கருணா அம்மானின் மாவீரர் தின அறிக்கை
மாவீரர் தினம் என்பது பிரபாகரனைப் பொறுத்தவரை அது அவரது வாய்ச்சவாடல்களுக்கும், வீரவசனங்களுக்குமான களமாகப் பயன்படுகின்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானின் மாவீரர் தின அறிக்கை
தமிழ் மக்களின் உரிமைக்காகவும், நிம்மதியான வாழ்விற்காகவும் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த எம் மாவீரர்களை நினைவு கூரும் இச்சந்தர்ப்பத்தில் சில முக்கிய விடயங்கள் குறித்து அளாவ அவாவுற்றுள்ளேன்.
உன்னதமான இலட்சியங்களைச் சுமந்து அதற்காக தம் உயிர்களை அர்ப்பணித்த எம் மாவீரர்களின் தியாகமும், அர்ப்பணிப்பும் காலத்தாலும், காவியத்தாலும் மறக்கப்பட முடியாது. தாய் மண்ணிற்காகவும், தன் இனத்திற்காகவும் யாவையும் துறந்து சமர்களம் புகுந்து வீரகாவியமாகி விட்ட எம்மாவீரர்களுக்கு நாம் என்றும் தலைவணங்குகின்றோம். தமிழின வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது எம்மாவீரர்களின் சரிதைகள் . அவர்கள் என்றுமே கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். ஆனாலும் இம்மாவீரர்களின் தியாகங்களும், அர்ப்பணி;ப்புக்களும் இன்று பிரபாகரன் எனும் ஒரு தனி மனிதனின் அதிகார மோகத்திற்கும், ஏதோச்சதிகார வாழ்விற்கும் விளம்பரமாகப் போவதுதான் வேதனை.
தமிழின மக்களின் நிம்மதியான வாழ்விற்காக தம் உயிர்களை துச்சமாக மதித்து வீரகாவியமான மாவீரர்களை எம்மக்களின் நிம்மதியான வாழ்விற்கு இன்று பெரும் தடையாகவுள்ள பிரபாகரனும், அவரது கூட்டமும் நினைவு கூருவது அம்மாவீரர்களின் தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் களங்கப்படுத்துகின்றது. இதனைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மாவீரர்களின் தியாகங்களும், அவர்கள் சுமந்த இலட்சியங்களும் வியாபார, விளம்பரப் பொருட்களாகிவிட்டன. தம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவும், தமது சுக போக வாழ்விற்காகவும் மாவீரர்கள் விற்கப்படுகின்றனர்;. மாவீரர்கள் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள், போற்றப்பட வேண்டியவர்கள். ஆனால் சில்லறைத்தனமான சிதறல்களாக அவர்களின் தியாகங்கள் விலை போவதுதான் வேதனை. தன் பிறந்த தினத்தின் பெருமையை பேர் சொல்ல பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகங்கள் துணைக்கழைக்கப் படுகின்றன.
மாவீரர்களின் மரணங்கள் சரித்திரங்கள் ஆனால் அம் மரணங்கள் பயங்கரவாதிகளினதும,; அடக்குமுறையாளர்களினதும் அதிகாரத்திற்கும், சுயநலத்திற்குமாக நினைவுகூரப்படுவது நிறுத்தப்பட வேண்டும், எம் பிரிவின் பின்னரும் எம்மக்களுக்காக, அவர்களின் பாதுகாப்புக்காக, நிம்மதியான வாழ்விற்காக எம் பல போராளிகள் துரோகத்தனமாகவும், கோழைத்தனமாகவும் கொல்லப்பட்டார்கள். அவர்கள் சுமந்த அவ்வுன்னதமான இலட்சியங்களுக்காகவே நாம் இன்று களத்தில் நிற்கின்றோம்.
எம் இனத்தின் அச்சமற்ற, நிம்மதியான வாழ்விற்கு இன்று பெரும் தடையாக இருப்பது பிரபாகரனின் தனிமனித அதிகாரப் போக்கும், கொலை வெறியும் தான். இதற்காக நாம் இழந்தவைகள் கொஞ்ச நெஞ்சமல்ல. ஒரு தனி மனிதனின்; இருப்பிற்காகவும், அதிகார மோகத்திற்காகவும் அறிஞர்களையும், சமயக் குரவர்களையும் அப்பாவிப் பொதுமக்களையும் எம் இனம் இழந்துள்ளது. இவ்வவல நிலைமை தொடராமல் எம் மக்களையும், மண்ணையும் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.
மாவீரர் தினம் என்பது பிரபாகரனைப் பொறுத்தவரை அது அவரது வாய்ச்சவாடல்களுக்கும், வீரவசனங்களுக்குமான களமாகப் பயன்படுகின்றது. அவரது யுத்த மோகமும், போர்ப் பிரகடனங்களும் சொல்லளவிலேயே நிற்கின்றதேயன்றி செயலளவில் அல்ல. சென்ற மாவிரர்தின உரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு குறுகிய கால அவகாசம் கொடுப்பதாகவும் அதற்குள் தமக்கான தீர்வு கிடைக்காவிட்டால் போர்ப்பிரகடனம் எனவும் மிரட்டினார். அவர்களின் குறுகிய கால அவகாசம் இன்னும் முடிவடையவில்லை போலும். அதற்கு முன்பும் யாழ் குடா நாட்டை மூன்று தினங்களில் கைப்பற்றுவோம் என வீரப்பிரதாபம் பேசியவர்களின் நிலை என்னவானது என்று அனைவருக்கும் தெரியும். பொறுமை என்னவென்றே தெரியாதவர்கள் எம் பிரிவின் பின் பொறுமையின் உண்மையான பெறுமதியை உணர்ந்திருக்கின்றார்கள். பிரபாகரனின் வீரவசனப் பேச்சில் சமீப காலமாக புலி உறுப்பினர்களே நம்பிக்கை இழந்துவிட்டனர். சமீப கால மோதல்களில் பெற்ற மோசமான அனுபவமும், திறமையான தலைமைத்துவமும், உரிய வழிகாட்டலும் இல்லாமல் பெற்ற தோல்விகளும், இலக்கில்லாத மோதலும் புலி உறுப்பினர்களை விரக்திக்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் அவர்கள் தம் வீடுகளுக்கு தப்பிச் செல்வதுடன் எம்மிடமும் அரச படைகளிடமும், சரணடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தெளிவான இலட்சியமும், உரிய இலக்குமில்லாமல் புலிகள் இயக்கம் தன் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றது.
இதற்கு இப்போது புலிகள் கிழக்கில் அடைந்துள்ள பின்னடைவு தக்க சான்றாகும். கிழக்கு மக்களினால் எப்போதே நிராகரிக்கப்பட்டு விட்ட புலிகள் இராணுவ ரீதியிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்து தமது பலத்தை வெறும் மூன்று கிராமங்களுக்கு மட்டுமே மட்டுப் படுத்தியிருக்கிறார்கள். இங்கிருந்தும் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு மிக விரைவில் கிழக்கு மண் எம் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும். எம் மண்ணை ஆக்கிரமிக்து எம்மக்களுக்கெதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு முடிவு காணும் காலம் அண்மித்து விட்டது.
அதன் பின் எத்தடைகளும் இன்றி எம்மக்களின் அடிப்படை பிரச்சினையையும், அபிலாசைகளையும் பூர்த்தி செய்வதற்கான அரசியல் ரீதியான எம்பயணம் வெற்றிகரமாக முன்னெடு;க்கப்படும். எம் வளர்சியானது விரோதிகளினதும், துரோகிகளினதும் எதிர்ப்புக்களை உடைத்தெறிந்து எம் போராளிகளின் அர்ப்பணிப்பிலும,; எம்மக்களின் ஆதரவினாலும் அபரிமிதமாக முன்னேறி வருகின்றது. எம்மக்கள் தமது பிரதிநிதிகள் என்னும் மகுடத்தை எமக்கு சூட்டியுள்ளனர். இதற்காக நாம் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட இழப்புகளும், வலியும் ஏராளம். நாம் கடக்கப் போகும் பாதையும் பூக்கள் தூவப்பட்ட பாதையல்ல என்பதும், முட்கள் நிறைந்த பாதை என்பதையும் நாம் நன்கறிவோம். இருந்தும்; எம்மக்களுக்காக, எம்மக்களின் நிம்மதியான வாழ்விற்காக நாம் அவற்றை இன்முகத்துடன் எதிர்கொள்வோம். இன்று நாம் அரசியல் ரீதியாக அடைந்துள்ள இப் பரிணாமமானது. இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வோ, நிரந்தர சமாதானமோ எம்மை விடுத்துச் சாத்தியமில்லை. என்பதை சம்மந்தப்பட்ட அனைவருக்கும் உரத்துக் கூறுகின்றது. எம்மூடாக எம்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாத எதவும் செல்லாக் காசுதான்.
பிரபாகரனும் அவரது கூட்டமும் இப்போது நடத்திக்கொண்டிருக்கும் பிழைப்புவாதப் போரில் பொதுமக்களே மையப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ். குடாநாட்டில் 6 இலட்சம் தமிழ் மக்களையும், வாகரையில் 30 ஆயிரம் தமிழ் மக்களையும் மனிதக் கேடயங்களாகவும், பணயமாகவும் வைத்து தம்மை மட்டும் பாதுகாக்கும் பிழைப்புவாதப் போரில் ஈடுபட்டிருக்கின்றனர். குடாநாட்டு மக்கள் எதிர்நோக்கியிருக்கும் மனிதாபிமான, மனித அவல நெருக்கடிக்கு களமமைத்தவர்கள் புலிகள்தான் என்பதை மக்கள் நன்கறிவர். தமது வருவாயை மட்டும் முன்னிலைப்படுத்தி ஏ9 பாதையை திறக்கும் படி வற்புறுத்தும் புலிகள் குடாநாட்டு மக்கள் தம் மக்கள் என்ற உணர்விலருந்தால் அம் மக்களுக்கு எவ்வகையிலேனும் அத்தியாவசிய, அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதற்கு இணங்கியிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் கடல் வழியாக குடாநாட்டிற்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு பாதுகாப்புத்தரவாதம் இல்லையென்பதும், ஏ9 பாதையினூடாக ஓரே தடவையில் போதுமான உணவுப் பொருட்களை அனுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதும்; குடாநாட்டு மக்கள் புலிகளின் சுரண்டல்களுக்கு மாத்திரமே அன்றி அம்மக்களின் நலனிலோ, அபிலாசைகளிலோ எவ்வித அக்கரையுமில்லை என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது.
இதே போன்று வாகரையிலும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தமது அடிப்படைத் தேவைகளுக்காகவும் 30,000 மக்கள் மனிதக் கேடயங்களாக்கப்பட்டுள்ளனர். அம்மக்களின் அவலங்களும், அழுகுரல்களும் பிரபாகரனின் உள்ளத்தை இளக வைக்கவில்லை. பிரபாகரனும் அவரது கூட்டத்தினருக்கும் தமது பாதுகாப்பு, இருப்பு, தேவைகளே முன்னிலைப் படுத்;தப்பட்டு மக்கள் இரண்டாம் பட்சமாக்கப்படும் துர்ப்பாக்கியம் தொடர்கதையாகின்றது. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். எம் மக்களின் நலன்களும், பாதுகாப்பும், அபிலாசைகளும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். எம்மக்களின் விரோதிகளும், பயங்கரவாதிகளும் ஓரங்கட்டப்பட வேண்டும்.
இவ்விடயத்தில் அரசாங்கத்திற்கும், சிங்கள சகோதரர்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் முக்கிய கடப்பாடு உண்டு. பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களை பிரித்துப் பார்க்க வேண்டும். யாழ்ப்பாணத் தமிழ் மக்களாயினும், மட்டக்களப்புத் தமிழ் மக்களாயினும் அவர்களும் இந்நாட்டின் குடி மக்களே. பயங்கரவாதிகளினால் பணயமாக, மனிதக் கேடயங்களாக்கப்படும் தமிழ் மக்களை விரைவாக மீட்டெடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் எதிரான நடவடிக்கையில் எவ்வகையிலும் தமிழ் மக்களோ ஏனைய சகோதர இன மக்களோ பாதிக்கப்படக் கூடாது. நெருக்கடியில் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கான மனிதாபிமான, அடிப்படை வசதிகளை அரசாங்கம் துரித கதியில் மேற்கொள்ள வேண்டும். இதில் ஏற்படும் காலதாமதம் பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பாகவும், மக்களுக்கு வெறுப்பையும், சலிப்பையும் ஏற்படுத்தும் என்பதை மறந்து விடக்கூடாது. வடக்கு-கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை பாகுபாடின்றி பிரபாகரனி;ன் அடக்குமுறையில் இருந்தும், கொலைக் கலாச்சாரத்திலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாமும் அடக்குமுறையில் இருந்து வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற மக்களை மீட்டெடுக்கவே போரிடுகின்றோம். எமது ஆயுதப் போராட்டத்தின் எல்லை வரையறுக்கப் பட்டது. எம் எல்லையை நாம் அடைந்தவுடன் நாமாகவே எம் ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்து விடுவோம். நாம் ஆயுதங்களுடன் என்றும் தோழமை பூண்டிருக்க வேண்டுமென்றோ, அடைய முடியாத இலட்சியங்களுக்காக அர்த்தமற்ற ஆயுதப் போரொன்றை தொடர வேண்டுமென்றோ என்றுமே எண்ணியதுமில்லை, விரும்பியதுமில்லை. நாங்கள் இன்று சுமந்திருக்கும் ஆயுதம் நாங்களாக விரும்பியதல்ல, நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம். எம் மக்களின் அச்சமற்ற, நிம்மதியான வாழ்வு தம் தாயக பூமியில் உறுதிப்படுத்தப்படவும், சகோதரத்துவம் நிலைநாட்டப்படவும், ஜனநாயக நீரோட்டத்தினூடான எமது அரசியல் பயணத்தை முன்னெடுக்கவும், பிரபாகரனினதும், அவரது கூட்டத்தினதும் அடக்குமுறைக்கும், பயங்கரவாதத்திற்கும் எம்மண்ணில் சமாதி கட்ட வேண்டிய அவசிய, அவசரத் தேவை எமக்கிருக்கிருந்தது. அதனாலேயே நாம் ஆயுதங்களை சுமந்தோம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பாக ஜனநாயக, அரசியல் நீரோட்டத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு அரசியல் கட்சி. எம்மக்களின் பிரச்சினைகளையும், அபிலாசைகளையும் இதனூடாகவே பெற நாம் உறுதி பூண்டுள்ளோம்.
எமது அரசியல் பயணம் வேகமாக முன்னேறி வருகின்றது. எம்மக்களிடமும், சகோதர இன மக்களிடமும் எம்மீதான நம்பிக்கைகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. எம்மக்களை வழிநடாத்த, வழிகாட்ட வெற்றிடமாக இருந்த அரசியல் தலைமைத்துவத்தை நாம் பொறுப்பேற்று விட்டோம். எமது அரசியல் பணிகளும், விஸ்தரிக்கப் பட்டு வருகின்றன. பொத்துவில் தொடக்கம் திருமலை வரை எம் அரசியல் செயலகங்கள் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கும், அடிப்படை விடயங்களுக்கும் தீர்வு காணும் செயற்கூடங்களாக பரிணாமிக்கின்றன. எம்மக்களினால் தமது பிரதிநிதிகள் என்று எமக்களிக்கப் பட்டுள்ள அங்கீகாரத்தை தேசியமும், சர்வதேசமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகளில்; எம்மக்களின் பிரதிநிதிகளின் பிரசன்னங்களும், அவர்களின் அபிலாசைகளும் பூர்த்தி செய்யப்படாத எத்தீர்ப்பும் பயன்தரப் போவதில்லை. அதேசமயம் காத்திரமான தீர்வானது சகோதர இன மக்களின் அரசியல் உரிமைகளையும், அபிலாசைகளையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே எம் நிலைப்பாடு.
அதே சமயம் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தனது அரசியல் தீர்வுத் திட்டங்களை வெளியிட வேண்டும். அத்தீர்வுத் திட்டத்தினூடாக தமிழ் மக்களின் உரிமைகளும், அபிலாசைகளும் எவ்வாறு பேணப்படும் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும். இது அவசியமும், அவசரமுமான பணியாகும். இது குறித்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் மட்டுமன்றி சகோதர இன மக்களுடனும் கலந்தாலோசிக்கப் பட வேண்டும். இவ்வரசியல் தீர்வானது தமிழ் பேசும் மக்களின் உரிமைகளையும், அபிலாசைகளையும் உறுதிசெய்யும் பட்சத்தில் அதற்கு ஒத்துழைப்பவர்களை அணைத்துக் கொண்டும், ஒத்துளைக்காதவர்களை ஓரங்கட்டிவிட்டும் இத்தீர்வானது முன்னெடுக்கப்பட வேண்டும். இதில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புணர்சியுடனும், உடனடியாகவும் காரியமாற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழ் மக்களின் பிரச்சினையானது வெறும் பேச்சளவிலேயே இருக்குமானால் அது பயங்கரவாதிகளுக்கு அனுகூலமாக அமைவதுடன் மக்களிடையே வெறுப்பையும், விரக்தியையுமே விதைக்கும். இதில் அரசாங்கம் உடனடியாக கூடிய கவனமெடுக்க வேண்டும்.
இவைகள் விடயத்தில் புலம் பெயர்ந்து வாழும் எம்மினச் சகோதரர்களுக்குப் பொறுப்பும், கடமையும் உண்டு. நீங்கள் தாயக மண்ணிலுள்ள எம்மக்களின் விடிவுக்காக கொண்டுள்ள அக்கறை உன்னதமானது. எம்மக்களின் விடிவுக்காக உங்களால் வழங்கப்பட்ட உதவிகள் அனைத்தும் எம்மக்களைத்தான் சென்றடைகின்றதா என்பது குறித்து நீங்கள் தெளிவடைய வேண்டும். மக்களின் போர்வைகளில் பயங்கரவாதிகளிடமே உங்களின் உதவிகள் சென்றடைவதனால் எம்மக்களின் சுமைகளும், துயரங்களும் இன்னும் கனமாகின்றதே தவிர தளர்வடையவில்லை. பாடசாலைச் சிறுவர்களையும், அப்பாவி இளைஞர்களையும் கடத்துவதற்கும், கட்டாய ஆயுதப்பயிற்சியளிக்கவுமே உங்களது உதவிகள் பயன்படுகின்றன. நீங்கள் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும் பிரபாகரனிடமும், அவரின் முக்கியஸ்தர்களிடமும் யுத்த களம் சென்று போரிடக் கூடிய வயதில் பிள்ளைகள் உண்டு. ஆனால் இன்று அவர்களின் பிள்ளைகள் எங்கே? யுத்த களத்தில் நின்று போரிடுகின்றார்களா? இல்லையே அவர்கள் பாதுகாப்பாக மேற்கத்தைய நாடுகளில் கல்வி பயில, படிப்பறிவற்ற ஏழைப் பெற்றோரின் பிள்ளைகள் யுத்த முனைகளில் பலி கொடுக்கப்படுகின்றனர். இந்நிலைமை தொடர வேண்டுமா என்று தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டிய கடமை உங்களுக்குண்டு. உங்களின் உதவிகள் இன்று பட்டினியினால் வாடும், வறுமையில் உழலும் எம்மக்களுக்கு கிடைக்கச் செய்யுங்கள். எம்மக்களின் அவல வாழ்விற்குச் முற்றுப்புள்ளி வைக்க உதவுங்கள்.
இதே போன்று புலி உறுப்பினர்களும், அவர்களின் பெற்றோர்களும் இவ்வுண்மையை உணர வேண்டும். உங்களின் பிள்ளைகள் இலக்கின்றி, இலட்சியமின்றி ஒரு தனி மனிதனின் அதிகார மோகத்திற்கு பலி கொடுக்கப்படுகின்றார்கள். யார் பெற்ற பிள்ளை என்பதினால் அப்பிள்ளை யுத்த முனையில் பலி கொடுக்கப்பட தான் பெத்த பிள்ளைகள் பாதுகாப்பாகக் கல்வி பயில்கிறனர். பெற்றோர்களும், போராளிகளும் இப்பாகுபாட்டையும், பாரபட்சத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எம் இளைஞர்களின் பெறுமதிமிக்க உயிர்கள் அநியாயமாகவும், அநாவசியமாகவும் இழக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். எம் மக்களும் தம் தாயக பூமியில் சகோதர இனங்களுடன் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதுடன் உலக மயமாக்கலுக்கேற்ப சமூக பொருளாதார, அபிவிருத்தியுடன் தமக்கான கலை, கலாச்சார, பண்புகளுடனும், மேன்மையுடனும் வாழ வேண்டும். இதனை நோக்கிய எம் பயணத்தில் சமூக விடுதலையை விரும்பும் அனைவரும் கை கோர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.
3 மறுமொழிகள்:
நவம்பர் 19 தோழர் பத்மநாபா பிறந்த தினம்
தமிழ் மண்ணில் கொலை செய்யப்பட்ட பத்மநாபாவா?
தமிழனுக்கு எதிரி தமிழன்தான்...
புரிந்தால் சரி!
Post a Comment
<< முகப்பு