ரி.பி.சி வானொலியின் ஊடக அறிக்கை
எமது ஜனநாயகக் குரல் எவ்வளவு வலிமையானது என்பதையே இக் கொடுஞ் செயல்கள் எமக்கு உணர்த்துகின்றன.
ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட அன்புத் தமிழ் நெஞ்சங்களே!
தமிழ்பேசும் மக்கள் மீது வன்முறை, பயங்கரவாதம் என்ற இருள் கௌவியுள்ள இச் சூழலில் அம் மக்களை அத் துன்பச் சுமையிலிருந்து விடுவித்து அங்கு ஜனநாயக சூழலை ஏற்படுத்த கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து வந்த உங்களின் பிரியமான வானொலியாகிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கடந்த 24-11-2006ம் திகதி வெள்ளிக் கிழமை நள்ளிரவில் கொள்ளையிடப்பட்டு, சூறையாடப்பட்டுள்ளது.
இக் கொடுமையான, அநாரிகமான சமூக விரோதச் செயலை யார் புரிந்தார்கள்? என்பதை நாம் அடையாளம் காட்டத் தேவையில்லை. வன்முறையினாலும், பயங்கரவாதத்தினாலும், மிரட்டல்களினாலும் மக்களின் குரலை ஒடுக்கி அதன் மூலம் தமது காட்டுத் தர்பார் அரசியலை நடத்தி வரும் ஜனநாயக விரோத சக்திகளின் ஈனத்தனமான செயலே இதுவாகும். சில தொழில் நுட்பக் கருவிகளை திருடுவதன் மூலம் அல்லது அழிப்பதன் மூலம் மக்களின் குரலை ஒடுக்கி விடலாம் என நப்பாசை கொண்டிருக்கும் இச் சமூக விரோத சக்திகள் தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை உணர்த்தும் காலம் அண்மித்து விட்டது.
அன்பார்ந்த நெஞ்சங்களே,
எமது ஜனநாயகக் குரல் எவ்வளவு வலிமையானது என்பதையே இக் கொடுஞ் செயல்கள் எமக்கு உணர்த்துகின்றன. எதிரியின் கோட்டை தகர்ந்து வருவதன் அடையாளமே இதுவாகும். தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைக்காக தமது இன்னுயிரை ஈந்த ஆயிரக் கணக்கான மக்களின் தியாகங்களை நினைவு கூரும் தினம் அண்மிக்கையில் அத் தினத்தைப் பயன்படுத்தி சில சமூக விரோத சக்திகள் தம்மைப் பலப்படுத்தும் கைங்கரியத்தைப் புரிந்து வருகின்றனர். பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட நிலையில் அந் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முடியாத நிலையில் தடுமாறுகின்றனர். ஜனநாயத்தின்பால் அவர்களுக்கு அக்கறை இருக்குமாயின் மக்களுக்கு நிலமைகளை விளக்க ஏன் தயங்குகின்றனர்? இவ் வன்முறையாளர்கள் தமது கொடிய திட்டங்களை நிறைவேற்ற மக்களை இங்கும் கேடயமாக்க முயற்சிக்கின்றனர்.
தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளின்பால் அக்கறையுள்ள மக்கள் இச் சதியாளர்களின் குறுகிய நோக்கங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். இதனை மிகவும் தொடர்ச்சியாக உங்கள் கவனத்திற்கு எடுத்து வந்தது தமிழ் ஒலிபரப்புக் கூட்டத்தாபனம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். இதனை எதிரி நன்கு புரிந்து கொண்டுள்ளான் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இத்தனை வலிமையான குரலை நீங்களே ஆதரித்தீர்கள். நீங்களே உரமி;ட்டு வளர்த்தீர்கள்.
ஜனநாயத்தின் குரல் எத்தனை வலியது என்பதை உணர்த்த நாம் ஆயிரம் வார்த்தைகள் தரப்போவதில்லை. எமது பலத்தை உணர்த்தவேண்டிய தருணம் இதுவாகும். பேச்சுவார்த்தைகளை உருப்படியாக நடத்த முடியாத வங்குறோத்து அரசியலைக் கொண்டிருக்கும் இவ் ஜனநாயக விரோத சக்திகள் தமது தனி மனித காடைத்தனத்தை அரசியலாக்கி உள்ளனர். இதன் பலமும் பலவீனமும் இதுவே. இதைத் தவிர வேறு எதுவும் இவர்களிடம் இல்லை.
வானொலியை மீண்டும் பலமுள்ள வகையில் பாதுகாப்புடன் செயற்படுத்துவதற்கு சுமார் 20000 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்டுகள் தேவைப்படுமென தொழில் நுட்பவியலாளர்கள் கணித்துள்ளனர். சுமார் இரண்டு மாதங்களுக்குள் இதனைப் பூரணமாக மீண்டும் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற பிடிவாதத்தோடு செயற்படுகிறோம். உலகெங்கிலும் வாழும் ஜனநாயக சக்திகள் இவ் வானொலியின் அவசியத்தைப் புரிந்து கொண்டு எமது இலக்கை நோக்கி மீண்டும் பயணிக்க உதவ முன்வர வேண்டும்.
தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
நிர்வாகத்தினர்.
26.11.06
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு