பயங்கரவாதத்துடன் நெருங்கிய பெயர் அன்ரன் பாலசிங்கம்

கொலைகளையும் வன்முறைகளையும் நியாயப்படுத்திய ஒரு மனிதனின் மரணம் மக்களின் இழப்பாகக் கொள்ள முடியாது

-சத்திரியன்


இந்த நாட்டில் பயங்கரவாதத்துடன் மிகவும் நெருங்கிய பிரபலமான பெயர் தான் அன்ரன் பாலசிங்கம் என்பது. அரசாங்கத்திற்கும் புலிகள் அமைப்புக்குமிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் இயக்கத்தின் அரசியல் நியாயவாதி என்ற பெயரில் அறிமுகமான அன்ரன் பாலசிங்கம் தற்போது சுமார் 43வருடங்களுக்கு முன் ஸ்ரீலங்காவிலிருந்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்பாளராக சேர்ந்து பணி புரிந்தவர். அப்பொழுது இவருடைய பெயர் எஸ்.பி.ஸ்ரனிஸ்லொஸ் என்பதாகும். பிற்காலத்தில் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று இவர் இங்கிலாந்தில் குடியேறிய பின்னரே எஸ்.பி.ஸ்ரனிஸ்லொஸ் என்ற தனது சொந்தப் பெயரை அன்ரன் பாலசிங்கம் என மாற்றியமைத்துக் கொண்டு புலிகள் இயக்கத்தின் நியாயவாதியாக எவ்வாறு மாறினார் என்பது பற்றி எவரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

பிரித்தானிய தூதரகம் கொள்ளுப்பிட்டிக்கு 1963 ஆம் ஆண்டில் மாற்றப்பட்ட பின்னரே எஸ்.பி. ஸ்ரனிஸ்லொஸ் என்னும் பெயரில் ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்பாளராக இந்த அன்ரன் பாலசிங்கம் நியமிக்கப்பட்டார். இவர் வீரகேசரி செய்திப் பத்திரிகையின் செயலகத்திலிருந்து தான் இவ்வாறு பிரிட்டிஷ் தூதரக சேவையில் சேர்ந்துள்ளார். பின்னர் 1972ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வசிப்பதற்காக சென்றார். பாலசிங்கம் எந்தவித விசாப் பிரச்சினையுமின்றி பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்தார். அதன்பின்பு அவர் லண்டனிலுள்ள south bank சர்வகலாசாலையில் படித்தார். அவர் அங்கு தனது கலாநிதிப் பட்டத்திற்கான கட்டுரையாகத் Theory of man என்ற கட்டுரையைச் சமர்ப்பித்தார். இந்தக்கட்டுரைக்காக அவருக்கு கலாநிதிப்பட்டம் கிடைத்தது பற்றி எதுவித தகவலும் இல்லை. லண்டனில் வாழ்ந்த தமிழ் இளைஞர்களுடனான தொடர்பில் பாலசிங்கம் Tamilnations self determination என்ற ஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டார். அந்த ஆங்கிலப் புத்தகத்தை அடியொற்றியே அன்று வெளிவந்த சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி; என்ற புத்தகம் வெளிவந்தது. அந்தப் புத்தகத்தை இலங்கைக்கு கொண்டுவர உதவியவர் கிருஷ்ணனாகும் . கிருஷ்ணனுக்கு அன்றைய தமிழர்விடுதலைக் கூட்டணியின் கொழம்புக்கிளைச் செயலாளராக இருந்த உமாமகேஸ்வரனோடு தொடர்புகள் இருந்தது. உமாமகேஸ்வரனே அன்று புலி இயக்கத்தின் சர்வதேசத் தொடர்புகளுக்குப் பொறுப்பாக இருந்தவராகும். சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி புத்தகம் வெளிவந்த பிறகு திரு உமாமகேஸ்வரன பாலசிங்கத்தை ஒரு தடவை இந்தியாவுக்கு வரும்படி கேட்டிருந்ததோடு அவரது பயணத்துக்கான விமானப் பயணச்சீட்டையும் அனுப்பியிருந்தார்

80களில் புலிகளிலிருந்து உமாமகேஸ்வரன் வெளியேறி புளொட் இயக்கத்தை ஆரம்பித்திருந்தார். உமாமகேஸ்வரன் பிரபாகரன் பிளவு பற்றித்தெரியாத பாலசிங்கம் உமாமகேஸ்வரனைச் சந்திக்கச் சென்றிருந்தார். சென்னைக்கு வந்திருந்த பாலசிங்கம் ஏற்கனவே உமாமகேஸ்வரன் கொடுத்த விலாசத்திற்குச் சென்றபொழுது அங்கே உமாமகேஸ்வரன் இருக்கவில்லை. பிரபாகரன்தான்; இருந்தார். பிரபாகரனுடனான சந்திப்பின் பின் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக மாறிய பாலசிங்கம் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தையும் நியாயப்படுத்தி வந்தார்.

நியாயப்படுத்தமுடியாத புலிகளின் கொடுரம் நிறைந்த கிறுக்குத்தனத்தை நியாயப்படுத்துவதற்கு பாலசிங்கம் தனது வாழ்நாள் முழுவதும் போராடி வந்திருக்கிறார். ஆனால் நிலமைகளின் பரிணாம வளர்ச்சியில் புலிகளுக்கு எந்தவொரு விடயமும் சாதகமாக பின்னர் சாதகமாக அமையவில்லை. சர்வதேச அபிப்பிராயம் புலிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் பொழுது பதில் சொல்லவேண்டிய பாலசிங்கம் மரணத்தினூடாக தப்பிச்சென்றுள்ளார். புலி போன்ற ஒரு பாசிச அமைப்பின் அரசியல் ஆலோசகராக தனது வாழ்நாளின் பின்பகுதியில் இருந்ததை தவிர தமிழ்மக்களுக்காக பாலசிங்கம் எந்தக்காலகட்டத்திலும் கவலை கொண்டவரல்ல.மாவீரர் தின உரைகளின் போது பாலசிங்கம் பேசிய பேச்சுக்கள் அருவருக்கத்தக்கவை. கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவை. விசில் அடிக்கின்ற கும்பல்களை அவர் ரசித்தார். இந்தக் கும்பல்கள் எந்தவிதத்திலும் சிந்திக்கும் நோக்கில் அவர் உரை நிகழ்த்தியதில்லை. இந்தக்கும்பல்கள்தான் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கின்ற சக்திகளாக புலம்பெயர்நாடுகளில் இருந்து வருகின்றன. எல்லாவிதமான பலவீனங்களையும் புலிகள் அமைப்பிற்கு சாதகமாக பயன்படுத்துவதில் அரசியல் நாணயத்தில் மிகவும் பலவீனப்பட்டுப்போன பாலசிங்கம் இறுதியாக புலிகள் அமைப்பை சர்வதே அளவில் பயங்கரவாத அமைப்பாக பல நாடுகள் தடைகளை விதித்தபோது எதுவும் செய்ய முடியாத நிலையில் லண்டனில் இறுதிக்காலத்தில் வாழ்ந்தார். புலிகள் அமைப்பு ஒவ்வொரு தடவையும் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது தனது கொள்கைகளில் இருந்து குத்துக்கரணம் அடித்துக்கொண்டதற்கும் பாலசிங்கத்தின் ஆலோசனைகளே முக்கிய காரணமாக அமைந்தன. பொய்களையும் வீராப்புகளையும் புலிகளின் அரசியலுக்கு முலதனமாக இட்ட பாலசிங்கம் இறுதியில் சர்வதேச அபிப்பிராயங்களில் இருந்து பலிகளை காப்பாற்ற முடியாமல் திணறிப்போனார். புலிகளோடு வாழ்ந்த ஒவ்வொரு காலகட்டங்களிலும் புதிய புதிய தவறுகளை பாலசிங்கம் செய்து கொண்டிருந்தார். வன்னியில் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் தமது தவறுகளை துன்பியல் சம்பவங்களாக பாலசிங்கம் புலிகளுக்காக மன்னிப்புக் கேட்ட பின்னரும் புலிகள் தமது வன்முறைகளை விடவில்லை.

புலிகளின் இன்றைய வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது. ஒரு பாசிச அமைப்பின் அழிவு இராணுவ அழிவினூடாக துரிதப்படுத்தப்படும். வடக்கிலும் கிழக்கிலும் ஒரு இராணுவ வெற்றியை ஏற்படுத்த முடியாத பலவீனமான ஒரு அமைப்பாக புலிகள் தேய்ந்து போயுள்ளார்கள். புலிகளின் கடந்தகால தந்திரோபாயங்கள் காலாவதியாகி விட்டன. புலிகளின் வீழ்ச்சியிலிருந்து புலிகளைப் பாதுகாப்பதற்கு இனி யாரும் முன்வரப்போவதில்லை. விடுதலையின் பெயரால் கொலைகளையும் வன்முறைகளையும் நியாயப்படுத்திய ஒரு மனிதனின் மரணம் மக்களின் இழப்பாகக் கொள்ள முடியாது. பாலசிங்கத்தின் மரணமும் இதுபோன்றதுதான்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு