தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு-ஜே.வி.பி.

தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் குதிக்க முஸ்தீபு அரசாங்கத்துக்கு இரண்டுநாள் காலக்கெடு

இலங்கையில் தமது நாளாந்த அடிப்படைச் சம்பளத்தினை ரூபாய் 135ரூபாவில் இருந்து 250 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமெனக்கோரி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் முழுமையான வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 14 வது நாளாகவும் தொடர்கிறது.

தோட்டத் தொழிலாளர்கள் தமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை தமது தொழிற்சங்கப் போராட்டம் தொடருமென கூறிவரும் அதேவேளை இன்று இவர்களின் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றினை நடாத்தினர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு கோரி முன்னெடுக்கப்படுகின்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜே.வி.பி.க்கு ஆதரவான தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளன. தொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு நாள் காலக்கெடுவை இந்ததொழிற்சங்கங்கள் விதித்துள்ளதுடன் மீறும் பட்சத்தில் பொதுச் சேவைகள் நாடளாவிய ரீதியில் ஸ்தம்பிதம் அடையும் என்றும் எச்சரித்துள்ளன.

.தேசிய தொழிற்சங்கங்களில் சம்மேளனத்தின் மேற்படி தீர்மானம் தேசிய நூலக ஆவணாக்கல் கேட்போர் கூடத்தில் நேற்று நடைப்பெற்ற விசேட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் முதலாளிமார் சம்மேளனத்துடன் கைச்சாத்திடாத பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன.

தேசிய தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்றே அனுப்பி வைக்கப்பட்டது.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் முழுமையான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தந்துவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.இந்தக் கடிதத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தினை அரசியல் பகடைக்காயாக இருகட்சிகளும் பாவிக்கிறார்கள் என்ற விமர்சனங்களிற்கு இடமளிக்காது இணைந்து புதிய முயற்சியில் ஈடுபட்டு தொழிலாளர்களிற்கான நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமென சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதன் பின்னர் இன்று கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவர் ஆர். யோகராஜன் அவர்களும் துணைத்தலைவர் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் அவர்களும் சந்திரசேகரனின் கடிதத்தினைத் தொடர்ந்து மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முதலாளிமார் சம்மேளனத்துடனான பேச்சுகளில் உடனடியாக ஈடுபடவிருப்பதாகத் தெரிவித்தனர்.

போராட்டம் தீவிரமடைகிறது

ஆரம்பத்தில் சம்பளவு உயர்வு கோரி மெதுவாக வேலைசெய்யும் போராட்டதில் ஈடுபட்ட சுமார் 4 லட்சம் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தமது கோரிகைகள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே இந்த முழுமையான வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். இதனால் மலையகம் முழுவதும் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளது என்பதுடன் இலங்கையின் தேயிலை உற்பத்தியும் முற்றாக நிறுத்தப்பட்டிருக்கிறது. மலையகமெங்கிலுமுள்ள தேயிலை உற்பத்தித் தொழிற்சாலைகள் அனைத்தும் இழுத்து முடப்பட்டிருக்கின்றன.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு