ஆயிரக்கணக்கான மக்கள் அரசகட்டுப்பகுதிக்கு

யுத்தம் காரணமாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசகட்டுப்பகுதிக்கு வந்தடைந்துள்ளனர்.

புலிகளால் அவர்களின் பாதுகாப்புக்காக மனித கேடயமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தவர்களும் வாகரைப் பிரதேசத்தில் வசித்து வந்தவர்களுமான பெருந்தொகையான தமிழ் மக்கள் தற்போது அங்கிருந்து வெளியேறி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள பனிச்சங்கேணி பிரதேசத்திலுள்ள காவலரண் ஊடாக மட்டக்களப்பு அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ளதாக இராணுவப் பாதுகாப்புத்துறை அறிவிப்பாளர் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு குறித்த வாகரைப் பிரதேசத்திலிருந்து 3500 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் பனிச்சங்கேணி இராணுவ காவலரணை வந்தடைந்து அங்கிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றுள்ளனர்.

மேற்படி வாகரைப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தரைமார்க்கமாகவும் கடல் மார்க்கமாகப் படகுகளிலும் இவ்வாறு தப்பியோடி வந்துள்ளதாக பாதுகாப்புத்தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புலிகளின் கண்காணிப்பிலிருந்து தப்பிவந்துள்ள தமிழ் மக்கள் இராணுவத்தினருக்குக் கூறியுள்ள தகவல்களுக்கேற்ப வாகரைக்கும் கதிரவெளி பிரதேசங்களுக்கு இடையேயுள்ள பகுதிகளில் வாழுகின்ற சுமார் 10000 சாதாரண பொதுமக்களாகிய தமிழர்களை புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் பலாத்காரமாக அப்பிரதேசங்களில் தடுத்து வைத்திருப்பதாகவும் புலிகள் இயக்கத்தினர் தமக்குப் பாதுகாப்பாக மனித கேடயங்களாகவே அந்த மக்களை அப்பகுதிகளில் வன்முறையாகத் தடுத்து வைத்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதேசமயம் இலங்கையின் கிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வாகரைப் பிரதேசத்திலிருந்து ஆயிரம் பேர் வரை வெளியேறி வெலிக்கந்தைப் பகுதியை அடைந்திருப்பதாக இலங்கை இராணுவம் மற்றும் ஐ நா வின் அகதிகள் மறுவாழ்விற்கான அமைப்பை மேற்கோள் காட்டி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். புண்ணியமூர்த்தி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறார்..

அவ்வாறு வந்தவர்களை பேருந்துகள் மூலம் வாழைச்சேனைப் பகுதிக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் கூறினார். வாழைச்சேனையிலுள்ள முகாம்கள் அல்லது அங்குள்ள பாடசாலைகளில் அவர்கள் இன்றும் நாளையும் பராமரிக்கப்பட்டு பின்னர் வேறு இடங்களுக்கு நிரந்தரமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்கள் எவ்வாறு வந்தார்கள் என்கிற தகவல்கள் தம்மிடம் இல்லை என்றாலும் ஏ-15 பாதை வழியாக வராமல் வேறு பாதை மூலமாகத்தான் வந்துள்ளார்கள் எனவும் புண்ணியமூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு