வவுனியாவில் 5மாணவர்கள் சுட்டுக்கொலை

விடுதலைப்புலிகளால் விவசாய பாடசாலை வளவில் மாமரத்தில் கட்டிவைத்திருந்த சக்திவாய்ந்த கிளேமோரே வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

வவுனியாவில் 5மாணவர்கள் சுட்டுக்கொலை; 10பேர் படுகாயம்- கிளேமோர் தாக்குதலில் 5 படையினர் பலி

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் ஐந்து படையினர் கொல்லப்பட்ட அதேநேரம் அப்பகுதியில் படையினர் நடத்திய கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் 10 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். தாண்டிக்குளம் விவசாயக் கல்லூரி அருகில் ஏ-9' வீதியில் நேற்றுக் காலை 9.45 மணியளவில் கிளேமோர் தாக்குதல் நடைபெற்ற அதேநேரம் அதைத் தொடர்ந்து விவசாயக் கல்லூரிக்குள் நுழைந்த படையினரே மாணவர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

வவுனியாவிலிருந்து நேற்றுக்காலை 9.45 மணியளவில் ட்ரக் ஒன்றில் ஓமந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த படையினர் மீதே இந்தக் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட ஐந்து படையினர் கொல்லப்பட்டதுடன் மூன்று படையினர் படுகாயமடைந்தனர். இவ்வேளையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் விவசாயக் கல்லூரி வளாகத்தினுள் தேசித் தோட்டத்தில் கல்லூரி மாணவர்கள் வெளிக்களப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சென்ற படையினர் அனைவரையும் ஒன்றாகக் கூடுமாறு கூறவே அச்சமடைந்த மாணவர்கள் தங்களை மாணவர்களெனவும் தங்களை எதுவும் செய்ய வேண்டாமெனவும் சிங்களத்திலும் தமிழிலும் கூறியுள்ளனர்.

எனினும், படையினர் மாணவர்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தத் தொடங்கவே மாணவர்கள் கீழே விழுந்து நிலத்தில் படுத்துக் கிடந்தவாறு தங்களை எதுவும் செய்ய வேண்டாமெனக் கெஞ்சி மன்றாடியுள்ளனர். எதையும் பொருட்படுத்தாத படையினர் அவர்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். மாணவர் ஒருவரை வருமாறு கூறி அவர்இ இரு கைகளையும் தூக்கியவாறு சென்றபோது அவரை படையினர் சுட்டுக்கொன்றதாக ஏனைய மாணவர்கள் மாவட்ட நீதிபதியிடம் பின்னர் தெரிவித்தனர்.

படையினரின் இந்தக் கொடூர தாக்குதலில் நான்கு மாணவர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மாணவிகள் உட்பட 11 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் இரு மாணவர்களது நிலை கவலைக்கிடமாயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. படையினர் அங்கிருந்து சென்ற பின்னர் அப்பகுதி மக்களின் உதவியுடன் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆபத்தான நிலையிலிருந்த இரு மாணவர்களும் மேலதிக சிகிச்சைக்காக பின்னர் அனுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மாணவர்களான அச்சுதன் (மட்டக்களப்பு) கோபிநாத் (திருகோணமலை) ரிஸ்வான் முஹமட் (மட்டக்களப்பு) சிந்துஜன் (வவுனியா) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மாணவர்களான சாகிவிபூசன் (திருகோணமலை) யுமைனா (திருமலை) நௌஷாட் (திருமலை) ராகினி (முல்லைத்தீவு) குமுதினி (யாழ்ப்பாணம்) அம்ஷான் (யாழ்ப்பாணம்) சிவாஜினி (யாழ்ப்பாணம்) விமலினி (கிளிநொச்சி9, யோகதாஸ் (வவுனியா) ஆகியோர் படுகாயமடைந்து வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இரு மாணவர்கள் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்குட் படுத்தப்பட்டபோது அங்கு ஒருவர் மரணமானார். கிளேமோர் தாக்குதலிலும் படையினரின் துப்பாக்கிச் சூட்டிலும் கொல்லப்பட்ட ஒன்பது பேரதும் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு அங்கு மரண விசாரணை நடைபெற்றது.

இதன்போது தங்களுக்கு நடந்த கதிபற்றி மாணவர்கள் மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு விபரமாகத் தெரிவித்தனர். இதேநேரம் இராணுவ வாகனத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குதலினால் மரணமான ஐந்து இராணுவ வீரர்களுடைய மரணத்திற்குக் காரணமான விடுதலைப் புலிகளையும் இச் சம்பவத்தை அடுத்து விவசாய பாடசாலை வளவிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு ஐந்து மாணவர்களுடைய மரணத்திற்கு காரணமான இராணுவத்தினரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்குமாறு மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் நகர இராணுவ கட்டளை அதிகாரியான கேணல் பாலித பெர்னாண்டோவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று பிற்பகல் சம்பவ இடத்திற்கு சென்ற நீதிபதி சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளார். ஒரு அதிகாரி உட்பட நான்கு இராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகக் கேணல் பாலித பெர்னாண்டோ நீதிபதிக்கு அளித்துள்ள சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் விவசாய பாடசாலை வளவில் மாமரத்தில் கட்டிவைத்திருந்த சக்திவாய்ந்த கிளேமோரே வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

விவசாய பாடசாலை அதிகாரிகளும் காயமடைந்த மாணவர்களும் தங்கள் வாக்கு மூலத்தில் தெரிவிக்கையில் முதலில் பாரிய குண்டுச் சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து புகைமண்டலம் கிளம்பியது. இராணுவத்தினர் பாடசாலை வளவிற்குள் வேலியை தாண்டிவந்து கையை உயர்த்தியவாறு நின்ற மாணவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்

இந்தத் தாக்குதலில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர். 10 முதல் 15 மாணவர்கள் காயமடைந்தார்கள் என்று கூறியுள்ளனர். கொலைக் குற்றம் செய்தவர்களை கைது செய்யுமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார் தாண்டிக்குளம் விவசாய பாடசாலை அதிபரும் வாக்குமூலமளித்தார்.

இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி பிரேத பரிசோதனையின் பின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பணித்தார்.

thenee.com

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு