ராஜீவ்காந்தி படுகொலை - ஏடுபுரட்டும் புலிகள்

ராஜீவ்காந்தி படுகொலை

ஏடுபுரட்டும் புலிகள்




புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.த அவர்கள் இந்தியாவின் பிரபல செய்தி சேவையான என்.டி.ரி.வி க்கு பேட்டியொன்றை அண்மையில் வழங்கியுள்ளார். அப் பேட்டியில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலையை புலிகள் செய்யவில்லை என்று புதிய புலுடாவை அவிழ்த்துள்ளார். அண்மையில் மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலை வரலாற்றின் துன்பியல் அதற்கு நாங்கள் வருந்துகிறோம் என்று தற்போது கடும் பிணி கண்டிருக்கும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்திருந்தார். இதே என்.டி.ரி.விக்கு வழங்கிய பேட்டியிலேயே பாலசிங்கம் இவ்வாறு தெரிவித்திருந்தார். பாலசிங்கத்தின் இந்த கூற்றுத் தொடர்பில் இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம், இந்திய வெளிவிவகார இணையமைச்சர் ஆனந் சர்மா, ராஜீவ்காந்தி படுகொலை பற்றி விசாரித்த ஜெயின்கமிசன் தலைவர் ஜெயின், முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் கார்த்திகேயன் இவர்கள் உட்பட பலரும் தமது பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்தியிருந்தார்கள். சர்வ சாதாரணமாக இந்தியாவின் பிரதமர் ஒருவரை படுகொலை செய்தது தொடர்பாக பாலசிங்கம் தெரிவித்திருந்த வருத்தம் கடும் விசனத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.

இப்போது புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.த அவர்கள் ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலையை புலிகள் புரியவில்லை என்றும் இதுபற்றி மேலதிக விசாரணை தேவை என்றும் மாய்மாலக் கதையை அவிழ்த்திருக்கிறார்.

மௌனம் சாதிப்பதும், பொட்டுக்கேடு நன்றாக வெளிப்பட்டபின் அதனை துன்பியல் சம்பவம் என்பதும் பின்னர் வருந்துகிறோம் என்பதும். இப்போது தாம் அதனை செய்யவில்லை என்பதும் புலிகள் எவ்வளவு நயவஞ்சகமான சுத்துமாத்து பேர்வழிகள் என்பதை புலப்படுத்துகிறது.

இதற்கு முன்னர் 2002 ஏப்ரலில் வன்னியில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் கேள்விக்கு மேல் கேள்விக்கணைகளை தொடுத்து ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலை பற்றி வினா எழுப்பியபோது பிரபாகரன் பேந்த பேந்த சுற்றுமுற்றும் விழித்துக் கொண்டிருந்த நிலையில் அதுவொரு துன்பியல் சம்பவம் என்று அடியெடுத்துக் கொடுத்தவர் பாசிச ஆலோசகர் ஸ்ரனிசுலசு பாலசிங்கம். இதற்கு முன்னர் ராஜீவ் காந்தி படுகொலை நடந்த சமயத்தில் வன்னியில் நின்றவர் -பாலசிங்கம். ராஜீவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது இந்தியாவின் கதை முடிந்தது என ஆணவமும், திமிர்த்தனமும், குரோதமும் தொனிக்க தனது புலி சகாக்களுடன் அளவளாவியவர்தான் இந்த ஸ்டனிசுலசு

இப்போது அவர் கடும் பிணி கண்டுள்ளாராம். உடல் முழுவதும் புற்றுநோய் பரவிவிட்டதாம். இந்தச் சூழ்நிலையில் நாலைந்து மாதங்களுக்கு முன்னர் ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலை வரலாற்றின் துன்பியல் என்றுரைத்த பாலசிங்கத்தின் கூற்றை அவசர அவசரமாக உயிருடன் புதைத்துவிட்டு இப்போது புதுக்கதை விடுகிறார் சு.ப.த.

இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், மிக முக்கியமான மிக பாரதூரமான விடயங்கள் தொடர்பில் நாளுக்கும் பொழுதுக்கும் ஒவ்வொரு கதை சொல்லும் புலிகளுடன் சேர்ந்து இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு இலங்கை அரசை சர்வதேச சமூகம் கூறுவதுதான் பொருத்தமில்லாத விடயமாக இருக்கிறது.

இத்தகைய ஏடு புரட்டும் பேர்வழிகளுடன் கிளிநொச்சி சென்றும் வெளிநாடுகளுக்கு அழைத்தும் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது எவ்வளவு அர்த்தமில்லாத வியர்த்தமான விடயமென்பதை சர்வதேச சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இதேவேளை புலிகளின் முகவர்களான சில எழுத்தர்கள், இந்தியா மனிதாபிமான பிரச்சினைக்களுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு வழங்கும் உதவிகளைக் கூட அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் வழங்காமல் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வழங்குமாறு பூடகமாக பொடி வைத்து எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி என்பது நேரடியாக சுயாதீனமாக செல்லக்கூடாது அவை புலிகளுடாக செல்ல வேண்டும் என்பதை அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்.

ராஜீவ்காந்தி அவர்களை புலிகள் படுகொலை செய்யவில்லை என்று சு.ப.த சொல்லவருவதன் மூலம் இந்தியாவின் நூறு கோடி மக்களின் பகுத்தறிவை, பொதுப்புத்தியை தமிழ்ச்செல்வன் இழிவுபடுத்த முனைகிறார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது திருக்கூட்டத்தாரையும் தவிர மற்றவர்கள் எவரும் புத்தியில்லாதவர்கள் என்பது போல் இந்த கருங்காலி கூட்டத்தின் பேச்சாளர் சு.ப.த சொல்ல வருகிறார்.

பிரபாவும், பொட்டுவும் இந்திய நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள். ஜெயின் கமிசன் விசாரணை ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலை தொடர்பான பல விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் தலைமையிலான புலனாய்வுத்துறை படுகொலையின் மர்ம முடிச்சுக்களை அக்குவேறு ஆணிவேறாக அவிழ்த்தெடுத்தது.

இத்தனை புலமையாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள்,புலனாய்வாளர்கள், நீதித்துறை சார்ந்தவர்கள் ஊடாக தெளிவுபடுத்தப்பட்ட விடயத்தை வன்னியில் வதியும் உலக பெயர்பெற்ற பாசிச பயங்கரவாதியின் பிரதிநிதி, 250 க்கு மேற்பட்ட தற்கொலை குண்டுகளை வெடிக்க வைத்த பாசிக பயங்கரவாத இயக்கத்தின் பிரதிநிதி, ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலையை புலிகள் செய்யவில்லை என்று உலகமகா பொய்யை அவிழ்க்கிறார்.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களை படுகொலை செய்துவிட்டு அதனையும் மறுத்தவர்கள் புலிகள். ஆனால் அமிர்தலிங்கம் அவர்களை சுட்டுவிட்டு தப்பிச்சென்ற புலிக் கொலைகாரர் அமிர்தலிங்கத்தின் மெய்பாதுகாவலரால் சுடப்பட்டதனால் குட்டு அம்பலத்துக்கு வந்தது. சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் பத்மநாபாவையும் அவரின் 13 சக தோழர்களையும் பட்டப்பகலில் கோடம்பாக்கத்தில் வைத்து படுகொலை செய்தவர்கள் பல ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களையும் பொது மக்களையும் கொன்று தள்ளியவர்கள், பல தமிழ் தலைவர்களை, கல்விமான்களை உடல் மீதியின்றி அழித்தவர்கள் இந்த கொலைமா பாதகங்களை எப்போதும் ஒப்புக்கொண்டது கிடையாது.

இப்போது மக்களால் கடுமையாக நிராகரிக்கப்பட்டுவருதலும், கிழக்கு அணியினர் பிரிந்து போனதன் பின்னர் ஏற்பட்ட ஆட்பற்றாக்குறை ஆகியன புலிகளின் இருப்பிற்கு சவாலாக எழுந்துள்ளன. எனவே எவ்வழியிலும் தம்மை காவாந்து பண்ணுவதற்கு நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக மீள்வதற்கு மார்க்கங்களை அவர்கள் தேடுகிறார்கள்.

வன்னியில் இன்னுமொரு அதிசயம் நிகழ்கிறதாம். புலிகள் இயக்கத்தில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்கள் மாவீரர் குடும்பங்கள் என அழைக்கப்பட்டு வந்தன. அந்தக் குடும்பங்களை புலிகள் நீண்டகாலம் அலட்சியப்படுத்தி விட்டனர். இப்போது ஆட்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மாவீரர் குடும்பங்களை தூசிதட்டி மினுமினுப்பு காட்ட முனைகிறார்கள். வன்னியில் மாவீரர் குடும்பங்களை கௌரவப்படுத்தல் என்ற பெயரில் - மாவீரர் குடும்ப வரவேற்பு நிகழ்ச்சிகள், மாலை மரியாதைகள,; தாரை தப்பட்டைகள் என தூள் பறக்கிறதாம்.

மறுபுறம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் வீடுகளிலும், வீதிகளிலும் வைத்து புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு உழவு இயந்திரப் பெட்டிகளிலும், கன்ரர் ரக வாகனங்களிலும் ஏற்றிச்செல்லப்படுகிறார்களாம்.

இந்த நிலையிலிருந்தே ராஜீவ்காந்தி படுகொலை மறுப்பையும், இந்தியா உதவ வேண்டும் என்ற புலிகளின் பாசாங்கையும், புரிந்து கொள்ள வேண்டும்.

புலிகள் வேறு, மக்கள் வேறு என்பது இந்தியாவிற்கு நன்கு தெரிந்த விடயம். தமிழ் கல்விமான்கள், ஜனநாயக அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், சாதாரண பொது மக்கள்- இவர்கள் இந்தியா உதவ வேண்டும் என்பது பரந்த சமுதாய நோக்கிலிருந்தே. புலிகளின் சுயரூபம் மக்கள் மத்தியில் சிறிது சிறிதாக அம்பலப்பட்டு வருகிறது.

புலம் பெயர் தளத்தில் அவர்கள் கணிசமாகவே ஆட்டம் கண்டுள்ளார்கள். மாற்றுக் கருத்துக்கள் ஜனநாயகம், மனித உரிமை பற்றிய விழிப்புணர்ச்சிகள் புதிய வீச்சுடன் மேலெழுந்துள்ளன.

அகதித்தமிழன்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு