நீங்கள் ஜெனீவாவுக்குச் சென்று எமது மக்கள் யாழ் குடாநாட்டில் எதிர்நோக்கும் மனிதாபிமான பிரச்சினைகளை பற்றி எடுத்தியம்பியபோது உண்மையில் தமிழர்களாகிய எங்களுக்கு மெய் சிலிர்த்தது. இந்த மனிதாபிமான பிரச்சினையை மாத்திரமல்லாம யுத்த நிறுத்த ஒப்பந்தம் 100 வீதம் அமுல்படுத்தப்பட வேண்டும் என நீங்கள் உரைத்தபோது உணர்ச்சி மேலீட்டில் எங்கள் கண்கள் குளமாயின.
நீங்கள் தமிழ் மக்களின் மனித உரிமையிலும், மனிதாபிமானத்திலும் காட்டும் இந்த அக்கறையை விபரிக்க எம்மிடம் வார்த்தைகள் இல்லை. எமது மக்கள், எமது மக்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை மக்கள் மீதான வாஞ்சையை வெளிப்படுத்தினீர்கள்.
அண்ணே நீங்கள் கேட்பதை இந்த அரசு புரிந்து கொண்டதோ என்னவோ நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
2002 பெப்ரவரியில் இருந்து 2006 ஆகஸ்ட் 10ம் திகதி வரை இந்த ஏ9 பாதை உங்களுக்கு ஒரு பொன் முட்டையிடும் வாத்தாக இருந்தது. சவளால் பணத்தை அள்ளி சாக்குகளில் நிரப்பிய காட்சிகள் ஒரு கோடீஸ்வர தமிழரசு உருவாகிறதென்று இறுமாந்திருந்தோம். ஆனால் பாழாய்போன இந்த தமிழ் சனத்திற்கு அது விளங்கவில்லை. அந்த தமிழ்ச்சனம் முணுமுணுத்துக் கொண்டு புறுபுறுத்துக்கொண்டுதான் பணத்தைத் தந்தார்கள். நீங்கள் ஏ9 வீதியால் போகவிடுவதும் போதாதென்று நீங்கள் கேட்கும் பணத்தை வழங்குவதற்கு பஞ்சிப்படும் தமிழ்ச்சனத்தை என்ன செய்வது. இவர்களுக்கு எத்தனை கசையடிகள் கொடுத்தாலும் தகும். பாதாள சிறைகளில், பங்கர்களில் விடுவதும் மிகச்சரியே. ஜெயதேவன், விவேகானந்தனுக்குக் கொடுத்த தண்டனைதான் இந்த புறுபுறுப்புக்காரருக்கெல்லாம் கொடுக்க வேண்டும். புறுபுறுத்தோ கறமுறுத்தோ மிண்டிப்பார்த்த சனங்களையும் வெருட்டி, நலமடித்து எங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் கப்பம் வாங்கும் லாவகம் உலகில் எந்த விடுதலை இயக்கத்திற்கும் வராது பாருங்கள். என்னதான் இருந்தாலும் நீங்க மெத்த படித்த சமூகத்தின் ஏகபிரதிநிதிகள் அல்லவா.
இந்த வீதியில் விரும்பிய போது நீங்கள் விரும்பிய ஆட்களை கடத்திச் செல்ல முடிந்தது. கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த வாகனங்களை தெற்கின் பாதாள உலகத்தையும் உங்கள் முகவர்களையும் பாவித்து வன்னிக்குள் கொண்டு சேர்ப்பிக்க முடிந்தது. எத்தனை தற்கொலை குண்டுதாங்கி அப்பாவிகளை இந்த பாதையின் ஊடாக நாலா திசைகளிலும் அனுப்பி தென்னிலங்கையில் பரவலாக மனித உயிரழிவுகளை ஏற்படுத்த முடிந்தது. யாழ்ப்பாணத்திற்குள் விதைக்கப்பட்ட கிளேமோர்கள் எல்லாம் சென்று சேர்வதற்கு இந்த பாதையல்லவா ஒரு வரப்பிரசாரமாக இருந்தது. கோயிலடியில், ஆஸ்பத்திரியடியில், பஸ் ஸ்டாண்டில், பாடசாலைகளுக்கு அருகில் ,சனசந்தடிமிக்க பண்டிகை நாட்களில், நகரங்களில், சந்தைகளுக்கருகில் வைத்ததன் மூலம் படையினருக்கும், பொலிசாருக்கும், இந்த எளிய நன்றிகெட்ட சனங்களுக்கும் பாடம் படிப்பித்துக் கொண்டிருந்தீர்கள். ஒரு நல்ல பயக்கெடுதியையும் ஏற்படுத்தியிருந்தீர்கள். அதோட இந்த எளிய சனம்தான் குண்டு வைக்கிறார்கள், கிளேமோர் வைக்கிறார்கள் என்று இல்லாததையும் பொல்லாததையும் நன்றாகவே போட்டுக் கொடுத்தீர்கள். உங்களுடைய உச்ச நடவடிக்கையாக யாழ்ப்பாணத்தையும் பிடித்து விடலாம் என்ற பேரவாவில் ஆகஸ்ட் 11ம் திகதி முகமாலையில் ஒரு பின்னேரம் சண்டையைத் தொடங்கினீர்கள். ஆனால் அந்தச் சண்டை அந்தோனியாருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது என்று நீங்கள் சொல்லுமளவுக்கு நீங்கள் கருதியிருந்த வெற்றி உங்களுக்கு தோல்வியாக மாறியது. அது ஏ9 பாதையில் ஒவ்வொருநாளும் பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த உங்கள் கப்ப வசூலை ஒரேயடியாக வாத்தைக் கொன்ற கதையாக முடிந்து விட்டது.
அரசாங்கத்திடமிருந்து புது வாத்து வாங்கலாமா என்ற நம்பாசையுடன்தான் நீங்கள் ஜெனீவா சென்றீர்கள். உலகத் தமிழினமும், வயிறு வற்றி உலர்ந்த வடக்கு- கிழக்குத் தமிழர்களும் ஏதோ தங்கள் வயிற்றுப் பிரச்சினையையும், உயிர்ப்பிரச்சினையையும் கதைக்கத்தான் நீங்கள் ஜெனீவா சென்றிருக்கிறீர்கள் என்று ஆவலுடன்தான் எதிர்பார்த்திருந்தார்கள். எங்கு பார்த்தாலும் இதே கதைதான். ஆனால் அவர்களுக்குத் தெரியாது நீங்க புது வாத்து வாங்க போயிருக்கிறீர்கள் என்று.
அண்ணே சும்மா சொல்லக்கூடாது. நீங்கள் திரைப்படத்தில் நடித்தால் சிவாஜி கணேசன், கமலஹாசன், மாலன் பிரண்டோ போன்றவர்கள் அட்ரஸ் இல்லாமல் போயிருப்பாங்கள். நீங்கள் எங்கள் மக்கள், எங்கள் மக்கள் என்று உருகியது நீங்கள் அந்த மக்களில் ஒருவராகவே வாழ்ந்து காட்டி நடித்தீர்கள். ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா நாய் வளக்கேல்ல அதுக்கு பதிலா என்னைத்தான் வளத்தா என்ற கமலஹாசனின் சினிமா வசனத்தை விட எங்கள் மக்கள் எங்கள் மக்கள் என்ற உங்கள் டயலக் வாவ் - டாப் - டக்கர் - சுப்பர் - தூள்
1995ம் ஆண்டு நீங்கள் வன்னிக்கு வரச்சொல்லியும் வராம ஆமியிட கட்டுப்பாட்டுக்க யாழ்ப்பாணத்துக்கு திரும்ப சனம் போன போது நீங்க யாழ்ப்பாண சனத்தை வெருட்டி அடிச்சு விட்ட நோட்டீஸ் இன்னும் கைவசமிருக்கு. நீங்க யாழ்ப்பாணத்து சனத்துக்கு அப்ப சொல்லியிருந்தனீங்க சொல்லு கேக்காம போன நீங்க(துரோகியள்) எங்களிட்ட நல்ல பாடம் படிப்பீங்கன்னு.
அண்ணே அநியாயத்தை சொல்லக்கூடாது ,நீங்க அப்பப்ப யாழ்ப்பாண சனத்துக்கு மருந்து குடுக்கிறீங்க. நீங்க சொல்லியிருக்கிறீயளே. இப்ப வெளியுலக தொடர்பு இல்லாம துண்டிக்கப்பட்டிருக்கிற யாழ்ப்பாண சனத்துக்கு கப்பல்ல சாப்பாட்டு சாமான் போனா அடிப்பம் என்று. ஐ.சி.ஆர்.சி க்கும் இந்த வழித்துணை வழங்கும் விபரீத விளையாட்டு வேணாமென்று எச்சரித்திருக்கிறீங்க.
ரிஸ்க் எடுத்து ஒரு ஒப்பரேசன் மாதிரி யாழ்ப்பாணத்துக்கு சாப்பாடு போற மாதிரி பண்ணி வச்சிருக்கிறீங்க சபாஷ். இதுதான் சரியான தமிழீழ விடுதலைப் போராட்டம்.
பெரியண்ண தேசிய தலைவர் விரும்பின மாதிரி உலகம் வியக்கும் தமிழன்ர சுடலையொன்றை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறீங்க. இன்னும் சில வருட மரணங்களில் முழுமையான சுடலை தேசம் உருவாகி விடும். நரகத்துக்கு போன தமிழனும், சொர்க்கத்துக்கு போன தமிழனும் சுதந்திரமான சுடலையை அங்கிருந்து பார்த்து மன நிறைவை எய்துவார்கள். ஏனென்றால் தங்களை போல் வதைபடுதற்கு ஒரு குஞ்சு குருமானும் தமிழீழத்தில் இல்லையென்பதை நினைத்து. அவர்களுடைய ஆன்மாவும் அப்போதுதான் சாந்தியடையும்.
சரியண்ணே கூட போயிட்டனோ தெரியேல்ல, என்டாலும் அண்ணே சில விசயங்கள் சொல்ல வேண்டிகிடக்கு. ஒரு நப்பாசையிலதான்.
அண்ணே நீங்க நூறு வீதம் யுத்த நிறுத்தம் ஒப்பந்தம் கடைபிடிக்க வேணும் எண்டிறயள். எங்கட மக்கள், எங்கட மக்கள் பட்டினி கிடக்கீனம் ,சாகினம் எண்டிறயள் உண்மை! நியாயமா யோசிக்கிற எல்லா மனுசனும் மனுசியும் இதை ஒத்துக் கொள்ளுவினம். ஆனாலும் அண்ணே சின்ன டவுட். நீங்க பகிடிக்கு சொல்லுறீயளா? உண்மையா சொல்லுறீயளா?
நீங்க பகிடிக்கு சொல்லுறீயளா எண்டா இதுல நாங்க கதைக்கிறது வேஸ்ட். உண்மையென்டா சில விசயத்த உங்கட மேலான கவனத்துக்கு கொண்டு வாறோம் அண்ணே.
நீங்க ஏ9 பாதை திறக்கோணும் ஏ9 பாதை திறக்கோணும் என்று ஒரே புடியா நிற்கிறீயள். சரி! ஒரு கதைக்கு ஒத்துக் கொள்ளுவம். ஏனென்டா மனிதாபிமான நெருக்கடி இருக்குது. இது உண்மையிலும் உண்மை. ஊரறிந்த உண்மை. அனுபவபூர்வமான உண்மை. பனங்கிழங்குக்கும், மரவள்ளி கிழங்குக்கும் தவண்டையடிக்கிற நிலவரம் எங்கட ஊருக்குள்ள வந்துட்டுது. அப்ப சாப்பாடு போக வேணும். மருந்து போகவேணும். மண்ணெண்ண, பெற்றோல், டீசல், குழந்தைகளின்ர பால்மா போக வேணும். எல்லாத்துக்கும் மேலால ஆக்கள் போய் வர வேணும்.
அண்ணே உங்களிட்ட களவெடுக்கிற லாவகம் பழகின ஆக்கள் யாழ்ப்பாணத்தில சனத்துக்கு கப்பல்ல வாற சாமானில கொஞ்சத்த கள்ள சந்தைக்கு அனுப்பினம். அது உங்களுக்கும் விருப்பம் என்டது அவைக்குத் தெரியும். சனத்துக்கு சாமான் போறது குடுக்கிறவைக்கு மேல நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கக் கூடாது எண்டதுல நீங்க கவனமா இருக்கிறீங்க. நீங்க வசதியா போய் நின்னு ஜெனீவாவில கதைக்கிறதுக்கு பொயின்ட்ஸ் வேணுமில்ல.
சரி பொன் முட்டையிடும் வாத்துறோட்டுக்கு வருவம். அப்பிடி ஏ9 போய் வாறது எண்டா இப்ப ஓமந்தையிலோ, முகமாலையிலோ கப்பம் வேண்டுறதில்ல, என்ற நிலவரத்த கொண்டு வர வேணும். நீங்க அந்த பாதையால போற வாற ஆட்கள ,பிரயாணிகள கடத்திக் கொண்டு போகாம இருக்க வேணும். இத கண்காணிக்கிறதுக்கு ஆக்கள் வேணும். இது உள்ளுர் ஆக்கள் சரிபட்டு வராது. ஏனெண்டா அவ உங்களுக்குப்யப்படுவினும் நேர்மையா இருந்தாலும் நீங்க உங்கட இரண்டாம் நம்பர்வேலைக்கு பழக்கி போடுவியள். வெளிநாட்டு ஆக்களிருக்கிற யுத்த நிறுத்த கண்காணி;ப்புக்குழு, ஐ.சி.ஆர்.சி போன்றவைதான் இதுக்கு தோது. ஏனென்டா அண்ணே நீங்க நூறுதரம் சொன்னாலும் அண்ணே நீங்க றோட்டில காசு புடுங்க மாட்டயள் எண்டத இந்த எளிய சனம் நம்ப போறதில்ல. தமிழீழ அரசு கோடீஸ்வர அரசாக இருப்பதும் ,தேசியத் தலைவர் சுகபோகமாக வாழ்வதும் இந்த சனத்துக்கு புடியாது. சரியான பொறாம புடிச்ச சனம். ஆனபடியாத்தான் அண்ணே இந்த ஏற்பாடு வேணும். நூறு இருநூறு கண்காணிப்புக்குழு காரர்கள் ஒமந்தையிலும், முகமாலையிலும் ஏ9 பாதையில் ரோந்திலும் இருக்க வேணும் .அப்படி இருந்தாலும் உங்களால சுழிக்கேலும். என்டாலும் அண்ணே ஓரளவாவது அண்ணே, சாமானும் சனமும் பாதுகாப்பா போய் வருது என்றொரு தெம்பிருக்கும். யாழ்ப்பாணத்தின் பட்டினி நிலையும் முடிவுக்கு வரும்.
இன்னொரு பிரச்சினை இருக்கண்ணே, இலங்கையிலிருந்து போத்துகீசர், ஒல்லாந்தர் கறுவா கராம்பு யாவாரம் செய்த மாதிரி ஆங்கிலேயன் வந்து கோப்பி தேயிலை ரப்பர் ஏற்றுமதி செய்தமாதிரி நீங்க பொலிஸ், நீதித்துறை, நிர்வாகம், எல்லாம் வச்சிருக்கிற வன்னி நாட்டில இருந்து நீங்க இப்ப லேட்டஸ்ட்டா கிளேமோர், பார்சல் குண்டு, தற்கொலை குண்டு என நாலா பக்கத்துக்கும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கிறியள். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது போல் உங்களது கப்பல்களில் வெடி மருந்துகளையும், நவீன ஆயுதங்களையும் உலகெங்கும் இருந்து வன்னி நாட்டுக்கு கன கச்சிதமாக கொண்டு சேர்ப்பிக்கிறீர்கள். வன்னி நாட்டு தமிழரசின் வழி காட்டலின் கீழ் வாகனக் கடத்தல், போதை வஸ்து வியாபாரம் என்பன தளைத்தோங்குகின்றன.
அண்ணே, நீங்க இப்படி வெடி குண்டுகளை, தற்கொலை குண்டுகளை தெற்கிற்கு அனுப்புவதால் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் குடியிருக்க விரும்பாமல் வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, கொள்ளுபிட்டி, பம்பலபிட்டி, வத்தளை, நீர்கொழும்பு, மொறட்டுவ, கல்கிசை மலையகம் என போய் வாழும் தமிழ்ச்சனமும் அடிவாங்கக்கூடிய ,எப்போதும் சந்தேக பிராணிகளாக பார்க்கப்பட கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறியள். எனவே இந்த குண்டுகள், துவக்குகள் அனுப்பும் விபரீத விளையாட்டும் கண்காணிக்கப்பட வேண்டும். ஏனெனில் உங்களுடைய இந்த வன்னியிலிருந்து பயங்கரவாத ஏற்றுமதி யாவாரம் நேரடியாகவே பல லட்சம் மக்களை அகதிகளாக்கக்கூடியது. பல ஆயிரம் மக்களை உயிர்ப்பலி வாங்கக்கூடியது.
நீங்க கடந்த ஏப்ரல் மாதம் திருகோணமலை சந்தையில் நடத்திய ஒத்திகை தமிழ் மக்களை பாக்கு நீரிணை தாண்டி இராமேஸ்வரத்தில் கரையொதுங்க வைத்தது.
ஆனபடியா அண்ணே, வன்னியிலிருந்து வெளியில போற வாற வாகனங்கள் ஆட்கள் நன்கு சோதனையிடப்பட வேண்டும் என்பத நேர்மையா மனசத் தொட்டு யோசிச்சா ஒத்துக்கொள்ளுவயள். ஏனென்டா உங்களுக்கு பழக்கதோசம் விடாது பாருங்க. கிட்டடியில மதவாச்சியில பிடிபட்ட வானில செசிக்குள்ள குண்டு வைச்சு அனுப்பினீங்க. பொலிஸ் நாய் அத மணந்து பிடிக்க கூடாதென்டதுக்காக வானுக்குள்ள இறைச்சியை வச்சீங்க. டிரைவர் சிங்களவர். பொலிஸ் புடிச்சுப்போட்டுது. இதேமாதிரி முகமாலைக்குள்ளால போகேக்கேயும் ஆயுதங்கள் பிடிபட்டிருக்கு. காலி கரந்தெனியாவிலும் கிளேமோர் சில மாதங்களுக்கு முன்னர் பிடிபட்டிருக்கு. கதிர்காமத்துக்கு கிட்ட திசமாறாகமவில தற்கொலை குண்டு வெடிக்க வைக்கும் பெண் பிடிபட்டிருக்கு. இலங்கை பாராளுமன்றத்துக்கு பக்கத்துல பத்தரமுல்லவில வச்சும் தற்கொலை குண்டு பெண் பிடிப்பட்டிருக்கு. வத்தளையில் வச்சு ஆயுத லொறி பிடிபட்டிருக்கு, பொரளை சந்தை பகுதியில் பொது மக்களை இலக்கு வைத்து வைக்கப்பட்ட குண்டு பிடிப்பட்டிருக்கு. இப்படி எக்கச்சக்கமா பிடிபட்டிருக்கு. கடலால நடந்ததுகள பற்றி மிக நீண்டு போகும் என்டபடியால் சொல்லேல்ல. நீங்க கெப்பிட்டிகொலாவில 150 சிங்கள கிராம சனங்கள கிளேமோர் கண்ணிவெடியில் ஒரே மூச்சில கொலை செய்தீங்க. இராணுவ தலைமயகத்துக்குள்ள பிள்ளதாச்சி பொம்பிளையை தற்கொலை குண்டுதாரியா அனுப்பி ஆமிக்காரரை கொலை செய்தீங்க. இலங்கை ஆமி கொமான்டர காயப்படுத்தினீங்க. ஹபரணையில லீவில வீட்டுக்கு பஸ்ல வந்த நேவிக்காரர் நூறு பேரை தற்கொலை குண்டு வச்சு கொலை செய்தீங்க. எல்லா இடத்திலேயும் 1983 மாதிரி ஒன்று தமிழருக்கு எதிரா நடக்காதா என்று திரும்பத் திரும்ப ட்ரை பண்ணுறீங்க. சிங்கள சனம் நிதானமா இருக்கிறது. உங்கள கோபபடுத்திச்சு. காலியிலும் போய் அடிச்சு பாத்தீங்க. சரிவரேல்ல. திருகோணமலையில இருந்து காலி வரைக்கும் அடிச்சு இனக்கலவரம் வந்து தெற்கில தமிழர் இருக்கிற இடமெல்லாம் சுடலையாக வேணும் என்று ட்ரை பண்ணுறியள். என்னவோ அண்ணே இது உங்களுக்கு பழக்க தோசமா போச்சு. நீங்க உங்கட ஆக்கள் டக்கென்னு இந்த பழக்க தோசத்த விடமாட்டினம். ஆனபடியா நீங்க பயங்கரவாதத்த ஏற்றுமதி செய்யிற முக்கிய துறைமுகமான ஓமந்தையிலும், முகமாலையிலும் முறையான சோதனை இருக்க வேண்டும். இத சிம்பிளா விட்டுட்டு போக ஏலாது அண்ணே. ஏனென்டா நீங்க இப்ப சொல்லுற நாங்களும் ஒத்துக்கொள்ளுற யாழ்ப்பாணத்து சனம் எதிர்நோக்குற மனிதாபினமான நெருக்கடிய விட பயங்கரமான மனிதாபிமான நெருக்கடி நாடு முழுதும் உருவாகும் அண்ணே. நீங்க சொல்லுறதில அண்ணே முன்னுக்கு பின் முரண்பாடும் இருக்கு. யாழ்ப்பாண சனம் எங்கட சனம் கஷ்டப்படுதென்று அழூறியள். மற்றப்பக்கம் நாடு முழுக்க குண்டு வைப்பம் என்று வெருட்டுறியள். ஏதோ சரவணமுத்து மைதானத்தில, பிரேமதாசா மைதானத்தில, யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில, காலி,கண்டி மைதானங்களில ஏதோ கிரிக்கட் விளையாட ரெடி என்ற மாதிரி சிம்பிளா மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்குவோம் என்று எச்சரிக்க விடூறியள். ஏனென்டா அண்ணே கற்பு நிலையெண்ணு சொல்ல வந்தா இரு கட்சிக்கும் அதனை பொதுவில் வைப்போம் என்று பாரதி பாடியிருக்கிறான் அண்ணே. ஆனபடியா அண்ணே நீங்க நாடு முழுக்க உருவாக்கி வச்சிருக்கிற மனிதாபிமான பிரச்சின பற்றியும் பேச வேணும்.
ஏ9 பாதை கட்டாயம் திறக்க வேணும் அண்ணே. ஆனா இப்படியான பிரச்சினையள் கடல் போல விரிஞ்சு கிடக்கு. இந்தப் பிரச்சினையள கருத்துக்கு எடுத்துதான் அண்ணே திறக்க வேணும். இத நீங்க மறுக்கேலாதென்று நம்புறம் அண்ணே.
அடுத்த பிரச்சின ,நீங்க ஜெனீவாவுக்கு பொன் முட்டையிடும் வாத்து வாங்க போயிருந்தாலும் நீங்க தமிழாக்களிட பிரச்சினைக்கு என்ன தீர்வு வச்சிருக்கிறீங்க ,என்டும் கேட்டனீங்களாம் எண்டு ரேடியோவில கேட்டம். அதுக்கும் அரச தரப்பு பதில் சொல்லேல்ல, எண்டு குறைபட்டனீங்களாம். ஏன் அண்ணே தமிழரின்ர ஏகபிரதிநிதிகள் நீங்கள.; நீங்களெல்லோ என்ன தீர்வு வேணும் என்று சொல்லியிருக்கோணும். கடைக்குப் போறவன் தனக்கு என்ன சாமான் வேணும் என்று கடைக்காரனிடம் சொல்ல வேண்டும். என்ன சாமான் இருக்குதென்னு கேட்கக்கூடாது. நெருப்பாத்த நீந்தி கடந்த உங்களுக்கு நாங்க புத்தி சொல்லத் தேவையில்ல.
ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை எண்டு போய் இப்படி லூட்டி அடிச்சு, சிரிச்சு, சிவப்பு விளக்கு பகுதிக்கெல்லாம் போய் பிறகு மனம் சலிச்சு கோவிச்சுக்கொண்டு வரக்கூடாது. போனா எங்கட மக்கள், எங்கட மக்கள் என்று சொல்லுறீயளே அந்த அலுவல இதய சுத்தியோட பார்க்க வேணும். இல்லாம உங்கட பயங்கரவாத யந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்கு ஈழ மா சுடலையை உருவாக்குவதற்கு ஜெனீவாவில வழி கிடைக்குமா எண்டு பார்க்க கூடாது. ஜெனீவா ஒரு நல்ல இடம். அது மனித உரிமைகளை பற்றி பேசுற இடம். உலக மகா சபை ஐ. நா இருக்கிற இடம். அங்கே போகேக்க கோயிலுக்கு போற மாதிரி மனச்சுத்தத்தோட போக வேணும். கள்ளச்சாராய வியாபாரி தனது சாராய யாவாரம் கச்சிதமாக நடைபெற வேணும் என்று அழுக்கு மனத்துடன் கோயிலுக்குப்போற மாதிரி போகக்கூடாது.
நீங்க பேர்லின் சுவர் போல் யாழ் குடாநாட்டு மக்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள், எண்டு ஐரோப்பாக்காரருக்கு மனித அவலத்தை விளங்கப்படுத்த வெளிக்கிட்டனீங்க. நான் மரியாதையுடனும், பணிவுடன் கேட்கிறன், அண்ணே உங்களுக்கு பேர்லின் சுவரின்ர சரித்திரம் தெரியுமா எண்டு. ஹிட்லர் என்றொரு நாசகாரி இருந்து ஜேர்மனியிலயும் ,அயலட்டையில் உள்ள நாடுகளிலயும் உங்கட பாணியிலேயே பிரமாண்டமாக அக்கிறமம் செய்யேக்க நாலைஞ்சு நாடு சேர்ந்து அடிச்சுத்தான் அவரை கட்டுப்பாட்டுக்கே கொண்டு வரவேண்டியிருந்தது. அந்த காலத்தில வல்லரசுகளுக்குள்ள இரண்டு முகாம் இருந்தது. ஒன்று சோவியத் முகாம், மற்றது மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க முகாம். இந்த முகாம்கள் ஒருங்கிணைஞ்சுதான் ஹிட்லர் எண்ட மனிதகுல விரோதியின்ர அட்டகாசங்களை கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்தது. வௌ;வேறு நாடுகள் வௌ;வேறு பிரதேசங்களை பொறுப்பெடுத்துக் கொண்டன. இந்த சூழ்நிலையில்தான் பேர்லின் சுவர் எழும்பியது. கால ஓட்டத்தில் அது தேவையற்று இடிந்து விழுந்தது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினே.
ஆனா அண்ணே ,யாழ்பாணத்த உங்கட கையில வைச்சிருந்த காலத்தில இருந்து இப்ப உங்கட கொன்றோலுக்க வச்சிருக்கிற வன்னி மற்றும் உங்கட கட்டுப்பாட்டு பிரதேசங்களில இருகிற சனங்களெல்லாம் இரும்புதிரைக்கு பின்னால தானே வாழுதுகள். ஒரு குஞ்சு குருமான் பள்ளிக்குப் போகேலுமே, வீட்டில இருக்கேலுமே, ஒழுஙகேல போகேலுமே எல்லாரையும் கலைச்சு முனசிப்பாலிற்றி காரர் றோட்டில புடிச்ச நாய்மாதிரிதானே அண்ண றெயினிங்குக்கு கொண்டு போறனீங்கள். வன்னிபுனத்தில் அந்த பள்ளிக் கூடப் புள்ளையள் ஏனண்ண சாக வேண்டி வந்தது? நீங்க பள்ளிக்கூடம் போறதெண்டா றெயினிங்கெடுக்க வேண்டும் இல்லாட்டி பள்ளிககூடம் போகேலாது எண்டு உங்கட கல்வியமைச்சர் பேபி சுப்பிரமணிம் சட்டம் போட்டதால் தானே. உங்கட கட்டுபாட்டு பிரதேசங்களிலிருந்து இப்பவும் சரி ,அந்த காலத்திலும் சரி உங்கட கண்ணில எத்துப்படாம தப்பிப்போறதெண்டா பேர்ளின் சுவர் தாண்டிக்குதிக்கிறத விட ஆபத்தான வேல .இப்ப யாழ்ப்பாணம் பேர்ளின் சுவர் எண்டு நீஙக உளறிறது எனக்கு உண்மேல விளங்கேல்ல அண்ண. யாழ்ப்;பாணச் சனம் கஸ்டப்படூதெண்டா அண்ண நான் பணிவுடன் சொல்லிறன் நீங்களும் அதுக்கு பொறுப்பெண்டு.
நீங்க சொன்னீங்க சர்வதேச கண்காணிப்புடன் வடக்கு கிழக்கில் சர்வசன வாக்கெடுப்பு நடக்க வேணும் என்று. அண்ணே உங்கட பயங்கரவாதத்தின்ர பிடி வடக்கு- கிழக்கில இருக்கு மட்டுக்கும் சர்வதேச சமூகம் என்னெண்டண்ணே இந்த பணியை செய்ய முடியும்? நீங்க 2004ம் ஆண்டு தேர்தல்ல நடத்தின திருக்கூத்துக்கள், அட்டகாசங்கள் உலகத்துக்கு நல்லாத் தெரியும். 2005 ஜனாதிபதி தேர்தல்ல சனத்தை வெருட்டி வாக்களிக்காம பண்ணியதுக்கு உலகம் எந்தளவு விசனமடைந்தது என்று உங்களுக்கும் தெரியும். இப்ப நீங்க சொல்ற கதை அவைக்கு ஒரு உலக மகா பகிடியை விட்டிருப்பதாகத்தான் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மற்றது ஜனநாயகம் பற்றி நீங்கள் பேசியது அண்ணே, இலங்கை அரசாங்கத்தை விட நாங்க ஜனநாயத்தை கடைபிடிக்கிறதில பத்தரமாத்து தங்கங்கள் என்றமாதிரி பேசியிருக்கிறீங்க. 1983ம் ஆண்டு ஜனநாயக வழியில் தனிநாடு கோரியவர்களுக்கு ஆறாவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவந்து பிரிவினை கோரிக்கைக்கு தடை ஏற்படுத்தியதாக சிறீலங்கா அரசை குறைபட்டுக் கொண்டீர்கள். அண்ணே ஜனநாயக மீறலுக்கு இவ்வளவு பலவீனமான உதாரணமா உங்களுக்கு கிடைத்தது. மற்றவரின் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பதை விட்டு உங்கள் கண்ணில் இருக்கும் விட்டத்தை பாருங்களேன் அண்ணே. நீங்க மினி 1983 ஐ வடக்கு முஸ்லீம்களுக்கு எதிராக 1990 நடத்தினீர்கள் அண்ணே. வெலிக்கடை படுகொலைக்கு நிகரான கந்தன் கருணை படுகொலை, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, அனுராதபுர போதிமரத்தின் கீழ் படுகொலை என கிடுகிடுவென பாசிச பயங்கரவாதிகளாக மாறிக்கொண்டு உயாந்து கொண்டு போனீர்கள். வடக்கு -கிழக்கில் இருந்த அத்தனை அரசியல் இயக்கங்களையும் அழித்தொழித்து தடை செய்தீர்கள். இரத்த வாடை உங்களுக்கு பழக்கப்பட்டு விட்டதால் உங்கள் உணர்வுகள் மரத்துப் போய்விட்டதா அண்ணே.
நீங்க மனித உரிமைiயின் தலைமையிடத்தில் இருந்து பேசுகிறேன் என்னும் போது உங்களுக்கு கூச்ச நாச்சம் இருக்கவில்ல பாருங்க. வரலாற்றின் முரண் நகை என்னவென்றால் கொலைகாரர்கள,; நீங்கள் ஒட்டு மொத்தமாகவே ஒரு சமூகத்தை சூறையாடிவர்கள் நீங்கள் உங்களுக்கு பேசுவதற்கு கிடைத்த இடத்தைப் பாருங்கள். இதைத்தான் தமிழர்களின் தலைவிதி என்பதோ. பாரதி கேட்டது போல் விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் என எண்ணத் தோன்றுகிறது.
அண்ணே நீங்க இந்த 25 வருசத்தில மாற்று கட்சிகாரருக்கு அவங்களுக்கு ஆதரவளிச்ச ஆக்களுக்கு முஸ்லீம் சனத்துக்கு படிச்சவங்களுக்கு சாதாரண சிங்கள சனத்துக்கு, இந்தியாவுக்கு செய்த துரோகத்துக்கு, செய்த அநியாயங்களுக்கு அக்கிரமங்களுக்கு இன்னைக்கும் நீங்க போய் ஜெனீவாவில போய் பேசேக்க அவங்கள் சகிச்சுக்கொண்டிருக்கிறாங்களெண்டா அதில ஒரு தார்மீக நியாயம் இருக்கு. ஆனால் ஏதோவொரு வழியில் சமாதானம் வரும், நிரந்தர தீர்வு வரும் ,மனிதாபிமான மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படியேதும் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் கனவில் இருக்கும் போது நீங்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறியள். இது உங்கள் அனுபவத்திற்கும், முதிர்ச்சிக்கும் அழகல்ல.
உங்களது கால்நூற்றாண்டுகால நாசகார வேலைகளுக்கு எத்தனை சமூகங்கள், எத்தனை மனிதர்கள் உங்கள்ள கோபப்பட வேண்டும். எல்லோரும் எமது நாட்டில் அமைதி திரும்ப வேண்டும். எமது மக்கள் கௌரவமாக வாழ வேண்டும் என்று நினைத்துத்தான் உங்களால் ஏற்படுத்தப்படும் அசௌகரியங்களை எல்லாம் துன்ப துயரங்களை எல்லாம் சகித்துப் போகிறார்கள்.
கடைசியா ஒண்ணு சொல்ல வேணும் என்டு நினைக்கிறன். அண்ணே பலரை பலநாள் ஏமாத்தலாம். எல்லாரையும் எல்லா நாளும் ஏமாத்தேலாது. ஆனபடியா நீங்க செய்த அட்டூழியங்களை நிட்டூரங்களை ஒருமுறை ஆற அமர சிந்தியுங்கள். அழிவு முறையில் இல்லாமல் ஆக்கமுறையில் சிந்தியுங்கள். கடந்த கால்நூற்றாண்டில் எங்கட சனம் படாததெல்லாம் பட்டுட்டு அதுகளை காயடிச்சு விளையாடாதேங்க அதுகள் நிம்மதியா, கௌரவமா சுயமரியாதையோட ,சுதந்திரமா வாழுறதுக்கு ஏதும் செய்யேலுமென்டா செய்யுங்க. பட்டது போதும்.
அகதித்தமிழன்
நன்றி: தமிழ்நியூஸ்வெப