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். அதன் பின்னர் விடுதலைப் புலிகள் வட பகுதியில் வாழும் மக்களுக்கு வாக்குரிமையை மறுத்ததோடன்றி 2005 ல் நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களையும் வாக்களிக்கவிடாது செய்தனர். எனினும் நான் என உள்ளம் ஏற்றுக் கொண்ட கருத்துக்களின்படி வாழ்வதிலிருந்து அச்சம் என்னை தடுக்கும் வயதினை தாண்டிவிட்டேன் எனக் கொள்ளலாம்.

இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களுக்கும் ஏன் இந்த நாட்டிற்குமே இந்த அவலங்களை கொண்டுவந்த விடுதலைப் புலிகளின் அடக்கு முறைகளிலிருந்து இலங்கையிலுள்ள தமிழ் மக்களை மீட்டெடுக்க உதவும்படி சர்வதேச சமூகத்திடம் நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். ஆகவே இந்த நாட்டு வருங்கால சந்ததியினருக்காக அமைதி, சமாதானம், அபிவிருத்தி ஆகிய விடயங்களையிட்டு நாம் மிகவும் தீவிரமாகவும் தாமதமின்றியும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இதனை அடைவதற்கு இங்குள்ள யதார்த்த நிலைகளை பூரணமாக அறிந்திருக்க முடியாத சர்வதேச சமூகத்திடம் வெளிநாட்டிலுள்ள தமிழ் மக்களிடமும் நான் கேட்பது என்னவென்றால் வன்முறை வழிகளில் இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய விளையும் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி மற்றும் உதவிகளை செய்ய வேண்டாம் என்பதேயாகும். வட கிழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எனது கூற்றுக்கு சான்றாக அமையும். அவர்கள் அற்ப காரணங்களுக்காக பேச்சுவார்ததைகளையும் சமரசங்களையும் ஒதுக்கி தள்ள விரும்புவார்கள். ஏனெனில் பேச்சுவார்த்தையின் பின் எடுக்கப்படும் இறுதித் தீர்வானது அவர்கள் இதுவரை காலமும் அடக்கு முறையின் பலனாக ஆனுபவித்து வந்த அதிகாரங்களையும் போதைவஸ்து பயங்கரவாதம் மூலம் அவர்கள் பெற்று வந்த அதீதமான இலாபங்களையும் இல்லாது ஒழித்துவிடும். நிதி, அதிகாரம், கட்டுப்பாடு என அவர்கள் இதுவரை அனுபவித்து வந்த செல்வாக்குகள் அனைத்தையும் ஒரு சமரச தீர்வு இல்லாது ஒழித்து விடும். எனவேதான் வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களையும், சர்வதேச சமூகத்தையும் இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

அதேநேரத்தில் இலங்கை அரசானது சிறுபான்மை மக்கள் ஏற்கக்கூடிய ஒரு சமஷ்டி அரசை முன்வைத்து அதிகாரப் பரவலாக்கலுக்கு வழிகோலும் தீர்மானத்ததை விரைவில் முன் வைக்க வேண்டும். இதுவே இலங்கை மக்கள் அனைவருக்கும் நிலையான தீர்வை வழங்கக்கூடிய ஒன்றாகும்.

மகாத்மா காந்தி அவர்களின் கூற்றுப்படி நேரம் ஒரு நெருக்கமுள்ள நண்பன். ஆனால் அதேநேரத்தில் நேரமும் ஒரு இரக்கமற்ற எதிரியாகவும் மாறக்கூடும். நாங்கள் தக்க நேரத்தில் கருமமாற்றாவிடில் இலங்கையில் பிறக்கப்போகும் ஒவ்வொரு குழந்தையும் யுத்தத்தையும், பயங்கரவாதத்தையும், வெறுப்பையும் தவிர வேறொன்றையும் அறிந்திருக்க மாட்டார்கள். அடுத்த சந்ததியினர் இவ்வாறு அழியும் நிலையில் உள்ளனர். எனது இந்த கருத்திற்காக என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். ஏனெனில் நானும் ஒரு மனிதனே.

சகிப்புத்தன்மையையும் சாத்வீகத்தையும் மேம்படுத்துவதற்காக எனக்கு கிடைத்த இந் அங்கீகாரத்தினையும் விருதினையும் மகிழ்வுடனும் அதேநேரத்தில் மிக மன அடக்கத்துடனும் ஏற்றுக் கொள்கின்றேன். இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்கள் ஒரு கௌரவம் மிக்க இனமாக சமாதானமான அகிம்சை வழிகளை பின்பற்றி தங்கள் உரிமைகளை வென்றெடுக்கும் வரை எமது போராட்டத்தை நானோ எனது ஆதரவாளர்களோ தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ கைவிடாது என நான் உறுதிபட கூறுகின்றேன். இவ்வாறு செய்தால் மாத்திரமே இந் நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லீம், பறங்கியர் ஆகிய பல்வேறு இன சமுதாயத்தை சேர்ந்த பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் “மீண்டும் ஒருமுறை இந்த நிலை வேண்டாம்”, “நாங்கள் அனைவரும் ஒன்றே” எனக் கூறுவர்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு