வாகரை நோக்கி 2வது நாளாகவும் ஷெல் தாக்குதல்

வாகரை நோக்கி 2வது நாளாகவும் ஷெல் தாக்குதல் 18 பொதுமக்கள் பலி; 3க்கும் மேற்பட்டோர் காயம்


மட்டக்களப்பு வாகரையினை நோக்கி நேற்று இரண்டாவது நாளாகவும் படையினர் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் 10 பொது மக்கள் பலியானதுடன் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வாகரை நோக்கி மாங்கேணியூடாக முன்னேற முயற்சித்த படையினரே கடும் ஷெல் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட வம்மிவெட்டுவான் பாற்சேனை பகுதிகளில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களை அண்டிய பகுதிகளிலேயே ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படையினர் கடலில் இருந்தும் ஷெல் தாக்குதலை நடத்தி வருவதனால் படுகாயமடைந்த மக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 7 மணி முதல் பிற்பகல் வரை படையினர் ஷெல் தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவருகின்றது. ஷெல் தாக்குதலுக்கு அஞ்சி 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாகரை மருத்துவமனையில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் வாகரை பகுதியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20 பொது மக்கள பலியானதுடன் 40 பேர் வரையில் காயமடைந்திருந்தனர். இதேவேளை இரு படையினர் பலி மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான கஜுவத்தை மற்றும் கிருமிச்சை போன்ற பிரதேசங்களில் நேற்றுக்காலை இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு படையினர் பலியானதுடன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்களின் அண்மித்துள்ள பிரதேசங்களில் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் விடுதலைப் புலிகள் இப்படையினரை இலக்குவைத்து ஷெல் மற்றும் மோட்டார் குண்டுத்தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்
இச் சம்பவத்தில் பலியான இராணுவ சிப்பாய்களின் சடலங்களும் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு இதில் காயமடைந்தவர்களும் படைச்சிப்பாய்களும் இவ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து படையினரும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இலக்குவைத்து தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர். படையினரால் ஏவப்பட்ட மோட்டார் குண்டுகளும் மற்றும் ஷெல்களும் விடுதலைப் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளதால் விடுதலைப் புலிகளுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்தனர். குண்டுகள் வீழ்ந்து வெடித்து சிதறுவதால் அப்பிரதேசங்களில் எப்போதும் குண்டுச் சத்தங்கள் கேட்டவண்ணமிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பால்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள அகதி முகாம்களிலும் வீடுகளிலும் ஷெல் மற்றும் மோட்டார் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததினால் 20 அப்பாவி மக்கள் பலியானதுடன் மேலும் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவத்தில் பலியான மக்களின் சடலங்கள் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்த பொதுமக்கள் அனைவரும் இவ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேரினது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வாகரை வைத்தியசாலை டாக்டர் பி. வரதன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 4.00 மணிவரை வாகரை பால்சேனை கதிரவெளி போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் படுகாயமடைந்த அப்பாவிமக்களை வாகரை வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை ஐ.சி.ஆர்.பி. பிரதிநிதிகள் மேற்கொண்டிருந்த போதிலும் பாதுகாப்புப் படையினர் இதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி ஷெல் தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் வயோதிபர்கள் உட்பட இளைஞர் யுவதிகள் பலரும் பலியானதுடன் படுகாயமடைந்திருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் ஈச்சிலம்பற்று மற்றும் சம்பூர் போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்கள்காரணமாக இடம்பெயர்ந்த மக்களும் அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களும் வாகரை பால்சேனை கதிரவெளி போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை ஈச்சிலம்பற்று பிரதேசத்தின் ஊடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட படை நகர்வின் போது விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் உக்கிரமான மோதல் நடைபெற்றிருந்த வேளையில் ஷெல் மற்றும் மோட்டார் குண்டு வீச்சுகளும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு வீசப்பட்ட ஷெல்கள் மற்றும் மோட்டார் குண்டுகள் மக்கள் குடியிருக்கும் அகதி முகாம்களில் வீழ்ந்து வெடித்துள்ளதால் தலா ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மூவர் நான்கு பேர் என்ற அடிப்படையில் பலியானதுடன் படுகாயமடைந்தும் உள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து மக்கள் அல்லோலகல்லோலப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. மேற்படி முகாம்களில் காணப்பட்ட பொருட்களும் சேதமாகியுள்ளன. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு