சோமாதேவி பாடசாலை விடயத்தில்

செஞ்சோலை தாக்குதல் குறித்து சத்தமிட்டோர் சோமாதேவி பாடசாலை விடயத்தில் மௌனம் சாதிப்பதாக குற்றச்சாட்டு

அமைச்சர் கெஹலிய



முல்லைத்தீவில் புலிகளின் செஞ்சோலை ஆயுதப் பயிற்சி முகாம் மீது விமானப் படையினர் தாக்குதல் நடத்திய வேளையில் பாடசாலையொன்று தாக்கப்பட்டு அப்பாவி மாணவிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சத்தமிட்டு கூடிய பலர் கடந்த வியாழக்கிழமை திருகோணமலை கல்லாறு சோமாதேவி பாடசாலை மீது புலிகள் ஷெல் தாக்குதல் நடத்தி அழிவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மௌனம் சாதிப்பதாக பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சாட்டினார். இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் போருக்கு எதிரான அமைப்புகள் என்பவற்றையே அமைச்சர் இவ்வாறு சாடினார்.

நாராஹேன்பிட்டியிலுள்ள தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்; கதிரவெளி மற்றும் வெருகல் ஆகிய பகுதிகளில் அப்பாவி தமிழர்களைப் பணயமாக வைத்துக் கொண்டு புலிகள் கல்லாறு சோமாதேவி வித்தியாலயம் நோக்கி ஷெல் தாக்குதல் நடத்தி உயிரிழப்பு மற்றும் அழிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். இதேநேரம் குறித்த அந்தப் புலிகளின் இலக்குகள் ராடார் கருவிகளின் மூலம் அடையாளம் காட்டப்பட்ட போதும் அங்கு பொது மக்கள் இருக்கும் நிலையில் படையினர் திருப்பித்தாக்கவில்லை.

படையினரை ஆத்திரமூட்டி திருப்பித்தாக்க வைத்துப் பொது மக்களைச் கொல்லச் செய்து சர்வதேச சமூகத்திற்குப் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதாக பிரசாரமொன்றை மேற்கொள்ளவும் அரசாங்கத்தை இக்கட்டான நிலைமைக்குள் தள்ளவும் திட்டமிட்டே புலிகள் சோமாதேவி வித்தியாலயம் மற்றும் கல்லாறு கிராமம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அண்மைக் காலாமாக புலிகள் தமது புதிய யுத்த உக்தியாக அப்பாவி மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து கொண்டு படையினர் மீது தாக்குதல் நடத்துவதைக் கையாண்டு வந்தது நன்கு தெளிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் திருப்பித் தாக்குவது இப்போது கவனமாக கையாளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அவர்கள் எதிர்பார்த்தது நடவாமல் அவர்களின் திட்டம் தோல்வி அடைந்துள்ளது. இதேவேளை இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் உடனடியாக அறிவித்து சோமாதேவி பாடசாலை தாக்குதலுக்குள்ளாகி இருப்பதைக் கண்காணிக்குமாறு கோரிய போதும் இதுவரை யாரும் அங்கு சென்று அது குறித்துக் கவனம் செலுத்த வில்லை.

ஆபத்து நிறைந்த இடத்திற்கு விரைந்து சென்று படையினர் மற்றும் அரச நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்வதிலும் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவதிலும் மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் பிரச்சினைகள் இல்லாத தடையின்றி செல்லக் கூடிய இடங்களுக்குச் சென்று அங்கு புலிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள அவலத்தை உலகிற்கு எடுத்துக் கூற இதுவரை முன்வர வில்லை. இது வேதனைக்குரிய மற்றும் கண்டிக்கத்தக்க விடயமாகவுள்ளது. இதேவேளை மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து ஆயுதங்களை அப்புறப்படுத்த புலிகளிடம் கோருமாறும் அப்பாவி மக்களை ஆயுதங்கள் உள்ள இடங்களிலிருந்து அகன்று செல்லுமாறும் அல்லது புலிகளின் இவ்வாறான நடவடிக்கைகளை உலகிற்கு அம்பலப்படுத்துமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கும் இவர்கள் செவிசாய்க்கவில்லை.

இதனால் இவர்கள் பக்கசார்பாகவும் தங்களுக்கு சாதகமான வகையிலும் நடந்து கொள்வது நன்கு புலப்படுகிறது. செஞ்சோலை விடயம் அரசாங்கத்தினால் உரிய ஆதாரங்களுடனும் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் ஊடாகவும் அது புலிகளின் ஆயுதப் பயிற்சி முகாமென உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் சோமாதேவி வித்தியாலயம் அரச பாடசாலை மற்றும் அப்பகுதி மோதல் தவிர்ந்த இடமாக இருப்பதும் அங்கு அத்துமீறல் தாக்குதல் இடம் பெற்றுள்ளது பற்றியும் கூற வேண்டியுள்ளது என்றார். அமெரிக்கா இச்செயலைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளது. அந்த நாடு பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் நன்கு அடையாளம் கண்டு கொண்டுள்ளது என்றும் மேலும் கூறினார்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு