தோட்டத் தொழிலாளர் தொடர்ந்து போராட்டம்

ரயில் வீதி, மறியல், சத்தியாக்கிரகம், கடையடைப்பு, கொடும்பாவி எரிப்பு


மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டம் நேற்று திங்கட்கிழமை ஏழாவது நாளாக தொடர்ந்தும் இடம் பெற்ற அதேவேளை ரயில் மறியல் போராட்டம் வீதிமறியல் போராட்டம் ஆர்ப்பாட்டப்பேரணி சத்தியாக்கிரகப் போராட்டம் கடையடைப்பு கொடும்பாவி எரிப்பு என்பனவும் இடம் பெற்றுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து காணப்பட்டதுடன் வீதிகளில் இறங்கி கோஷங்களையும் எழுப்பினர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட சில தொழிற் சங்கங்களின் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட்டு தொழிற்சங்க பேதங்களை மறந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் சம்பளவுயர்வு போராட்டங்களை நிறுத்துவதற்கு தோட்டத் தலைவர்களுக்கு பணம் கொடுத்தும் போராட்டத்தை இடை நிறுத்த முயற்சித்த வேளையிலும் அது பயனளிக்க முடியாதளவிற்கு அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சம்பளவுயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சகல சர்வமதத் தலைவர்களும் தங்களது ஆதரவை வழங்கியுள்ளதுடன் வர்த்தகர்களும் தங்களது கடைகளை மூடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை

பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பளவுயர்வை வலியுறுத்தி நேற்று ஏழாவது நாளாகவும் தலவாக்கலை நகரில் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தியுள்ளதோடு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தோட்டத் தொழிலாளர்களின் சாத்வீக போராட்டத்திற்கும் வாழ்வாதார போராட்டத்திற்கும் அரசியல் பேதங்களுக்கப்பால் சர்வமத தலைவர்களும் ஆதரவு வழங்கி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் உட்பட பல தொழிற்சங்க தலைவர்கள் தொழிலாளர்கள் என பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் வெயிலிலும் நகர மத்தியில் திரண்டு நின்றனர்.

ஜனாதிபதி அவர்களே எமது சம்பள உயர்வு போராட்டத்தில் தலையிட்டு தீர்வை வழங்குங்கள்'இனியும் ஏமாற மாட்டோம்' 300 ரூபா உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும்' தொழிலாளியை அடகு வைக்காதே தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' கடைசிவரை போராடுவோம்' போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் தலையிலே கறுப்புப்பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் மறியல் போராட்டம்

தலவாக்கலை புகையிரத வீதியில் மறியல் போராட்டத்தை மேற்கொண்டனர். இதனால் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதம் சுமார் அரைமணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டு தாமதமாகவே புறப்பட்டது. தலவாக்கலை நகர சுற்றுவட்டத்தில் இருந்து சர்வமத தலைவர்களுடன் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களும் பஸ்தரிப்பு நிலையம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.

அதேவேளை புகையிரத நிலையத்திற்கருகில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் அமைச்சர் சந்திரசேகரன் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தொழிலாளர்கள் மீண்டும் ஊர்வலமாக நகர மத்தியில் வந்து வீதி மறியல் போராட்டத்தை மேற்கொண்டு சுமார் 30 நிமிடங்களுக்கு வாகனங்கள் செல்லவிடாது நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இரத்தினபுரி

சம்பள உயர்வு கோரி மலையகத்தில் பல பகுதிகளிலுள்ள தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சில நகரங்களில் கடையடைப்பு இடம் பெற்றது.இரத்தினபுரி கேகாலை மாவட்டத்தில் சகல தோட்டத் தொழிலாளர்களும் தொடர்ந்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு வருகின்றனர். இம் மாவட்டத்திலுள்ள சில தோட்டங்களில் ஆர்ப்பாட்டங்களும் கொடும்பாவி எரிப்பு சம்பவங்களும் ஆங்காங்கே இடம் பெற்று வருகின்றன.

நேற்றுக் காலை 10 மணி தொடக்கம் தொடர்ந்து 2 மணித்தியாலங்கள் இரத்தினபுரி ரில்ஹேன தோட்ட பகுதியைச் சேர்ந்த சுமார் 1500 தொழிலாளர்கள் மாபெரும் எதிர்ப்பு ஊர்வலமொன்றிலீடுபட்டனர். தோட்ட தொழிற்சாலையிலிருந்து ஊர்வலமாக சென்று இரத்தினபுரி - பெல்மதுளை பிரதான வீதியில் கனேகம சந்தி வரை தமது போராட்டத்தினை மேற்கொண்டனர்.

பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்திலீடுபட பொலிஸார் அனுமதி வழங்க மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் தமது போராட்டத்தினை தோட்ட வீதிகளுடன் மட்டுமே மட்டுப்படுத்திக் கொண்டனர்.

உடனடியாக சம்பளத்தை வழங்கு'தொழிற்சங்கமே மௌனம் சாய்க்காதே' தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு அடிமையில்லை' போன்ற பதாகைகளையும் ஏந்திய வண்ணம் போராட்டத்தினை நடத்தினர். இதேவேளை காவத்தை நீலேகம தோட்டப் பகுதியிலும் நேற்று இவ்வாறான ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இறக்குவானை மாரத்தென்ன பலாங்கொடை நிவித்திகலை தோட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் இடம் பெற்றன.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு